217. தோழி கூற்று
பாடியவர்: தங்கால் முடக்கொல்லனார். தங்கால் என்பது
விருதுநகருக்கு அருகிலுள்ள
ஓரூர். இவ்வூர், ‘இராசராச பாண்டிநாட்டு மதுராந்தக
வளநாட்டுக் கருநீலக்குடி
நாட்டுத்திருத்தங்கால்’ என்று
கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஒளவை
சு.
துரைசாமிப் பிள்ளை
தம் நூலில்
கூறுகிறார். இப்புலவரின்
பெயர் புறநானூற்றில்
தங்கால் பொற்கொல்லன்
என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அகநூல்களில் இவர்பெயர் பொற்கொல்லன்
வெண்ணாகனார் என்றும்
தங்கால் முடக்கொல்லனார் என்றும் காணப்படுகிறது. இவர்
புறநானூற்றில் ஒருபாடலும்
(326), அகநானூற்றில் மூன்று
பாடல்களும் (48, 108, 355), நற்றிணையில் ஒருபாடலும்
(313), குறுந்தொகையில் ஒரு
பாடலும் (217) இயற்றியுள்ளார்.
திணை: குறிஞ்சி.
திணை: குறிஞ்சி.
கூற்று: உடன்போக்கு
நயப்பத் (நயத்தல் = விரும்புதல்) தோழி தலைமகட்கு
க் கூறியது.
கூற்று
விளக்கம்:
‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!’
என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணிப் பெருமூச்சுவிட்டான்; அவனுடைய எண்ணம் சரியானதுதான் என்று
நான் கூறினேன்” என்று தோழி தலைவியிடம் கூறி, அவள் உடன்போக்கை மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிக்கிறாள்.
தினைகிளி கடிகெனிற் பகலும்
ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.
கொண்டு
கூட்டு:
தினைகிளி
கடிக எனில் பகலும் ஒல்லும்; இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்; எம் இடும்பை
நோய்க்கு யாங்குச் செய்வாம் என, ஆங்கியான் கூறிய அனைத்திற்கு, ஓங்குமலை நாடன் பிறிது
செத்து, உயிர்த்தோன் மன்ற, காமம் ஐது.
யான் கழிமுதுக் குறைமையும் பழியும் என்றிசின்.
அருஞ்சொற்பொருள்: கடிதல் = வெருட்டுதல்; ஒல்லும் = இயலும்;
ஊறு = துன்பம்; அஞ்சுவல்
= அஞ்சுகிறேன்; இடும்பை = துன்பம்; செத்து = நினைத்து;
உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்; ஐது = நுண்ணியது; கழி =
மிகுந்த; முது = பேறறிவு;
முதுக்குறை = பேறறிவுடைமை; என்றிசின் = என்றேன்.
உரை: ”தினைப்புனத்திற்குச் சென்று கிளிகளை வெருட்டுக” என்று
தாய் சொன்னால், பகலில் உன்னைச் சந்திக்க இயலும். ஆனால், தாய் அவ்வாறு சொல்லவில்லை. நீ இனி இரவில் வரலாம் என்றால், நீ வரும் வழியில் உனக்கு
நேரக்கூடிய துன்பங்களுக்காக நான் அஞ்சுகிறேன். துன்பத்தைத் தரும்
எமது நோயைத் தீர்ப்பதற்கு , என்ன செய்யலாம்?” என்று நான் தலைவனைக் கேட்டேன். நான் அவ்வாறு கூறியதற்கு,
உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன், வேறு ஒன்றை நினைத்து,
அந்நினைவினால் பெருமூச்சு விட்டான். நிச்சயமாக,
காமநோய் நுட்பமானது. அவனது குறிப்பை உணர்ந்த நான்,
”நீ நினைத்தவாறு செய்வது மிகுந்த அறிவுடைய செயல்தான். ஆனால் அது பழிக்கும் காரணம் ஆகும்” என்றேன்.
சிறப்புக் குறிப்பு: தோழி, “எம் நோய்” என்றது, தலைவி துன்புறுவது
கண்டு தானும் துன்புறுவதைக் குறிக்கிறது.
தலைவன் பிறிதொன்றை
நினைத்துப் பெருமூச்சு விட்டான் என்பது, அவன் உடன்போக்கைப் பற்றியும்
அதனால் வரும் விளைவுகளைப் பற்றியும் எண்ணிப் பெருமூச்சு விட்டான் என்பதைக் குறிக்கிறது.
அதை அறிந்த தோழி, “ அவ்வாறு செய்தலே மிகுந்த அறிவுடைய
செயல். ஆனால், அவ்வாறு செவதால் பழி வரும்.”
என்று தலைவனிடம் கூறுகிறாள். பழி வந்தாலும் அறிவுடைய
செயலைச் செய்வதற்குத் தயங்கக் கூடாது என்று நினைத்த தோழி, தலைவனின் கருத்தை ஆமோதிக்கிறாள்.
தலைவியையும் உடன்போக்குக்கு உடன்படுமாறு தோழி ஊக்குவிக்கிறாள்.
No comments:
Post a Comment