Sunday, May 1, 2016

185. தலைவி கூற்று

185.  தலைவி கூற்று

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார். அறுவை என்ற சொல் சீலை, ஆடை, உடைபோன்ற பொருள்களைக் குறிக்கும் சொல். இவரது இயற்பெயர் இளவேட்டன்.  இவர் மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் (56, 124, 230, 254, 272, 302) குறுந்தொகையில் ஒரு (185) செய்யுளும், நற்றிணையில் நான்கு செய்யுட்களும் (33, 157, 221, 344), புறநானூற்றில் ஒருசெய்யுளும் (329) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை, “வேறுபட்டாயால்என்றாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்தித்து மகிழ்கிறான். அவன் இரவில் வருவதால் அவனுக்கு இன்னல்கள் நேருமோ என்று தலைவி வருந்துகிறாள். இவ்வாறு இரவில் வருவதைத் தவிர்த்துத் திருமணம் செய்துகொண்டால் நிம்மதியாக, மகிழ்ச்சியாக இருக்கலாமே என்று தலைவி எண்னுகிறாள்சில நாட்களாகவே இது போன்ற சிந்தனைகளால் அவள் வருந்தியதால், அவள் உடல் மெலிந்தது. அவள் உடலில் தோன்றிய வேறுபாடுகளைக் கண்ட தோழி, “ தலைவர்தான் இரவு நேரங்களில் தவறாது உன்னைக் காண வருகிறாரே! இருந்தாலும், நீ வருத்தத்தோடு இருக்கிறாயே! உன் வருத்தத்திற்குக் காரணம் என்ன?” என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி, “நான் இவ்வாறு வருத்தத்தோடு இருப்பதைப் பற்றி அவரிடம் நீ விளக்கமாகக் கூறினால் என்ன?” என்று தலைவி கேட்கிறாள். தன் நிலையைத் தோழி தலைவனுக்கு விளக்கமாகக் கூறினால், அவன் இரவில் வருவதை நிறுத்திவிட்டுத் திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

நுதல்பசப்பு இவர்ந்து திதலை வாடி
நெடுமென் பணைத்தோள் சாஅய்த் தொடிநெகிழ்ந்து
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகுமெனச்
சொல்லின் எவனாம் தோழி ! பல்வரிப்
பாம்புபை அவிந்தது போலக் கூம்பிக்
கொண்டலின் தொலைந்த ஒண்செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்குஎன்
நன்மா மேனி அழிபடர் நிலையே. 

கொண்டு கூட்டு: தோழி! பல்வரிப் பாம்பு பை அவிந்தது போலக் கூம்பிக் கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள் கல்மிசைக் கவியும் நாடற்கு,  ”என் நல் மா  மேனி அழிபடர் நிலையை,  நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடிநெடுமென் பணைத்தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,  இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்எனச் சொல்லின் எவனாம்?

அருஞ்சொற்பொருள்: நுதல் = நெற்றி; பசப்பு = பலை நோயுற்ற நிலை; இவர்ந்து = படர்ந்து; திதலை = தேமல்; பணை = மூங்கில்; சாய்தல் = மெலிதல்; தொடி = கை வளையல்; பை = பாம்பின் படம்; அவிதல் = ; கூம்பி = குவிந்து; கொண்டல் = கீழ் காற்று (கிழக்கிலிருந்து வரும் காற்று); தொலைந்த = வீழ்த்தப்பட்ட; ஒண் = ஒளி பொருந்திய; மிசை = மேல்; கவிதல் = கவிழ்தல்; மா = கருமை; அழிபடர் = மிகுந்த துயரம்.

உரை: தோழி!  பல வரிகளையுடைய பாம்பினது படம் ஒடுங்கியதைப் போலக் குவிந்து, கீழ்க்காற்றால் வீழ்த்தப்பட்ட, ஓளிபொருந்திய செங்காந்தள் மலர், பாறையின்மேல், கவிழ்ந்து கிடக்கும் நாட்டையுடைய தலைவனுக்கு, எனது நல்ல கருநிறமான உடல், மிகுந்த துயரத்தால் வாடும் நிலையை,  ”தலைவி, நெற்றியில் பசலை படர்ந்து, தேமல் ஒளியிழந்து, நெடிய மெல்லிய, மூங்கிலைப் போன்ற தோள்கள் மெலிந்து, வளையல்கள் நெகிழ்ந்து காணப்படுகிறாள். அவள் இந்நிலையை அடைந்தது உம்மால்தான் ஆகியதுஎன்று அவரிடம், நீ விளங்கச் சொன்னால் என்ன குற்றமாகும்?


சிறப்புக் குறிப்பு: தலைவனுடைய மலைநாட்டில் செங்காந்தள் மலர் அடைந்த நிலையைத் தானும் அடைந்த்தாகத் தலைவி உள்ளுரையாகக் கூறுகிறாள்.

No comments:

Post a Comment