Tuesday, November 17, 2015

105. தலைவி கூற்று

105.  தலைவி கூற்று 

பாடியவர்: நக்கீரர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
 கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த விடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். அவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்திருப்பதாகத் தலைவி எண்ணினாள். ஆனால், நெடுங்காலமாகியும் தலைவன் திருமணத்திற்கான முயற்சிகளைச் செய்யவில்லை. அவனோடு தான் நட்பு கொண்டது தவறோ என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். ”தலைவனோடு எனக்குள்ள நட்பு நினைவளவிலே நின்று என்னைத் துன்புறுத்துகிறது.” என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை ஆடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.
.
கொண்டு கூட்டு: புனவன் துடவைப் பொன்போற் சிறுதினைக் கடி உண் கடவுட்கு இட்ட செழுங்குரலை அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பு ஆகின்று.

அருஞ்சொற்பொருள்: புனவன் = குறிஞ்சிநிலத்தைச் சார்ந்தவன் (குறவன்); துடவை = தோட்டம் ; கடி = புதியது; குரல் = தானியங்களின் கதிர்; மஞ்ஞை = மயில்; ஆடுமகள் = வெறியாட்டம் ஆடும் பெண் (தேவராட்டி); வனப்பு = அழகு ; வெய்து உற்று = வெம்மையுற்று; சூர் = அச்சம் தரும் தெய்வம்; மலிதல் = மிகுதல்; கேண்மை = நட்பு, உறவு.

உரை: குறவனுடைய தோட்டத்தில் விளைந்த, பொன்னைப் போன்ற சிறு தினையின் வளமான கதிர், புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் படைப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. அதைத் தெரியாமல் உண்ட மயில், தன் தவற்றை உணர்ந்தவுடன்வெறியாட்டம் ஆடும் பெண் அழகாக ஆடுவதைப்போல் ஆடி  வெப்பமுற்று நடுங்கும். அத்தகைய அச்சம்தரும் தெய்வம்  வாழும் மலை நாடனோடு நான் கொண்ட நட்பு, எனக்கு நீர் நிறைந்த கண்களோடு அதை நினைத்து நான் துன்புறுவதற்குக் காரணமாகியது.


சிறப்புக் குறிப்பு:    குறிஞ்சி நிலத்தில் உள்ளவர்கள், விதைத்த தினையிலிருந்து தோன்றிய முதற் கதிரைத் தெய்வத்துக்குப் படைப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறதுதெய்வத்துக்கிட்ட பலியை இனியது என்று கருதி, அறியாது உண்ட மயில் பின்பு நடுங்கியது என்றது, தன் தகுதிக்கு மேற்பட்டவனின் நட்பை இனியது என்று எண்ணி, அறியாமல் அவனைக் காதலித்ததால் தலைவி நடுக்கமுற்றாள் என்பதைக் குறிக்கிறது.  தலைவிக்குத்   தலைவனோடு கூடிய நட்பு, அவளுக்குக் கண்ணீர் பெருகச் செய்யும் துன்பத்தைத் தந்து, நினைவளவிலே நின்றதேயன்றி இன்பத்தைத் தந்து, திருமணம் நடைபெறும் அளவுக்கு முற்றவில்லை என்பது தலைவியின் கருத்தாகத் தோன்றுகிறது

No comments:

Post a Comment