221.
தலைவி கூற்று
பாடியவர்: உறையூர் முதுகொற்றனார். இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில்
உள்ள இரண்டு பாடல்கள்
( 221, 390) மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடைப்
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்:
தலைவன்
பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையாக இருக்க
வேண்டும்” என்று கூறுகிறாள். அதற்கு மறுமொழியாகத்
தலைவி, “ முல்லை மலர்ந்தது; கார்காலமும்
வந்துவிட்டது. நான் எவ்வாறு பொறுமையாக இருப்பேன்” என்று கூறுகிறாள்.
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.
கொண்டு
கூட்டு:
முல்லையும்
பூத்தன. பறியுடைக் கையர், மறிஇனத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. அவரோ வாரார்!
பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுடை இடைமகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறுபசு முகையே. அவரோ வாரார்!
அருஞ்சொற்பொருள்: பறி = பனை ஓலைக் குடை; மறி = குட்டி; ஒழிய
= தங்க; கூழ் = உணவு;
சென்னி = தலை; முகை
= மொட்டு; பசுமுகை = புதிய
மொட்டு.
உரை: முல்லைப் பூக்கள் மலர்ந்தன;
பனை ஓலையால் செய்த குடையைக் கையில் வைத்துள்ள இடையர்கள், குட்டிகளோடு கூடிய ஆட்டு
மத்தையோடு சென்று தங்குவதற்காக, பாலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்கின்றார்கள். அவர்கள் தம்
தலையில் அணிந்து கொண்டன யாவும், முல்லையின் அரும்புகளே ஆகும்;
ஆனால், தலைவரோ இன்னும் வரவில்லை.
சிறப்புக் குறிப்பு: ஆடுகளை
மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.
No comments:
Post a Comment