386.தலைவி கூற்று
பாடியவர்: வெள்ளிவீதியார்.
திணை: நெய்தல்.
கூற்று
:
பிரிவிடை
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிரழிந்து கூறியது. (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால்,
தலைவி வருந்துகிறாள். “முன்பெல்லாம் நீ மாலைக்காலத்தில்
இவ்வாறு வருந்தாமல் மகிழ்ச்சியோடு இருந்தாயே! இப்பொழுது என்ன
ஆயிற்று? தலைவன் விரைவில்
வந்துவிடுவான். நீ இவ்வாறு வருந்துவது சரியன்று” என்று தோழி கூறுகிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத் தலைவி, “மாலைக்காலம் இத்துணைத் துன்பத்தையும் தனிமையையும் தரும் என்பதைத் தலைவன் பிரிவதற்குமுன்
நான் அறிந்திலேன். ” என்று கூறுகிறாள்.
வெண்மணல் விரிந்த வீததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே
வாலிழை மகளிர் விழவணிக் கூட்டும்
மாலையோ அறிவேன் மன்னே மாலை
நிலம்பரந் தன்ன புன்கணொடு
புலம்புடைத் தாகுதல் அறியேன் யானே.
கொண்டு
கூட்டு:
வெண்மணல் விரிந்த வீ ததை கானல் தண் அம் துறைவன் தணவா ஊங்கு வாலிழை மகளிர் விழவுஅணிக் கூட்டும் மாலையோ அறிவேன்.
மன். மாலை,
நிலம் பரந்தன்ன புன்கணொடு, புலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.
நிலம் பரந்தன்ன புன்கணொடு, புலம்புடைத்து ஆகுதல் யான் அறியேன்.
அருஞ்சொற்பொருள்: வீ = மலரிதழ் (இங்கு, மலருக்கு ஆகுபெயராக
வந்தது.); ததை = பரவிய; கானல் = கடற்கரைச் சோலை; துறைவன்
= நெய்தல் நிலத்தலைவன்; தணத்தல் = பிரிதல்; ஊங்கு = முன்பு;
வால் = தூய்மை; புன்கண்
= துன்பம்; புலம்பு = தனிமை.
உரை: தோழி! வெண்மையான மணல் பரவிய, மலர்கள் செறிந்த சோலையையுடைய,
குளிர்ந்த கடற்றுறையையுடைய
தலைவன், என்னைப்
பிரிவதற்கு முன்பு, நான், தூய
அணிகலன்களை அணிந்த மகளிர், விழவுக்குரிய அலங்காரங்களைச் செய்துகொள்கின்ற மாலைக்காலத்தையே
அறிந்திருந்தேன். இப்பொழுது, அது
கழிந்தது! அம்மாலைக் காலம், நிலவுலகம் முழுதும் பரவியது போன்ற
பெரியதுன்பத்தோடு, வருத்தத்தைத் தரும் தனிமையை உடையது என்பதை
நான் அப்பொழுது அறியேன்.
No comments:
Post a Comment