364.
இற்பரத்தை கூற்று
பாடியவர்: ஔவையார்.
திணை: மருதம்.
திணை: மருதம்.
கூற்று : வேறொரு
பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பக்
கூறியது.
கூற்று
விளக்கம்: இற்பரத்தை
என்பவள் ஒருவனுக்கே உரிமையுடைய பரத்தை. சேரிப்பரத்தை என்பவள் அத்தகைய வரையறை
இல்லாமல் பலரோடும் உறவுகொள்ளும் பொதுமகள். தலைவனுக்கு ஒரு இற்பரத்தை
இருந்தாள். அவளைப் பற்றிச் சேரிப்பரத்தை ஒருத்தி புறங்கூறியதாக
அவள் கேள்விப்பட்டாள். “மகளிர் துணங்கைக் கூத்தை ஆடும் நாளும்
வந்தது. அப்பொழுது, தலைவன் தானாகவே வந்து என்னிடம் அன்பு கொள்வதை அனைவரும் அறியலாம்” என்று தலைவனின் இற்பரத்தை , சேரிப்பரத்தையின் தோழியர்
காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.
அரிற்பவர்ப்
பிரம்பின் வரிப்புற நீர்நாய்
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.
வாளை நாளிரை பெறூஉம் ஊரன்
பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி
எற்புறங் கூறும் என்ப தெற்றென
வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர்
துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்
கண்பொர மற்றதன் கண்ணவர்
மணங்கொளற் கிவரும் மள்ளர் போரே.
கொண்டு கூட்டு: அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊரன் பொற்கோல் அவிர்தொடித் தற்கெழு தகுவி, எற்புறங் கூறும் என்ப! தெற்றென
வணங்கு இறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன. அவ்வரை, கண்பொர, மற்று அதன்கண் அவர் மணங்கொளற்கு மள்ளர் போர் இவரும்.
அருஞ்சொற்பொருள்: அரில் = பின்னல்; பவர் = கொடி; வாளை = வாளை மீன்; ஊரன்
= மருதநிலத் தலைவன்; கோல் = திரட்சி; அவிர் = ஒளி; தொடி = வளையல்; தகுவி =
தகுதி உடையவள்; தெற்றென = தெளிவாக; இறை = முன்கை;
பணை = மூங்கில்; எல்
= ஒளி; துணங்கை = முடக்கிய இருகைகளையும்
விலாப்புடைகளில் ஒற்றி அடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து; அவ்வரை = அ +வரை = அக்காலத்தில்
(அப்பொழுது); கண்பொர = ஒருவர்
கண்பார்வை மற்றொருவர் கண்பார்வையை எதிர்கொள்ளுதல்; இவர்தல்
= விரும்புதல்; மள்ளர் = வீரர்.
உரை: பின்னிக்
கிடக்கும் பிரப்பங்கொடியைப் போன்ற, கோடுகள் பொருந்திய
முதுகையுடைய நீர் நாயானது, வாளை மீனை நாள் தோறும் உணவாகப் பெறுகின்ற
ஊருக்குத் தலைவன் அவன். பொன்னாலாகிய திரண்டு விளங்குகின்ற
வளையல்களை அணிந்த, தன்னைத் தானே தகுதியுள்ளவள் என்று
சொல்லிக் கொள்ளும் சேரிப்பரத்தை, என்னைப் பற்றிப் புறங்கூறினாள்
என்று சொல்லுகின்றனர். அவள் கூறுவது உண்மையா பொய்யா என்பது
விளங்கும்படி, வளைந்த முன்கையையும்,
மூங்கிலைப் போன்ற தோள்களையும் உடைய , ஒளிபொருந்திய வளையல்களை
அணிந்த பெண்கள், துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன;
அப்பொழுது, ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்
மாறுபட்டு, அத்துணங்கைக் கூத்தில், அம் மகளிரைத் தழுவிக்கொள்ளும் பொருட்டு, வீரர்களின் விளையாட்டுப்
போரும் விருப்பத்தோடு நடைபெறும்.
சிறப்புக்
குறிப்பு:
விழாக்காலத்தில், மகளிர் துணங்கை கூத்து ஆடுவர். அவர்களோடு ஆடவரும் கலந்து
ஆடுவர். ஆடவர் தாம் யாரை விரும்புகிறார்களோ அவர்களோடு சேர்ந்து
ஆடுவர். ”இப்பொழுது விழாக்காலம் வந்தது. துணங்கைக் கூத்து நடைபெறப்போகிறது. அப்பொழுது தலைவனும்
வருவான். அவன் தானாகவே வந்து, என்னோடுதான்
சேர்ந்து ஆடுவான். அதைக் கண்டதும், அவன்
என்னை விரும்புவதை யாவரும் அறிந்துகொள்வர். ” என்று தலைவனின்
இற்பரத்தை கூறுகிறாள்.
No comments:
Post a Comment