187.
தலைவி கூற்று
பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு
நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கவேண்டித் தலைமகனை இயற்பழித்த
தோழிக்குத் தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல்
- தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து
கூறுதல்; இயற்பட மொழிதல் - தலைவன்
குணங்களைத் தலைவி புகழ்ந்துகூறுதல்)
கூற்று
விளக்கம்:
தலைவன்
திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் திரும்பி
வருவதாகக் கூறிச்சென்ற காலத்தில் வரவில்லை. அவன் வருவதற்குக்
காலம் தாழ்த்துவதால், தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழி,
“ தலைவர் பொருள் தேடுவதில் வெற்றி அடையவில்லை போலும். அதனால்தான் அவர் இன்னும் திரும்பிவரவில்லை”
என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, “அவர் வலிமை மிகுந்தவர். அவர் பொருளோடு திரும்பிவருவார்.
அவரைப் பற்றித் தவறாகக் கூற வேண்டாம்” என்று தோழியிடம்
கூறுகிறாள்.
செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி
சுரைபொழி தீம்பால் ஆர மாந்திப்
பெருவரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன் தோழி !
வலியன் என்னாது மெலியும்என் னெஞ்சே.
கொண்டு கூட்டு: தோழி! செவ்வரைச் சேக்கை வருடை மான் மறி சுரைபொழி
தீம்பால் ஆர மாந்திப் பெருவரை நீழல் உகளும் நாடன் கல்லினும் வலியன். வலியன் என்னாது என் நெஞ்சு மெலியும்.
அருஞ்சொற்பொருள்: செவ்வரை = செங்குத்தான மலை; சேக்கை = தங்குமிடம்;
வருடை மான் = மலையில் வாழும் ஒருவகையான விலங்கு;
மறி = குட்டி; ஆர்தல் = நிறைதல்;
மாந்துதல் = உண்ணுதல்; பெருவரை
= பெரிய மலை; உகளும் = துள்ளும்;
வலியன் = வலிமையானவன்; மெலிவு
= வருத்தம்.
உரை: தோழி! செங்குத்தான மலைப்பக்கத்தில் தங்கியிருக்கும் வருடைமானின் குட்டி, அதன் தாயின் மடியில் சுரக்கின்ற இனிய பாலை, வயிறு
நிறைய உண்டு, பெரிய மலைப் பக்கத்திலுள்ள நிழலில் துள்ளும் இடமாகிய
நாட்டையுடைய தலைவன் கல்லைக் காட்டிலும் வலிமை உடையவன். அவன் வலிமையானவன்
என்று கருதாமல் என் நெஞ்சு, அவனை நினைத்து வருந்துகிறது.
சிறப்புக் குறிப்பு: ”வருடையின் மறி பாலை ஆர மாந்தி வரை நீழலில் உகளும் நாடன்” என்றது” தலைவன் திருமணத்திற்கு வேண்டிய பொருள்
நிரம்பப் பெற்று இங்கு வந்து தன்னைத் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவான்
என்று தலைவி எண்ணுகிறாள் என்பதைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment