147. தலைவன் கூற்று
பாடியவர்: கோப்பெருஞ்
சோழன். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 20-இல் காணலாம்.
திணை: பாலை
கூற்று: தலைமகன் பிரிந்தவிடத்துக்
கனாக் கண்டு சொல்லியது
கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் தன்னுடைய கனவில் தலைவியைக் காண்கிறான். அவன் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறான். அங்கே தலைவியைக் காணவில்லை.
அவன், கனவை நோக்கி, “ என் தலைவியை இங்கு கொண்டுவந்ததுபோல் காட்டி, நீ என்னை ஏமாற்றிவிட்டாய். நீ இப்படி ஏமாற்றினாலும், தங்கள் துணையைப் பிரிந்திருப்பவர்கள் கனவிலாவது அவர்களைக் காண முடிந்ததே என்று எண்ணுவார்கள். ஆகவே, உன்னை இகழ மாட்டார்கள்,” என்று கூறுகிறான்.
வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
இன்றுயில் எடுப்புதி கனவே
எள்ளார் அம்ம துணைப்பிரிந் தோரே.
கொண்டு கூட்டு: கனவே! வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய
அம் கலுழ் மாமை நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல இன்துயில் எடுப்புதி!
துணைப்பிரிந்தோர் எள்ளார் அம்ம!
துணைப்பிரிந்தோர் எள்ளார் அம்ம!
அருஞ்சொற்பொருள்: வேனில் = கோடைக் காலம்; பாதிரி = ஒருவகை மரம்; கூன் = வளைந்த;
ஏர்பு = எழுந்த; கலுழ்தல்
= ஒழுகுதல்; மாமை = கருமை;
பூண் = அனிகலன்; எடுப்புதி
= எழுப்புகிறாய்; அம்ம – அசைச்சொல்.
உரை: கனவே! கோடைக்காலத்தில் மலரும் பாதிரியின் வளைந்த மலரின் துய் (மகரந்தக் கம்பி) போன்ற மென்மையான மயிர் எழுந்து
படர்ந்த அழகு ஒழுகும் மாமை நிறத்தையும், நுண்ணிய வேலைப்பாடுடைய
அணிகலன்களையும் உடைய, தலைவியைக் கொண்டுவந்து தந்ததைப் போல,
இனிய தூக்கத்திலிருந்து என்னை எழுப்புகின்றாய். ஆனாலும், தம் துணையை பிரிந்து வாழ்பவர்கள் உன்னை இகழமாட்டார்கள்.
சிறப்புக் குறிப்பு: கனவு, உண்மையில் தலைவியைக் கொண்டுவராததால், ”தந்தோய் போல”
என்று தலைவன் கூறுகிறான். தலைவியைப் பிரிந்திருப்பதால் துன்புற்றுத்
தூங்காமல் இருப்பவன் அரிதாகப் பெற்ற உறக்கமாதலால், தன் உறக்கத்தை
“ இன் துயில்” என்கிறான். தூங்கும்பொழுது தலைவியைக் கண்டு திடீரென்று விழித்துக் கொண்டதால், தான் விழித்துக்கொண்டதற்குக் கனவுதான் காரணம் என்று கூறுகிறான். தன்னுடைய இனிய உறக்கத்திலிருந்து தன்னை எழுப்பியது இகழ்வதற்கு உரியது என்றாலும்,
கனவு தலைவியைக் காட்டியதால், அது எள்ளுதற்குரியது
அன்று என்று கூறுகிறான். ”துணைப் பிரிந்தோர்” என்றது தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் பொதுவென்று கருதலாம்.
பாதிரியின் மலர் வளைந்திருப்பதால் அது
“கூன் மலர்” என்று அழைக்கப்பட்டது. அந்த மலரில் நடுவில் உள்ள மகரந்தக் கம்பிக்குத் துய் என்று பெயர். அது மயிர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மயிர் என்பது
பாதிரியின் துய்க்கு ஆகுபெயராய் வந்துள்ளது.
No comments:
Post a Comment