125.
தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு
நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சிறைப்புறமாகச் சொல்லியது.
கூற்று
விளக்கம்:
தலைவியும்
தலைவனும் தங்கள் காதலைக் களவொழுக்கத்தில் தொடர்ந்து வருகிறார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல் காலம் தாழ்த்துகிறான்.
அதனால் தலைவி வருத்தமுற்றாள். ஒருநாள்,
தலைவன் தலைவியைக் காண வந்து, மறைவான ஓரிடத்தில்
இருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தலைவி, தோழியை நோக்கி, “தலைவன் என் பெண்மை நலத்தை எடுத்துக்கொண்டான்.
ஆனால், நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”
என்று கூறித் தலைவன் தன்னை விரைவில் மணந்துகொள்ளாவிடில் தான் இறந்துவிடுவேன்
என்பதைத் தலைவனுக்குக் குறிப்பால் தெரிவிக்கிறாள்.
இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே.
கொண்டு
கூட்டு:
தோழி! வாழி! இலங்குவளை நெகிழச் சாஅயானே உளென். சாரல்
தழையணி அல்குல் மகளிருள்ளும், விழவுமேம் பட்ட என் நலன், பழவிறல் பறைவலம் தப்பிய பைதல் நாரை, திரைதோய் வாங்குசினை இருக்கும் தண்ணந் துறைவனொடு கண் மாறின்று.
தழையணி அல்குல் மகளிருள்ளும், விழவுமேம் பட்ட என் நலன், பழவிறல் பறைவலம் தப்பிய பைதல் நாரை, திரைதோய் வாங்குசினை இருக்கும் தண்ணந் துறைவனொடு கண் மாறின்று.
அருஞ்சொற்பொருள்: இலங்குதல் = விளங்குதல்; சாஅய் = மெலிந்து;
சாரல் = மலைப்பக்கம்; அல்குல்
= இடை (அடி வயிறு); விழவு
= விழா; விறல் = வலிமை;
பறை = பறவையின் இறகு; வலம்
= வலிமை; தப்பிய = தவறிய
(குறைந்த, இழந்த); பைதல்
= துன்பம்; வாங்குதல் = வளைதல்;
தண் = குளிர்ச்சி; சினை
= கிளை; கண் மாறுதல் = இடம்
மாறுதல்.
உரை: தோழி! நீ வாழ்க! எனது விளங்குகின்ற வளையல்கள் நெகிழும்படி நான்
மெலிந்துள்ளேன். மலைப்பக்கத்தில் விளைந்த தழையை ஆடையாக அணிந்த
மகளிர் அனைவரையும்விட, விழாக்கோலம் பூண்டதுபோல் சிறப்பாக,
என் பெண்மையழகு இருந்தது.
முன்பு வலிமையோடு இருந்த தன்னுடைய இறகு இப்பொழுது வலிமையை இழந்து
துன்பப்படுகின்ற நாரை, கடலலைகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் வளைந்த
மரக்கிளையில் தங்கி இருக்கும் குளிர்ச்சி பொருந்திய அழகிய கடற்கரைத் தலைவனோடு என் பெண்மையழகு
இப்பொழுது இடம் மாறிச் சென்றுவிட்டது.
சிறப்புக்
குறிப்பு:
வலிமை இழந்த நாரை, கடலலைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும்
மரக்கிளையில் இருந்துகொண்டு, அலைகள் கொண்டுவரும் மீன்களைத் தனக்கு
இரையாக உண்ணுவதைப்போல், தன் பெண்மையழகை இழந்த தலைவி, தலைவன் தானே வந்து தன் துயரத்தைப் போக்கித் தன்னை மணந்துகொள்வான் என்று எதிர்பார்க்கிறாள்
என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.
No comments:
Post a Comment