Monday, March 14, 2016

164. காதற்பரத்தை கூற்று

164. காதற்பரத்தை கூற்று

பாடியவர்: மாங்குடி மருதனார். இவர் மாங்குடி கிழார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் காஞ்சிப் புலவன் என்றும் மதுரைக் காஞ்சிப் புலவன் என்றும் அழைக்கப்பட்டதாக, நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய நூலில் கூறுகிறார்.  இப்புலவர் புறநானூற்றில் ஆறு பாடல்கள் (24, 26, 313, 335, 372, 396) இயற்றியதோடு மட்டுமல்லாமல், பத்துப்பாட்டிலுள்ள மதுரைக் காஞ்சியையும், அகநானூற்றில் ஒரு பாடலையும் (89), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (164, 173, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களையும் (120, 123) இயற்றியுள்ளார்.  நான் தலையாலங்கானத்துப் போரில் தோல்வியுற்றால், மாங்குடி மருதன் போன்ற புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குகஎன்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து, இவரால் பாடப்படுவதை அவன் மிகவும் பெருமையாகக் கருதினான் என்பது தெரியவருகிறது.
திணை: மருதம்.
கூற்று: காதற்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவி தன்னைப் பழித்துக் கூறினாள் என்பதை அறிந்த பரத்தை, தன் தோழியரிடம், தலைவியின் தோழியின் காதில் கேட்குமாறு, தலைவி  எம்மை வெறுப்பதற்குரிய குற்றம் ஏதேனும் நாம் செய்திருந்தால், கடல் தெய்வம் எம்மை வருத்துவதாகுக. என்று கூறுகிறாள்.

கணைக்கோட்டு வாளை கமஞ்சூல் மடநாகு
துணர்த்தேக் கொக்கின் தீம்பழம் கதூஉம்
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண்பெரும் பவ்வம் அணங்குக தோழி
மனையோள் மடமையிற் புலக்கும்
அனையே மகிழ்நற்கியா மாயினம் எனினே. 

கொண்டு கூட்டு: தோழி! மனையோள் மடமையின் புலக்கும் அனையேம்  மகிழ்நற்கு யாம் ஆயினம் எனின்கணைக்கோட்டு வாளை கமம்சூல் மடநாகு துணர் தேக்கொக்கின் தீம்பழம் கதூஉம்தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண்பெரும் பவ்வம் அணங்குக!

அருஞ்சொற்பொருள்: கணை = திரண்ட; கோடு = கொம்பு; வாளை = வாளை மீன்; கமம் = நிறைந்த; சூல் = கருப்பம்; மடம் = இளமை; நாகு = பெண்மை ( இங்கு பெண்மீனைக் குறிக்கிறது); துணர் = கொத்து; தேக்கொக்கு = தேமா (இனிய பழங்களையுடைய மாமரம்); தீ = இனிமை; கதூஉம் = கவ்வும்; தொன்று = பழைய; முதிர் = மூப்பு; தொன்றுமுதிர் = மிகப்பழைய; குணாது = கிழக்கே; தண் = குளிர்ச்சி; பவ்வம் = கடல்; அணங்கு = வருத்தம்; புலத்தல் = வெறுத்தல்; மகிழ்நன் = மருதநிலத் தலைவன்.
உரை: தோழி! தலைவி தன் அறியாமையால் எம்மை வெறுக்கின்றாள். அவள் எம்மை வெறுக்கும் அளவுக்கு நாம் மருதநிலத் தலைவனுக்குத் தீங்கிழைத்திருப்போமானால்,  திரண்ட கொம்பையுடைய, நிறைந்த கருப்பத்தையுடைய இளம் பெண் வாளை மீன், தேமாவின் உதிர்ந்த இனிய பழத்தைக் கவ்வும் இடமாகிய, மிகப் பழைய வேளிரது குன்றூருக்குக் கிழக்கே உள்ள, குளிர்ச்சியையுடைய பெரிய கடல், எம்மை வருத்துவதாக.
    

சிறப்புக் குறிப்பு:  குளத்தில் தானாகவே உதிர்ந்து விழுந்த மாங்கனியை வாளைமீன் கவ்வி உண்டது என்பது உள்ளுறையாகத்  தன்னை நாடி வந்த தலைவனோடு, பரத்தை இன்பம் நுகர்ந்தாள் என்பதைக் குறிக்கிறது. மாம்பழம் தலைவனுக்கும், வாளைமீன் பரத்தைக்கும், உண்ணுதல் இன்பம் நுகர்வதற்கும் உவமை. “கடல் எம்மை வருத்துவதாகஎன்றதுகடல் தெய்வம் எம்மை வருத்துவதாகஎன்ற பொருளில் கூறப்பட்டது.

1 comment: