120.
தலைவன் கூற்று
பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: அல்லகுறிப்பட்டு
மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கூற்று - 2: இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிந்த
வழிக் கலங்கியதுமாம்.
கூற்று
விளக்கம் :
தலைவனும்
தலைவியும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் சந்திப்பது வழக்கம். தலைவன் வந்தவுடன், ஒரு ஒலி எழுப்புவான். அதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, அவன் வந்துவிட்டான்
என்பதை அறிந்து அவன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனோடு பழகுவாள். ஒருநாள், தலைவன் வருவதற்கு முன்னரே தலைவி குறிப்பிட்ட
இடத்திற்கு வந்தாள். அங்கு சில ஒலிகள் கேட்டன. அவற்றைத் தலைவன் வழக்கமாக எழுப்பும் ஒலி என்று தலைவி தவறாக எண்ணி ஏமாந்தாள்.
அதனால், தலைவனைச் சந்திக்காமலேயே அவள் வீடு திரும்பினாள். அவர்கள் சந்திக்கும் இடத்திற்குத்
தலைவன் வந்தான். அவன் வழக்கமாக எழுப்பும் ஒலிகளை எழுப்பினான்.
ஆனால், தலைவி அவனைக் காண வரவில்லை. தலைவியைக் காணததால், ஏமாற்றம் அடைந்த தலைவன்,
அவள் அடைதற்கு அரியவள் என்று தன் நெஞ்சுக்குக் கூறியதாக இப்பாடலின் சூழ்நிலையை
எண்ணிப் பார்க்கலம்.
இப்பாடலின்
பின்னணியை மற்றொரு விதமாகவும் எண்ணிப் பார்க்கலாம். அதாவது,
தலைவியைச் சந்த்தித்த பிறகு, வீடு திரும்பும் தலைவன்,
அவளைப் பிரிந்ததால் வருந்தி, ”இனி இவளைக் காண்பது எங்ஙனம்!”
என்று மயங்கி, “இதுவரையிலும் நம்மோடு இனிமையாகப்
பழகியவள் இனி அடைவதற்கு அரியவள்!” என்று தன் நெஞ்சை நோக்கிக்
கூறியதாகவும் கருதலாம்.
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே.
கொண்டுகூட்டு: நெஞ்சே! இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு அரிது வேட் டனை; காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே.
அருஞ்சொற்பொருள்: இல்லோன் = வறியவன்; காமுறுதல் = விரும்புதல்;
வேட்டுதல் = விரும்புதல்; நல்லள் = நல்லவள் (நன்மை தருபவள்);
அரியள் = அரியவள்.
உரை: நெஞ்சே, பொருளில்லாத வறியவன் இன்பத்தை விரும்பியதுபோல, பெறுதற்கரியதை
நீ விரும்பினாய். நம் தலைவி, நமக்கு
நன்மை தருபவளாதலை அறிந்ததுபோல, அவள் பெறுதற்கு அரியவள் என்பதை
நீ அறியவில்லை.
No comments:
Post a Comment