216.
தலைவி கூற்று
பாடியவர்: கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார். இவரைப் பற்றிய
செய்திகளைப் பாடல்
213 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பருவ
வரவின்கண்
“ஆற்றாள்” எனக் கவன்ற (கவலைப்பட்ட)
தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
வருவதாகக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததால் தலைவி ஆற்றாள் என்று கவலையுற்ற
தோழியை நோக்கி,
“அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன்.
கார்ப்பருவமும் வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது
போலும்!” என்று தலைவி கூறியது.
அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே.
கொண்டு கூட்டு: தோழி! அவர், கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசுஇலை
வாடா வள்ளியங் காடு இறந்தோர். யான், தோடு ஆர் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடு அமை சேக்கையில் படர் கூர்ந்திசின். மாமழை அன்னள் அளியள் என்னாது,
என் இன்னுயிர் குறித்தே. இன்னும் பெய்ய முழங்கி மின்னும்.
அருஞ்சொற்பொருள்: விழுப்பொருள் = சிறந்த செல்வம்; தோடு = தொகுதி;
ஆர் = அழகிய; எல்
= ஒளி; பாடு = தூக்கம்;
கூர்தல் = மிகுதல்; மா
= கரிய; மழை = மேகம்.
உரை: தோழி! அத் தலைவர், கேடில்லாத சிறந்த செல்வத்தைக் கொண்டு வருவதற்காக,
பசுமையான இலைகளையுடைய, வாடாத வள்ளிக்கொடி படர்ந்த
காட்டைக் கடந்து சென்றார். நான் அணிந்திருந்த வளையல்கள் தொகுதியாக, அழகாகாக
, ஒளிபொருந்தியனவாக இருந்தன. அவை இப்பொழுது நெகிழும்படி,
கவலையுற்று, உறங்குவதற்குரிய படுக்கையில் வீழ்ந்து,
மிகுந்த துன்பமுறுகிறேன். நான் அத்தகைய
”துன்பத்தை உடையவள்; இரங்கத் தக்கவள்” என்று எண்ணாமல், கரிய மேகம் இன்னும் மழையைப் பெய்யும்
பொருட்டு இடியிடித்து முழக்கம் செய்து, எனது இனிய உயிரைக் கொல்லக்
குறிக்கொண்டு மின்னுகிறது.
No comments:
Post a Comment