394. தோழி கூற்று
பாடியவர்: குறியிறையார்.
திணை: குறிஞ்சி.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை
ஆற்றாளாகிய கிழத்தியை ஆற்றுவிக்கும் தோழி தலைமகனை இயற்பழித்துக் கூறியது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறுதல்)
கூற்று
விளக்கம்: திருமணத்திற்குப்
பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, “ தலைவன்
முன்பு மிகவும் இனியவனாக இருந்தான். இப்பொழுது நம்முடைய
துன்பத்துக்குக் காரணமானான்” என்று தலைவியிடம் தலைவனைப்
பழித்துக் கூறுகிறாள்.
முழந்தாள் இரும்பிடிக்
கயந்தலைக் குழவி
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்ந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.
நறவுமலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற
குறியிறைப் புதல்வரொடு மறுவந் தோடி
முன்னாள் இனிய தாகிப் பின்னாள்
அவர்தினை மேய்ந் தாங்குப்
பகையா கின்றவர் நகைவிளை யாட்டே.
கொண்டு கூட்டு: முழந்தாள்
இரும்பிடிக் கயந்தலைக் குழவி, நறவு மலி பாக்கத்துக் குறமகள்
ஈன்ற குறிஇறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி, முன்னாள் இனியதாகிப் பின்னாள் அவர்தினை
மேய்ந்தாங்குப் அவர் நகைவிளையாட்டு, பகையாகின்று.
அருஞ்சொற்பொருள்: முழந்தாள் = முழங்கால்; இரு = கரிய;
பிடி = பெண்யானை; கயம்
= மென்மை; குழவி = கன்று
(இங்கு, யனைக் கன்றைக் குறிக்கிறது.);
நறவு = கள்; மலிதல்
= மிகுதல்; பாக்கம் = மலைப்
பக்கத்து ஊர் (பொதுவாக, பாக்கம் என்ற
சொல் கடற்கரையில் உள்ள ஊரைக் குறிக்கும் சொல். ஆனால்,
இங்கு, பாக்கம் என்ற சொல் மலைப்பக்கத்து ஊரைக்
குறிக்கிறது); குறி இறை = சிறிய முன்கை;
மறுவரல் = சுழற்சி; மறுவந்து
= சுற்றி; நகை விளையாட்டு = கூடி ஆடி மகிழ்ந்தது.
உரை: முழங்காலையுடைய
கரிய பெண்யானையின் மென்மையான தலையையுடைய கன்று, கள் மிகுந்த
மலைப்பக்கத்து ஊரில், குறத்தி பெற்ற, குறுகிய
முன்கையையுடைய பிள்ளைகளோடு சுற்றி ஓடியாடி விளையாடி, முன்பு இனிதாக இருந்தது. பின்னர்,
அந்த யானை வளர்ந்த பிறகு, அவர்களுடைய தினையை
மேய்ந்தாற் போல, முன்பு தலைவர் நம்மோடு கூடி ஆடி மகிழ்ந்தது
இப்போது பகையாக மாறிவிட்டது.
No comments:
Post a Comment