Monday, August 3, 2015

63. பாலை - தலைவன் கூற்று

63. பாலை - தலைவன் கூற்று

பாடியவர்:  உகாய்க்குடி கிழார். இவர் உகாய்க்குடி என்னும் ஊரில் பிறந்தவர். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: பொருள் தேடவேண்டியதின் இன்றையமையாமையைப் பற்றித் தலைவன் எண்ணிப் பார்க்கிறான். பொருள் தேட வேண்டுமானல், வெளியூருக்குச் செல்ல வேண்டும். அவ்வாறு சென்றால், தன் மனைவி தன்னுடன் வருவாளோ அல்லது தான் மட்டுயும் தனியே செல்ல வெண்டுமோ என்று தலைவன் சிந்திப்பதை இப்பாடல் சித்திரிக்கிறது.

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: ஈதல் = கொடுத்தல் ; துய்த்தல் = அனுபவித்தல்; கைம்மிகுதல் = அளவு கடத்தல்; எண்ணுதி = எண்ணுகிறாய்; அம்மா = +மா; = அழகிய; மா = மாமை நிறம்; அரிவை = பெண் (தலைவி); உய்த்தல் = செலுத்தல்; உரைத்திசின் = சொல்லுவாயாக. இசின்முன்னிலை அசைச் சொல்.

உரை: நெஞ்சே, இரவலர்க்குக் கொடுப்பதும், இன்பங்களை அனுபவிப்பதும், பொருளில்லாத வறியவர்க்கு இல்லையென்று கருதி, பொருள் செய்வதற்குரிய செயல்களை, அளவுகடந்து எண்ணுகிறாய். பொருள் செய்வதற்குத் துணையாக, அழகிய மாமை நிறத்தையுடைய என்னுடைய மனைவியும் என்னுடன் வருவாளா? அல்லது என்னை மட்டும் போகச் சொல்லுகிறாயோ? சொல்லுவாயாக.
    
விளக்கம்:    “'நெஞ்சே, நீ பொருள் தேடுவதற்காக வேற்றுநாட்டுக்குப் போக விரும்புகிறாய்அங்கே தலைவி வருவாளோ? அவள் வராவிட்டால் நான் மட்டும் போகவேண்டும்; இவளைப் பிரிந்து செல்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே.” என்று தலைவன் கூறுவது செல்லாமல் இருப்பதற்காக அன்று. போவதற்குமுன் தலைவிக்குத் தன் அன்பை வெளிப்படுத்தி ஆறுதல் கூறுவதற்காகத் தலைவன் தான் பிரிந்து செல்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். பிரிவின் பொழுது இவ்வாறு காலம் தாழ்த்துவதை, தொல்காப்பியம் செலவழுங்குதல்என்று குறிப்பிடுகிறது. இவ்வாறு காலம் தாழ்த்தி, ஆறுதல் கூறிப் பிரிந்து செல்வது நெடுங்காலமாகவே வழக்கிலிருந்தது என்பது தொல்காப்பியத்திலிருந்து தெரியவருகிறது.

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே,
 வன்புறை குறித்த தவிர்ச்சி யாகும்"                                  (தொல். கற்பியல். 44)

பொருள்: பிரிந்து செல்லுதற்கிடையே சிலநாள் அதைத்தவிர்த்து இருத்தல், செல்லாமல் இல்லத்திலேயே இருப்பதற்கு அன்று. அது, பிரிவின் இன்றியமையாமையையும், தான் விரைவில் திரும்பி வருவதையும் எடுத்துரைத்துத் தலைவன் தலைவிக்கு ஆறுதல் கூறுவதைக் குறித்த தவிர்ச்சி ஆகும். மற்றும்,

புலவர் உகாய்க்குடி கிழார் இப்பாடலில் ஈதலை முன்வைத்துத் துய்த்தலைப் பின்வைத்தது ஈதலின் சிறப்பைக் குறிப்பிடுகிறது.

            ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
            ஊதியம் இல்லை உயிர்க்கு.                                                            (குறள் – 231)

என்ற குறள்  இங்கு நினைவு கூரத்தக்கது

No comments:

Post a Comment