அமெரிக்காவில் திருக்குறள் ஆவணப்பட வெளியீட்டு விழா
திருக்குறள்
பற்றிய ஆவணப்படம் முதல் முறையாக ஆங்கிலம், இந்தி, பிரஞ்சு, ஜப்பானியம் ஆகிய
மொழிகளில் தயாராகியுள்ளது. சீனம், ஜெர்மன், ஸ்பேனிஷ், தமிழ் ஆகிய
மொழிகளிலும் இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இதன் ஆங்கில வடிவம் நவம்பர் 16 ஆம்
நாள் வாசிங்டன் அருகே உள்ள
வெர்ஜீனியாவில் உள்ள ஸ்டர்லிங் என்ற இடத்தில் திரையிடப்பட்டது. இதற்குத்
திரைக்கதை எழுதியுள்ள டாக்டர் ஆர். பிரபாகரன் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில்
இப்பட்டதைத் தயாரித்துள்ளார். இவர் திருக்குறள் மாநாட்டை அமெரிக்காவில்
நடத்தியவர்; திருக்குறள் தொடர்பான பல நூல்களை எழுதியவர்.
திருக்குறளின்
மேன்மையைப் பிற நாட்டவர்களுடன் இன்றைய இளம் தலைமுறைத் தமிழர்களும் அறிந்துகொள்ளும்
வண்ணம் இப்படம் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. வள்ளுவர் பேணிய மனித சமத்துவம்
இப்படத்தின் கருப்பொருளாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில்
சென்னையின் மாவட்ட ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்ற ஆங்கிலேயர் அச்சடித்த வள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயம்,
வீரமாமுனிவர் லத்தீனில் மொழிபெயர்த்த கையெழுத்துப் படிகள், குறள்கள் பொறிக்கப்பட்ட
ஓலைச்சுவடிகள், உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள வள்ளுவர் சிலைகள், மெய்நிகர்
படப்பிடிப்புகள், முப்பாலையும் அழகுற முன்நிறுத்தும் காட்சிகள் முதலியன இடம்
பெற்றுள்ளன.
ராகுல்,
ராஜீவ் ஆனந்த், ஹன்சிகா, சுபா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஒருங்கிணைப்பாளராக டாக்டர் இ.ஜே.சுந்தர் பணியாற்றியதுடன் சில
காட்சிகளிலும் நடித்துள்ளார். ‘தமிழ் இருக்கை’ என்ற அறக்கட்டளையின் ஆதரவில்
வெளிவரும் இப்படத்தி்ற்கு அக்கட்டளையின் தலைவர் டாக்டர் ஜானகிராமன் உறுதுணையாக
உள்ளார்.
தேசிய
விருதுபெற்ற இயக்குநர் திரு. அம்ஷன் குமார் படத்தைச் சிறப்பாக இயக்கியுள்ளார்.
தமிழக
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படத்திற்கு பாராட்டும் வாழ்த்தும்
தெரிவித்துள்ளார். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நடத்திய இவ்வெளியீட்டு
விழாவில் டாக்டர் பிரபாகரன், திரு அம்ஷன் குமார், டாக்டர் இ.ஜே.சுந்தர் ஆகியோர்
சிறப்பிக்கப்பட்டு உரையாற்றினர்.
வாசிங்டன்
வட்டாரத் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த இவ்விழாவில் வர்ஜீனியா மாநில
செனட்டர் திரு கண்ணன் சீனிவாசன் அவர்கள் இப்படத்தை வெளியிட்டுப் பாராட்டுரை
வழங்கினார்.
இப்படத்தை https://youtu.be/brVgR-_JDoc
என்ற இணைப்பில் யாரும் காணலாம்.
No comments:
Post a Comment