Sunday, July 23, 2017

371. தலைவி கூற்று

371. தலைவி கூற்று
பாடியவர்: உறையூர் முதுகூற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப்  பிரிந்து சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் காலத்தில் உடல் மெலிந்து, பசலையுற்ற தலைவியை நோக்கி, “ நீ பொறுமையாக இருக்க வேண்டும்என்று கூறிய தோழிக்குத் தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கைவளை நெகிழ்தலும் மெய்பசப் பூர்தலும்
மைபடு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு
மருவேன் தோழியது காமமோ பெரிதே.

கொண்டு கூட்டு: தோழி! மைபடு சிலம்பின் ஐவனம் வித்திஅருவியின் விளைக்கும் நாடனொடுகைவளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் மருவேன். அது காமமோ பெரிது.

அருஞ்சொற்பொருள்: பசப்பு ஊர்தல் = உடல் முழுதும் நிறம் குன்றுதல்; மை = மேகம் (இங்கு, கருமேகத்தைக் குறிக்கிறது.); சிலம்பு = மலை; ஐவனம் = மலைநெல்; மருவுதல் = பெறுதல், அடைதல்.

உரை: தோழி! கரிய மேகங்கள் வந்து தங்கும் மலைப்பக்கத்தில், மலைநெல்லை விதைத்து, அருவியின் நீரால் அவற்றை விளைவிக்கின்ற நாட்டையுடைய தலைவனின் பிரிவால், என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்வதையும்,  உடம்பில் பசலை பரவுவதையும் அடையாமல் நான் பாதுகாத்துக்கொள்வேன். ஆயினும், அக்காமம் மிகவும் பெரிதாக உள்ளது.

சிறப்புக் குறிப்பு: தலைவன் வரும்வரை நீ பொறுத்திருக்க வேண்டும் என்று கூறிய தோழியை நோக்கித் தலைவி, “நான் பொறுத்துகொண்டு இருக்கத்தான் விரும்புகிறேன். இருந்தாலும், என் உடல் மெலிந்து பசலையுற்றது. இந்த வேறுபாடுகள் தலைவனின் பிரிவால் உண்டாகவில்லை. என் காமம் பெரிதாகையால் இவ்வேறுபாடுகள் நிகழ்ந்தனஎன்று கூறுகிறாள்.


மைபடு சிலம்புஎன்றது மேகங்கள் தாழ்ந்து மழை பெய்யும் மலை என்பதைக் குறிக்கிறது. மேகம் மழை பொழியும் என்பதை எதிர்பார்த்து ஐவனத்தை விதைத்தனர். அவர்கள் எதிர்பார்த்ததைப் போல் மழைபொழிந்து, அருவியில் நீர் பெருகி, ஐவனம் விளைந்தது. மேகம் மழை பொழியும் என்ற உறுதியைப் போல், பின்னர் நலம் விளையும் என்ற உறுதியால் தலைவியின் காமம் தோன்றியது என்பது குறிப்பு.

No comments:

Post a Comment