401. தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : வேறுபாடு
கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள் தன்னுள்ளே சொல்லியது.
கூற்று
விளக்கம்: ஒருநாள்
தலைவி தலைவனோடு கூடி மகிழ்ந்தாள். அதன் பின்னர் சிலநாட்கள்
தலைவனைக் காணவில்லை. தலைவனைக் காணாததால், தலைவியின் உடலில் மாற்றங்கள் தோன்றின. தலைவியின் உடலில் தோன்றிய
மாற்றங்களைக் கண்ட தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைத்தாள். காவலில் வைக்கப்பட்ட தலைவி, தான் இனித் தலைவனை
சந்திக்க முடியாத சூழ்நிலை உருவாகியதை நினைத்து வருந்துகிறாள்.
அடும்பி
னாய்மலர் விரைஇ நெய்தல்
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே.
நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்
ஓரை மகளி ரஞ்சியீர் ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே.
கொண்டு
கூட்டு:
அடும்பின்
ஆய்மலர் விரைஇ, நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த, நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு, கடலிற் பரிக்குந் துறைவனொடு,
மெய்தோய் நட்பு ஒருநாள் நக்கு
விளையாடலும், கடிந்தன்று. ஐதேகம்ம!
அருஞ்சொற்பொருள்: அடும்பு = கடற்கரையில் வளரும் ஒருவகைக் கொடி; ஆய் = அழகு; விரைஇ = கலந்து; தொடை = மாலை; ஓரை = மகளிர் விளையாட்டு; ஞெண்டு = நண்டு;
பரிதல் = ஓடுதல்; நக்கு = நகைத்து;
கடிந்தன்று = கடிந்தது = நீக்கியது; ஐதேகம்ம = ஐது+ஏகு+அம்ம; ஐது = வியப்புடையது; ஏகு - அசைநிலை;
அம்ம – வியப்பைக் குறிக்கும் இடைச்சொல்;
மெய்தோய் நட்பு = உடலுடன் கூடிய நட்பு.
உரை: அடும்பினது
அழகிய மலரைக் கலந்து தொடுத்த நெய்தல் மலர் மாலையை அணிந்த, நீர் ஒழுகும் கூந்தலையுடைய,
ஓரை விளையாட்டு விளையாடும்
மகளிரை அஞ்சி, ஈரத்தையுடைய நண்டு, கடலுக்குள்
ஓடும் துறையையுடைய தலைவனோடு, அவனுடைய உடலைத் தொட்டுக் கூடி,
நான் செய்த நட்பு, இனிமேல் ஒருநாள்கூட அவனோடு சிரித்து விளையாட
முடியாமல் தடுத்தது. இது வியத்தற்குரியது!