Tuesday, February 9, 2016

151. தலைவன் கூற்று

151. தலைவன் கூற்று

பாடியவர்
: தூங்கலோரியார். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (151, 295), நற்றிணையில் ஒருபாடலும் (60) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: பொருள் வலிக்கப்பட்ட (பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்த) நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதில் மிகுந்த விருப்பமுடையவனாக இருக்கிறான். அதே சமயம், தன் மனைவியைவிட்டுப் பிரிய அவனுக்கு விருப்பமில்லை. பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்என்று கூறித் தலைவன் வருந்துகிறான்.

வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே. 

கொண்டு கூட்டு: வங்காக் கடந்த செங்காற் பேடை எழாஅல் உற வீழ்ந்தெனக் கணவனைக் காணாது குழல் இசைக் குரல் குறும்பல அகவும், குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது ”மறப்ப அருங் காதலி ஒழிய இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே. 

அருஞ்சொற்பொருள்: வங்கா = ஒருவகைப் பறவை (இது வக்கா எனவும் வழங்கும்); செங்கால் = சிவந்த கால்; பேடை = பெண்பறவை; எழாஅல் = புல்லூறு என்னும் பறவை; அகவும் = கூவும்; ஈண்டு = இங்கு; இறப்பல் = நீங்குதல்.

உரை: நெஞ்சே! ஆண் வங்காப் பறவை பிரிந்து சென்றதால் தனிமையில் இருந்த, சிவந்த காலையுடைய பெண் வங்காப்பறவையைத் தனக்கு இரையாகக் கொள்ளும் பொருட்டுபுல்லூறு என்னும் பறவை, அதனை நெருங்கி அதன்மேல் விழுந்ததால், தன்னுடைய  கணவனாகிய ஆண்பறவையை, குழலிசை போன்ற குரலோடு குறிய பல ஒலிகளால், பெண்பறவை அழைக்கும்  குன்றுகள் பொருந்திய, சிறிய வழிகளுடன் கடத்தற்கு அரிய இடம் என்று எண்ணாமல், ”மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்கியிருக்கும்பொழுது,  நான் அவளை விட்டுச் செல்வேன்.” என்று நீ துணிவது,  நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.


சிறப்புக் குறிப்பு: தேடும் பொருள் கிடைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரை தலைவியைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டும். இளமையில் இன்பம் அனுபவிப்பதை விடுத்து, பொருள் தேடச் சென்றால், மீண்டும் வரும்வரை தலைவியோடு இன்பம் அனுபவிக்க முடியாது. ஆகவே, பொருள் தேடுவதகாகச் சென்றால், திரும்பி வருவதற்குள் தன் இளமை முடிந்துவிடும் என்று தலைவன் எண்ணுகிறான்

No comments:

Post a Comment