Monday, March 14, 2016

165. தலைவன் கூற்று

165.  தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பின்னின்ற தலைமகன், மறுக்கப்பட்டுப் பெயர்த்துங் கூடலுறு நெஞ்சிற்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைப் பார்த்தான். அவள்மீது காதல்கொண்டான். அவளைச் சந்திக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினான்.  அந்தப் பெண்ணின் தோழியிடம், அந்தப் பெண்ணைச் சந்திப்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டினான். “அவள் உன்னைச் சந்திக்க விரும்பவில்லைஎன்று தோழி கூறி அவன் வேண்டுகோளை மறுத்தாள். ஆனால், அவனுக்கு அந்தப் பெண்ணின்மீது உள்ள காதல் குறையவில்லை. “நீ அவளை விரும்பினாய். அவள் உன்னை விரும்பவில்லை.; உன்னைச் சந்திக்கக்கூட அவள் மறுத்துவிட்டாள். ஆனால், நீ இப்பொழுது நாணத்தையும் மனவலிமையையும் இழந்து அவளை மீண்டும் விரும்புகிறாயே!” என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் கூறுகிறான்


மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு
விழைந்ததன் றலையும் நீவெய் துற்றனை
அருங்கரை நின்ற உப்பொய் சகடம்
பெரும்பெய றலையவீந் தாங்கியவள்
இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. 

கொண்டு கூட்டு: அருங்கரை நின்ற உப்புஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீந்தாங்கு, இவள் இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டு, மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்குவிழைந்ததன் தலையும் நீ வெய்து உற்றனை.

அருஞ்சொற்பொருள்: தலையும்  = பின்னும்; நறவு = கள், மது; விழைதல் = விரும்புதல்; வெய்து = விருப்பத்தைக் கொடுப்பது; வெய்துறுதல் = விருப்புறுதல்; ஒய்தல் = செலுத்துதல்; சகடம் = வண்டி; பெயல் = மழை; தலைய = மழைபெய்து விடுதல்; வீதல் = கெடுதல், அழிதல்; இரு = கரிய; பல் = பல (மிகுந்த); இயல் = இயற்கை; அணி = அழகு.
உரை: நெஞ்சே, பலவாகத் தொகுக்கப்பட்ட இவளது கரிய கூந்தலின் இயற்கை அழகைக் கண்டு, நீ இவளை விரும்பினாய். அவள் உன்னை மறுத்தவுடன், ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைக் கொண்டுசெல்லும் வண்டி, பெரிய மழை பொழிந்ததனால் அழிந்ததுபோல, நீ நாணத்தையும் வலிமையையும் இழந்தாய். ஒருமுறைக்  கள்ளுண்டு அறிவிழந்து களித்தவன், பிறகும்  கள்ளை உண்பதைப்போல், அவளை நீ முன்பு விரும்பியபொழுது அவள் உன்னை மறுத்தாலும், இப்பொழுது  அவளை நீ மீண்டும் விரும்புகிறாய்.

சிறப்புக் குறிப்பு: ஒருமுறை கள்ளுண்டவன் மீண்டும் கள்ளுண்ண விரும்புவதை காமமுடையவர்களின் நிலைக்கு ஒப்பிடுவது வழக்கு. இதை

             களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
             வெளிப்படுந் தோறும் இனிது”                     (குறள் 1145)
என்ற குறளிலும் காணலாம்.


(பொருள்: காமம் அலரால் (பிறருடைய பழிச்சொற்களால்) வெளிப்பட இனியதாதல், கள்ளுண்பவர் கள்ளுண்டு மயங்க மயங்க அக் கள்ளுண்பதையே விரும்பினாற் போன்றது.)

No comments:

Post a Comment