124.
தோழி கூற்று
பாடியவர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: புணர்ந்துடன்
போக்கினைத் தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலையில் இருக்கிறான். தலைவியையும் உடனழைத்துச் செல்லுமாறு தோழி கூறுகிறாள். “நான் செல்லும் வழி கொடுமையானது.”, என்று கூறித் தலைவியை
அழைத்துப் போகத் தலைவன் தயங்குகிறான். அதைக் கேட்ட தோழி,
“ உன்னைவிட்டுப் பிரிந்திருந்தால் தலைவிக்கு வீடு இனிமையானதாகுமோ?”
என்று தோழி கேட்கிறாள்.
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.
கொண்டு
கூட்டு:
பெரும! உமணர் சேர்ந்து கழிந்து மருங்கின் அகன்றலை ஊர்
பாழ்த்தன்ன, ஓமையம் பெருங்காடு இன்னா
என்றிராயின், தமியோர்க்கு மனை இனியவோ?
அருஞ்சொற்பொருள்: உமணர் = உப்பு வணிகர்; கழிதல்
= போதல் ; மருங்கு = பக்கம்;
அகன்தலை = அகன்ற இடம்; பாழ்த்தன்ன
= பாழானது போல் ; ஓமை = ஒரு வகை மரம்; இன்னா = கொடிய; தமியர்
= தனிமையில் இருப்பவர்கள்.
உரை: தலைவ! உப்பு வணிகர்களான உமணர்கள் கூட்டமாகத் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து அகன்று சென்ற அகன்ற இடம் பாழான ஊர்போல் தோன்றும்.
அதுபோல் தோற்றமளிக்கும் ஓமை
மரங்கள் நிறைந்த பெரிய காடுகள் உள்ளன. அந்த வழி மிகவும் கொடுமையானது
என்று நீங்கள் கூறுகின்றீர் எனில், உங்களைவிட்டு வீட்டில் தனியாக
இருந்தால், தலைவிக்கு வீடு இனிமையானதாக இருக்குமோ?
No comments:
Post a Comment