152.
தலைவி கூற்று
பாடியவர்: கிள்ளி மங்கலங்
கிழார். இவர் குறுந்தொகையில்
நான்கு பாடல்களை (76, 110, 152, 181) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு
நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், “நீ ஆற்றுகின்றிலை,” என்று நெருங்கிய (இடித்துரைத்த) தோழிக்குச்
சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் தலைவன் காலம் தாழ்த்துகிறான். அதனால், தலைவி வருந்துகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “உனக்கும் தலைவனுக்கும் திருமணம் கண்டிப்பாக நடைபெறும். அதுவரை, நீ பொறுமையோடு இருக்கத்தான் வேண்டும்.”, என்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். அதற்குத் தலைவி, “என்னை
இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவனோடு வாழ்வதின் இன்றியமையாமையையும் அறியாதவர்கள்,” என்று கூறுகிறாள்.
யாவதும் அறிகிலர் கழறு வோரே
தாயின் முட்டை போலவுட் கிடந்து
சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தே
யாமைப் பார்ப்பி னன்ன
காமங் காதலர் கையற விடினே.
கொண்டு கூட்டு: யாமைப் பார்ப்பின் அன்ன காமங் காதலர் கையற விடின், தாயில் முட்டை போல, உட்கிடந்து சாயின் அல்லது பிறிது எவனுடைத்து? கழறுவோர்
யாவதும் அறிகிலர்.
அருஞ்சொற்பொருள்: யாவதும் = சிறிதும்; கழறுதல் = இடித்துரைத்தல்;
உட்கிடத்தல் = உள்ளத்துள் கிடத்தல்; சாய்தல் = மெலிதல்; யாமை
= ஆமை; பார்ப்பு = குஞ்சு;
கைகயறுதல் = செயலறுதல், முற்றும்
கைவிடுதல்.
உரை: தாய்முகம்
நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் குஞ்சைப்போலக் காமமும் தலைவரைப் பலமுறைக் காண்பதால் வளரும் தன்மையையுடையது. அவர், நாம்
செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டுவிட்டால்,
தாயில்லாத முட்டை
கிடந்தபடியே அழிவது போல, காமம் உள்ளத்துள்ளே கிடந்து மெலிவதல்லாமல்
வேறு என்ன பயன்? என்னை இடித்துரைப்போர், இதனைச் சிறிதும் அறியாதவர்கள்.
சிறப்புக்
குறிப்பு:
விரைவில்
திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல்
தன்னைக் இடித்துரைத்த தோழியைத் தன்னிடம் இருந்து வேறுபடுத்தி, அவள் தன் அருகே இருந்தாலும், அவளிடம் முன்னிலையில்
கூறாமல் தலைவி படர்க்கையில் கூறியது “முன்னிலைப் புறமொழி”
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
தாயில்லாத
முட்டை அந்தத் தாயால் அளிக்கப்படும் பாதுகாவல் இல்லாவிட்டால் குஞ்சாகமல்
அழிந்துவிடுவதைப்போல, தலைவனால் உண்டான காமம், அவன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு பிரியாமல் உடனிருந்து வாழாவிட்டால் பயனில்லாமல் போகும் என்று தலைவி
கருதுகிறாள்.
No comments:
Post a Comment