200.
தலைவி கூற்று
பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பருவ
வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி,“பருவமன்று; வம்பு” என்றவழித் தலைமகள் சொல்லியது. (வம்பு = வீண்பேச்சு)
கூற்று
விளக்கம்:
கார்காலத்திற்கு
முன்னரே திரும்பி வருவதாகத் தலைவன் கூறிச்
சென்றான்.
கார்காலம் வந்துவிட்டது. ஆனால் தலைவன் இன்னும்
வரவில்லை. அதனால், தலைவி வருத்தம் அடைந்தாள்.
“கார்காலம் வந்தும் தலைவர் இன்னும் வரவில்லையே” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள். அதற்குத் தோழி,
“ இன்னும் கார்காலம் வரவில்லையே; கார்காலம் வந்துவிட்டது
என்பதெல்லாம் வீண் பேச்சு. நீ பொறுமையாக இரு. கார்காலம் வருவதற்கு முன் தலைவர் வந்துவிடுவார்” என்று
தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி கார்காலம்
வந்ததற்கான அறிக்குறிகளைச் சுட்டிக்காட்டித் தலைவன் தன்னை மறந்துவிட்டதாகத் தோழியிடம்
கூறுகிறாள்.
பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
மீமிசைச் தாஅய வீஇ சுமந்துவந்து
இழிதரும் புனலும் வாரார் தோழி
மறந்தோர் மன்ற மறவா நாமே
கால மாரி மாலை மாமழை
இன்னிசை உருமின முரலும்
முன்வரல் ஏமம் செய்துஅகன் றோரே.
கொண்டு
கூட்டு:
தோழி! கால மாரி மாலை மாமழை இன்னிசை உருமின முரலும். பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ் மீமிசைத்
தாஅய வீஇ சுமந்துவந்து புனலும் இழிதரும் . முன்வரல் ஏமம் செய்து அகன்றோர் வாரார். மன்ற மறந்தோர்; மறவாம்
நாமே!
அருஞ்சொற்பொருள்: பெய்த = மழை பெய்த; தண் = குளிர்ச்சி;
கலுழ் = கலங்கிவரும்; மீமிசை
= மேலே; தாஅய = பரவிய;
இழிதரும் = விழும்; புனல்
= நீர்; மன்ற = நிச்சயமாக;
மா = கரிய; மழை =
மேகம்; உரும் = இடி;
முரலல் = ஒலித்தல்; ஏமம்
= பாதுகாப்பு; அகன்றார் = பிரிந்து சென்றார்.
உரை: தோழி! கார்காலத்தில், பெய்வதற்காக மழையோடு மாலைக்காலத்தில்
வரும் கரிய மேகங்கள், உழவர்களுக்கு இன்னிசை போல் இடி இடித்து
முழங்குகின்றன. முன்பு மழை பெய்த குன்றத்தின் உச்சியிலிருந்து
மலர்கள் மணக்கும் குளிர்ந்த கலங்கல் நீர் அங்கே பரவிக் கிடக்கும் மலர்களைச் சுமந்து
கொண்டு அருவியாக வந்து விழுகின்றது. கார்காலத்திற்கு முன்னரே
வருவதாக, நமக்கு ஆதரவாக, உறுதி கூறிச் சென்ற
தலைவர் இன்னும் வரவில்லை. அவர் நிச்சயமாக நம்மை மறந்துவிட்டார்.
ஆனால், நாம் அவரை மறக்க மாட்டோம்!
No comments:
Post a Comment