119.
தலைவன் கூற்று
பாடியவர்: சத்திநாதனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில்
காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இயற்கைப்
புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன்
ஓரிளம் பெண்ணைக் கண்டான்.
அவள் மீது காதல் கொண்டான். அவள்மீது அவன் கொண்ட
காதலால், அவனுடைய தோற்றத்திலும் செயல்களிலும் காணப்பட்ட வேறுபாடுகளைத்
தலைவனின் தோழன் கண்டான். “உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வாறு தோற்றம் அளிக்கிறாய்?” என்று கேட்ட தோழனுக்குத்
தலைவன் மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே.
கொண்டுகூட்டு: இளையள், முளைவாள் எயிற்றள், வளையுடைக் கையள் சிறு வெள்
அரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கியாங்கு எம் அணங்கியோளே.
அருஞ்சொற்பொருள்: அரவு = பாம்பு; அவ்வரி = அ+வரி; அ = அழகிய; வரி = கோடு; குருளை = குட்டி; கானம் = காடு; அணங்குதல் = வருத்துதல்; முளை
= மூங்கிலின் முளை; வாள் = ஒளி; எயிறு = பல்.
உரை: இளமையை
உடையவளும்,
மூங்கில் முளையைப் போன்ற
ஒளிபொருந்திய பற்களை உடையவளும், வளையல்களை அணிந்த கைகளை உடையவளுமாகிய
ஒருத்தி, சிறிய
வெள்ளிய பாம்பின், அழகிய கோடுகளையுடைய குட்டியானது, காட்டுயானையை வருத்தியதைப் போல, என்னை வருத்தினாள்.
சிறப்புக்
குறிப்பு:
தோற்றத்தால்
அழகிய வரிகளை கொண்டதாக இருந்தாலும், பாம்புக் குட்டி தன்
செயலால் கொடியது என்பது குறிப்பு.
”இளைய பாம்புக்குட்டி, பிறருக்கு
அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை
உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள்.” என்று தலைவன்
கூறுவதாகத் தோன்றுகிறது. பாம்பின் இளமை தலைவியின் இளமைக்கும்,
அதன் அழகிய வரிகள், தலைவியின் வளையல்களுக்கும்
உவமைகள். பாம்பின் குட்டி தன் பற்களால் யானையை வருத்தியது போல்
தலைவி தன் முறுவலால் (புன்சிரிப்பால்) தன்னை வருத்தியதாகத் தலைவன் கூறுவதாகத்
தோன்றுகிறது.
முதன்முதலில் அவளைக் கண்டவுடன் அவள்
இளையவள் என்பதையும், அவள் சிரிப்பால் அவள் அவனை விரும்புவதை உணர்த்தியபொழுது
அவளுடைய ஒளிபொருந்திய பற்களையும், அவள் அருகில் வந்தவுடன் அவள்
வளையல்களையும் கண்டதை முறையே தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment