146.
தோழி கூற்று
பாடியவர்: வெள்ளி
வீதியார்.
இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் தமர் வரைவொடு வந்து
சொல்லாடுகின்றுழி வரைவு மறுப்பவோ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனின்
உறவினர்கள் தலைவியின் வீட்டிற்கு வந்து அவளுடைய பெற்றோர்களிடம் பெண் கேட்கின்றனர். தம்முடைய சுற்றத்தார் திருமணத்திற்கு
சம்மதிப்பார்களோ அல்லது மறுப்பார்களோ என்று தலைவி மனக்கலக்கத்தோடு இருக்கிறாள். அப்பொழுது, தோழி,“ தலைவன் சார்பாக வந்துள்ள முதியவர்களும் உன் சுற்றத்தாரும்
மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, உன் திருமணத்திற்குத் தடை எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நீ கவலையை விடு,” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
அம்ம வாழி
தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
டின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.
கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! ஆங்கணது அவை(யில்) தண்டுடைக் கையர், வெண்தலைச்
சிதவலர் ”நன்று, நன்று”
என்னும் (தலைவனின் உற்றாரும் உறவினருமாகிய)
மாக்களோடு, ”இன்று பெரிது,” என்னும் (நம்மவரும்
உள்ளனர்). நம்மூர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்
கொல்?
அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் - அசைச்சொல்.
அருஞ்சொற்பொருள்: புணர்ப்போர் = சேர்த்துவைப்பவர்கள்; தண்டு = ஊன்றுகோல்; வெண்டலை = வெண்+தலை = நரைத்த முடி உடையவர்கள்; சிதவல் = கந்தைத் துணி (இங்கு தலைப்பாகையைக் குறிக்கிறது.); மாக்கள் = மக்கள்; ஆங்கண் = அங்கே; கொல் - அசைச்சொல்.
உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! அங்கே, அந்தக் கூட்டத்தில், கையில் ஊன்றுகோல் உடையவர்களும், நரைத்த முடியையுடைய தலையில் தலைப்பாகை
அணிந்தவர்களுமாகத் தலைவனது உறவினர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் ”நன்று நன்று” என்று கூறுகிறார்கள். நம்மவர்கள், ”இன்று நீங்கள் வந்தது எங்களுக்குப்
பெருமை,” என்று கூறுகின்றனர். நம் ஊரில்
பிரிந்தவர்களைச் சேர்த்துவைப்பவர்களும் உள்ளனர்.
சிறப்புக்
குறிப்பு:
”தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்” என்றது, தலைவன் சார்பாக வந்தவர்களின் முதுமைப் பருவத்தைக் குறிக்கிறது. திருமணத்தைப் பற்றிப் பேசுவதற்கு ஆண்
வீட்டார் பெண்வீட்டிற்குப் பெரியோரை அழைத்துச் செல்லுதல் மரபு.
இருதரத்தாரும்
மகிழ்ச்சியாக உரையாடுவதிலிருந்து, தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம்
நடைபெறுவதில் இருதரத்தாருக்கும் சம்மதம் என்பதை உணர்ந்த தோழி, “உன்னையும் தலைவனையும் சேர்த்துவைக்கப்போகிறார்கள். உன்
திருமணம் உன் விருப்பப்படியே விரைவில் நடைபெறப்போகிறது” என்று
தலைவியிடம் கூறுகிறாள்.
No comments:
Post a Comment