Tuesday, April 14, 2015

பாடல் - 2

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: இறையனார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: ஒரு ஆண்மகன் (தலைவன்) தற்செயலாக ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். அவனும் அவளும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஒருநாள், அவளோடு இருக்கும்பொழுது, அவள் கூந்தலில் உள்ள நறுமணம் அவனை மிகவும் கவர்கிறது.  தன் காதலியின் கூந்தலைப்போல் நறுமணமுள்ள பூக்களும் உளவோ என்று அவனுக்கு ஐயம் எழுகிறது. அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு, சில வண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒரு வண்டைப் பார்த்து, “வண்டே! என் காதலியின் கூந்தலில் உள்ளதைப்போல் நறுமணம் உள்ள பூக்களும் உளவோ?” என்று அவன் கேட்கிறான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 

அருஞ்சொற்பொருள்: கொங்கு = பூந்தாது, தேன்; தேர்தல் = அறிதல், ஆராய்தல்; அம் = அழகு; சிறை = இறகு; தும்பி = வண்டு; காமம் = விருப்பம்; கண்டது = கண்டு அறிந்தது; பயிலல் = பழகல்; கெழீஇய = பொருந்திய (நெருங்கிய); இயல் = சாயல்; செறி = நெருக்கம்; எயிறு = பல்; அரிவை = இளம்பெண்; நறிய = நறுமணமுடைய.

உரை: பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே! நான் கேட்க விரும்பியதைக் கூறாமல், நீ கண்டு அறிந்ததையே சொல்வாயாக! நீ அறியும் மலர்களுள், என்னோடு பழகியதால் நெருங்கிய நட்பையும், மயில் போன்ற சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய, இந்த இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமுடைய மலர்களும் உளவோ?
விளக்கம்: இப்பாடலில் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாகிய வண்டும், உரிப்பொருளாகிய புணர்ச்சியும் (ஆண் பெண் சேர்க்கையும்குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்பாடலைச் சிவபெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தருமி அதைச் சண்பக பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் அவையில் பாடிப் பரிசுபெற முயன்றதாகவும், நக்கீரர் இப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாகக் கூறியதாகவும் (அதாவது,பெண்களின் கூந்தலில் இயற்கையான மணமில்லை என்று கூறியதாகவும்சிவபெருமான் சினந்து, தன் நெற்றிக்கண்ணைக் காட்டியதாகவும், நக்கீரர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறியதாகவும், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த வெப்பம் தாங்க முடியாமல் நக்கீரரின் உடலெல்லாம் புண் ஆனதாகவும், பின்னர் சிவபெருமான் நக்கீரரை மன்னித்ததாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.



No comments:

Post a Comment