Sunday, June 12, 2016

199. தலைவன் கூற்று

199.  தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தோழி செறிப்பறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவியின் பெற்றோர்கள் அவளை வீட்டில் காவலில் வைத்தார்கள். அதனால், தலைவன் தலைவியைக் காண இயலவில்லை. ”இனி, இவளை அடைவது அரிது. இருந்தாலும், எனக்கு இவள்மீது உள்ள காதல் என்றும் அழியாது. இப்பிறவியில் இவளை அடைய முடியாவிட்டாலும், மறுபிறவியில் நான் நிச்சயமாக இவளை அடைவேன்என்று தன் நெஞ்சை நோக்கித் தலைவன் கூறுகிறான்.

பெறுவது இயையாது ஆயினும் உறுவதுஒன்று
உண்டுமன் வாழிய நெஞ்சே திண்தேர்க்
கைவள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மையீர் ஓதி மாஅ யோள்வயின்
இன்றை அன்ன நட்பின் இந்நோய்
இறுமுறை எனஒன்று இன்றி
மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே. 

கொண்டு கூட்டு: நெஞ்சே! வாழிய! திண்தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறிவளி கமழும் நெறிபடு கூந்தல் மையீர் ஒதி மாஅயோள்வயின் இன்றை அன்ன நட்பின் இந்நோய் இறு முறை என ஒன்று இன்றி மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே. பெறுவது இயையாதாயினும் உறுவது ஒன்று உண்டு.

அருஞ்சொற்பொருள்: உறுவது = பயன் தருவது; திண் = வலிமை; கைவள் = வள்ளல் தன்மை உடைய கை; கானம் = காடு; எறிதல் = வீசுதல்; வளி = காற்று; கமழுதல் = மணத்தல்; நெறிபடுதல் = நெளிநெளியாக இருத்தல்; மை = கருமை; ஈர் = ஈரம்; ஓதி = கூந்தல்; மாயோள் = மாமை (கருமை) நிறமுடையவள்; இறுதல் = அழிதல், முடிவு பெறுதல்; இறுமுறை = முடிவது பெறுவது என்னும் முறை; மறுமை = மறுபிறவி; மன்னுதல் = நிலைபெறுதல்.


உரை: நெஞ்சே! நீ வாழ்க! ஓரி என்னும் மன்னன் வலிமையான தேரையும், வள்ளல் தன்மையையும் உடையவன். அவனுடைய காட்டைக் கடந்து (தீண்டி) வந்து வீசுகின்ற நறுமணமுடைய காற்றைப்போல், தலைவியின் கூந்தல் மணமுள்ளது. அவள் கூந்தல், மையைப் போன்ற கருமை நிறமும், நெளிவும், குளிர்ச்சியும் உடையது. அவள் (கருமை) மாமை நிறமானவள். அவளோடு இன்றுள்ள நட்பைப் போன்ற இந்தக் காமநோயானது, இப்பிறவியோடு அழிந்துபோகாமல், மறுபிறவியிலும் தொடரும். ஆதலால், அவள்மீது நான் கொண்ட காதல், மறுபிறவியில் அவளை நான் அடைவதற்குப் பயனுள்ளதாக இருக்கும்

No comments:

Post a Comment