376.
தலைவன் கூற்று
பாடியவர்: படுமரத்து
மோசிக்கொற்றனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பொருள்
வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.
கூற்று
விளக்கம்:
பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரியக் கருதிய தலைவன், தலைவியின் நல்லியல்புகளை நினைத்துப் பிரிவதைத் தவிர்த்தான்.
மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியிற்
சூருடை அடுக்கத் தாரங் கடுப்ப
வேனி லானே தண்ணியள் பனியே
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே.
கொண்டு
கூட்டு:
மன்னுயிர்
அறியாத் துன்னரும் பொதியில் சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப, வேனிலானே
தண்ணியள். பனியே வாங்குகதிர்
தொகுப்ப, கூம்பி, ஐயென
அலங்குவெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்து அன்ன சிறு வெம்மையள்.
அலங்குவெயிற் பொதிந்த தாமரை உள்ளகத்து அன்ன சிறு வெம்மையள்.
அருஞ்சொற்பொருள்: துன்னரும் = நெருங்குதற்கரிய; சூர் = அச்சம்
தரும் தெய்வம்; அடுக்கம் = மலைச்சாரல்;
பொதி =பொதிய மலை; ஆரம்
= சந்தனம்; கடுப்ப = போல;
வேனிலானே = வேனிற்காலத்தில்; ஐ என = அழகாக; அலங்குதல்
= அசைதல்.
உரை: நிலைபெற்ற
உயிர்களால் முழுதும் அறிய முடியாத, நெருங்குவதற்கரிய
பொதிய மலையில், தெய்வங்களையுடைய பக்கத்தில் வளர்ந்த, சந்தனத்தைப் போல, வேனிற்காலத்தில், தலைவி குளிர்ச்சியை உடையவள்.
பனிக்காலத்தில், தலைவி, பகலில்
தான் பெற்ற கதிரவனின் கதிர்கள் தனக்குள் மறையுமாறு குவிந்து, அழகாக, அசைகின்ற வெயிலை, உள்ளே
வைத்துக் கொண்டிருக்கின்ற தாமரை மலரின் உள்ளிடத்தைப் போல், சிறிதளவு
வெப்பமுடையவள்.
சிறப்புக்
குறிப்பு:
கோடைக்காலத்தில்
குளிர்ச்சியாகவும்,
பனிக்காலத்தில் சிறிது வெப்பமாகமகவும் இருந்து, தலைவி எப்பொழுதும் தழுவுவதற்கு இனிமையானவளாகையால், தன்னால் அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்ல இயலாது என்று தலைவன் நினைக்கிறான்.
No comments:
Post a Comment