Tuesday, November 17, 2015

106. தலைவி கூற்று

106.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
 கூற்று: தலைமகள் தூதுகண்டு கிழத்தி தோழிக்குக் கூறியது.
கூற்று விளக்கம்: பரத்தையை விரும்பித் தலைவியைப் பிரிந்து வாழும் தலைவன் தன் குற்றத்தை உணர்ந்தான். அவன் மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். அவளிடம் தனக்குள்ள உண்மையான அன்பைக் கூறி, அவளோடு மீண்டும் வாழ்வதற்கு அவள் சம்மதத்தைப் பெற்றுவருமாறு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் சொல்லியவற்றைக் கேட்ட தலைவி, ”என் கணவன் அவனுடைய குற்றத்தை உனர்ந்துவிட்டான். என் மீது உண்மையான அன்புடையவனாக இருக்கிறான்.” என்று நினைக்கிறாள். ”திருமணம் ஆனபொழுது நான் எப்படி என் கணவரோடு அன்பாக இருந்தேனோ, அப்படியேதான் இன்னும் இருக்கிறேன்.” என்று தூதுவனிடம் சொல்லப் போவதாகத் தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.  

புல்வீழ் இற்றிக் கல்லிவர் வெள்வேர்
வரையிழி அருவியின் தோன்றும் நாடன்
தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று வாழி தோழி நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு
தான்மணந் தனையமென விடுகந் தூதே. 

கொண்டு கூட்டு: தோழி ! வாழி ! புல்வீழ் இற்றிக் கல்  இவர் வெள்வேர் வரையிழி அருவியின் தோன்றும் நாடன் தீதில் நெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று. நாமும்
நெய்பெய் தீயின் எதிர்கொண்டு தான் மணந்த அனையம் என தூது விடுகம். 

அருஞ்சொற்பொருள்: புல் = புல்லிய (சிறிய); வீழ் = விழுது; இற்றி = ஒரு வகை மரம் ; கல் = மலை; இவர் = படர்கின்ற; வரை = மலை; இழிதல் = இறங்குதல்; கிளவி = சொல்; வயின் = இடம்.

உரை: தோழி, சிறிய விழுதையுடைய இற்றிமரத்தின், மலையில் படர்கின்ற வெண்மையான வேர், மலைப்பக்கத்தில் விழுகின்ற அருவியைப்போலத் தோன்றும் நாட்டையுடைய தலைவன், தன் குற்றமற்ற நெஞ்சில் நினைத்துக் கூறிய சொற்களை உரைக்கும் தூதுவன், நம்மிடத்து வந்துள்ளான்.  நாமும், நெய்யைப் பெய்த தீயைப்போல, அந்தத் தூதுவன் சொன்னதை ஏற்றுக்கொண்டு, ”அவர் என்னை மணந்த காலத்தில் இருந்த அன்புடைய நிலையிலேதான் இன்னும் உள்ளேன் என்று கூறித் தூதுவிடுவோம்.

சிறப்புக் குறிப்பு: இற்றியின் விழுது அருவி போலத் தோன்றுவதைப் போல், பரத்தையர் தன்மீது காட்டும் அன்பை உண்மையான அன்பு என்று எண்ணித் தலைவன் மயங்கினான் எனபது குறிப்பு. நெய்யை ஏற்றுக்கொண்டு, தீ நன்கு எரிவதுபோல், தானும் தலைவனை ஏற்றுக்கொண்டு, இன்பமாக வாழலாம் என்று தலைவி எண்ணுவதாகத் தோன்றுகிறது. தீயில் இட்ட நெய், தீயிலிருந்து வெளிப்படாதது போல், தலைவனை ஏற்றுக்கொண்டு, இனி அவன் தன்னைவிட்டுப் பிரியாது வாழலாம் என்றும் தலைவி எண்ணுவதாகக் கருதலாம்.


No comments:

Post a Comment