Monday, August 3, 2015

64. முல்லை - தலைவி கூற்று

64. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: கருவூர்க் கதப்பிள்ளை.  இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (64, 265, 380). புறநானூற்றில் ஒரு பாடலும் (380) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தலைவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். “உன் வருத்தம் உன் கணவருக்குத் தெரியும். அவர் விரைவில் வந்துவிடுவார்.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்கு மறுமொழியாக, “ என் வருத்தம் தெரிந்தும் அவர் இன்னும் வரவில்லையே.” என்று  தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அணவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே. 

அருஞ்சொற்பொருள்: பல்லா = பல் + = பல பசுக்கள்; நெறி = வழி; புன்மை = பொலிவழிந்த நிலை; தலை = இடம்; மன்றம் = பசுக்கள் தங்கியிருக்கும் இடம் (பசுவின் தொழுவம்); மடம் = மடப்பம், அறியாமை; குழவி = கன்று; அணவாதல் = தலையெடுத்துப் பார்த்தல்; நோயேம் = வருத்தம் உடையேம்;  சேயர் = வெகு தூரத்தில் உள்ளவர்; சேய்மை = தூரம்.

உரை: தோழி,  பல பசுக்கள், நெடுந்தூரம் நீங்கிச் சென்றதால், அவை தங்கியிருக்கும் பொலிவிழந்த இடத்தையுடைய மன்றத்தைப் பார்த்து, மாலைநேரத்தில், மடமை பொருந்திய கண்களையுடைய கன்றுகள் தலையெடுத்துப் பார்த்து வருந்துவதைப்போல் அவர் வரவை எதிர்பார்த்து நான் வருந்துவேன் என்பதை அறிந்திருந்தும், நெடுந்தூரத்திலுள்ள நாட்டுக்குச் சென்ற என் தலைவர், இன்னும் நெடுந்தூரத்திலேயே உள்ளாரே.

விளக்கம்: புன்றலை என்றது பசுக்கள் இல்லாததால் அவை தங்கியிருக்கும் இடம் பொலிவிழந்து காணப்படுவதைக் குறிக்கிறது.  தலைவன் இல்லாததால் தன் இல்லமும் பொலிவிழந்து காணப்படுவதாகத் தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது. மேயச் சென்ற பசுக்கள் மாலைநேரத்தில் திரும்பி வந்து தொழுவத்தில் புகுவது வழக்கம். பிரிந்து சென்ற பசுக்கள் மாலைநேரத்தில் திரும்பி வருவதை அவற்றின் கன்றுகள் எதிர்நோக்கி நிற்பதைப்போலப் பிரிந்து சென்ற தலைவனுடைய வரவை உரிய பருவத்தில் எதிர்நோக்கியிருக்கிறேன் என்று தலைவி கூறுகிறாள்.    


 ”தாய்ப் பசுவிற்கும் கன்றுக்கும் உள்ள அன்பு மிகச் சிறந்ததாதலின் அது தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள அன்புக்கு உவமை கூறப்படுவதோடு, தலைவன் தலைவியருக்கு இடையிலுள்ள அன்பு, இறைவன் அடியார்க்கு இடையிலுள்ள அன்பு முதலியவற்றிற்கும் உவமையாகக் கூறப்படுதல் மரபு.” என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment