Sunday, February 21, 2016

153. தலைவி கூற்று

153. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரையாது நெடுங்காலம் வந்தொழுகுகின்றுழி, “நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை? ‘‘என்ற தோழிக்கு, “அவர் வரவு நமக்கு ஆற்றாமைக்குக் காரணமாம்,” எனத் தலைமகள் கூறியது.  (வேறு படுத்தல் - இங்ஙனம் வருவதைத் தவிர்ப்பாயாக என்று கூறிப் பிரித்தல்.)
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் தாழ்த்துகிறான். இரவு நேரத்தில், தலைவியைச் சத்தித்து, களவொழுக்கத்தைத் தொடர்வதையே அவன் விரும்புகிறான். அதனால் வருத்தமடைந்த தலைவி, தோழியை நோக்கி, “இனிமேல் அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிடு.” என்று கூறுகிறாள். அதற்குத் தோழி, “அவர் ஏன் என்று கேட்டால் நான் என்ன காரணம் சொல்லுவேன்?” என்று தலைவியைக் கேட்கிறாள். தலைவி, “அவர் இப்படி இரவில் வந்தால், அவருக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்று எண்ணி நான் மிகவும் அஞ்சுகிறேன்.  அதுதான் காரணம்,” என்று கூறுகிறாள்.

குன்றக் கூகை குழறினும் முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சுமன் அளித்தெ னெஞ்ச மினியே
ஆரிருட் கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடைச் செலவா னாதே. 

 கொண்டு கூட்டு: குன்றக் கூகை குழறினும், முன்றிற் பலவின் இருஞ்சினைக் கலை பாய்ந்து உகளினும் என் நெஞ்சம் அஞ்சும்; இனி,  ஆரிருள் கங்குல் அவர் வயின், சாரல் நீள் இடை, செலவு ஆனாது; அளித்து. 

அருஞ்சொற்பொருள்: கூகை = கோட்டான் (ஒரு வகை ஆந்தை); குழறுதல் = பறவை கூவுதல் ; முன்றில் = முற்றம், வீட்டின் முன்னிடம்; பல = பலா; இரு = கரிய; சினை = கிளை; கலை = ஆண் குரங்கு; உகளுதல் = தாவுதல், பாய்தல்; மன் = கழிவு (கழிந்தது என்ற பொருளில் வந்துள்ளது); அளித்து = இரங்கத் தக்கது; ஆர் இருள் = கடத்தற்கரிய இருள்; வயின் = இடம்; சாரல் = மலைப்பக்கம்; ஆனாது = குறையாது, நீங்காது.

உரை: முன்பெல்லாம்,  குன்றிலுள்ள கோட்டான் அலறினாலும், முற்றத்திலுள்ள பலாமரத்தின் கரிய கிளையிலிருந்து ஆண்குரங்கு தாவிக் குதித்தாலும் என் நெஞ்சம் அஞ்சும். அந்த அச்சமெல்லாம் போய்விட்டது.  இப்பொழுது,  மிகுந்த இருளையுடைய இரவில்மலைச்சாரலில் உள்ள நெடுவழியில், என் தலைவர் வந்துபோகும் பொழுது என் நெஞ்சம் தவறாமல் அவரிடமே  செல்லுகிறது. அது இரங்குதற்குரியது.


சிறப்புக் குறிப்பு: இரவில், காட்டு வழியில் தலைவன் வரும் பொழுதும், திரும்பிப் போகும்பொழுதும், அவனுக்கு ஏதாவது இன்னல்கள் நேருமோ என்ற அச்சத்தால், தலைவி அவன் நினைவாகவே இருப்பதால், “நெஞ்சம் செலவு ஆனாதேஎன்றாள்.

No comments:

Post a Comment