222.
தலைவன் கூற்று
பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப்
பாடல்
56 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பெட்ட (பெட்டல் = மிக விரும்புதல்)
வாயில் (தூது) பெற்று இரவு (யாசித்தல், கெஞ்சிக் கேட்டல்)
வலியுறுத்தல்.
கூற்று
விளக்கம்:
தலைவன்
ஒரு பெண்ணைப் பார்த்தான்.
அவளோடு பழக வேண்டும் என்று விரும்புகிறான். ”அவளை
எப்படி அணுகுவது?”, ”யாரைத் தூதாக அனுப்புவது?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.
அப்போழுது, தலைவி அவளுடையய தோழி ஒருத்தியுடன் நீராடிக்கொண்டிருப்பதைத்
தலைவன் பார்க்கிறான். தோழி எதைச் செய்தாலும் தலைவியும்
அதையே செய்கிறாள். அதைப் பார்த்த தலைவன்,
தலைவியும் அந்தத் தோழியும் மிகவும் நெருங்கிய நட்புடையவர்களாக இருப்பதை
உணர்கிறான். ”இந்தத் தோழிதான் தலைவியிடம் தூதாக அனுப்புவதற்குத்
தகுந்தவள். அவள் சொன்னால் நம் வேண்டுகோளுக்குத் தலைவி இணங்குவாள்”என்று தலைவன் எண்ணுகிறான்.
தலைப்புணைக்
கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.
கொண்டு கூட்டு: மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந்
உறழும் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர் அன்னோளே, தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்; கடைப்புணைக்
கொளினே கடைப்புணைக் கொள்ளும்; புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும்!
அருஞ்சொற்பொருள்: புணை = தெப்பம்; புனல் = ஆற்றுநீர்;
மாண்ட = மாட்சிமைப்பட்ட (சிறந்த); மாரி = மாரிக்காலம்
(மழைக்காலம்); பித்திகம் = பிச்சி; கொழு = கொழுப்பு
(வளம்); முகை = மொட்டு;
வெரிந் = முதுகு; செவ்வெரிந்
= சிவந்த புற இதழ்; உறழுதல் = ஒத்தல்; மழை = குளிர்ச்சி;
தலைஇய = பரவியுள்ள.
உரை: நல்ல
மழைக் காலத்தில் மலரும் பிச்சியின், நீர் ஒழுகும் வளமான அரும்பின், சிவந்த வெளிப்பக்கத்தைப் போன்ற, வளமான கடைப்பகுதியையும்
குளிர்ச்சியையும் உடைய கண்களையும், மழைத்துளிகளோடு தன்னிடம் பொருந்தி
இருக்கின்ற தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தெப்பத்தின்
தலைப் பக்கத்தை இத்தோழி பிடித்துக்கொண்டால் தானும் அதன் தலைப் பக்கத்தைப் பிடித்துக்கொள்கிறாள்.
தோழி தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொண்டால், தலைவியும் அதன் கடைப்பகுதியைக் பிடித்துக்கொள்கிறாள். தோழி தெப்பத்தைக் கைவிட்டு, நீரோடு சென்றால்,
தலைவி அங்கும் வருவாள் போலும்.
சிறப்புக் குறிப்பு: .புணைத்தலை, புணைக்கடை என்பவை மாறி தலைப்புணை, கடைப்புணை என்று வந்தன.
மழையில் நனைந்த சிவந்த அரும்பு, நீராடியதால் சிவந்த
கண்ணுக்கு உவமை. நீராடிய தூய மென்மையான நீர்த்துளிகள் உள்ள உடலுக்கு
மழைத்துளிகளையுடைய மென்மையான தளிர் உவமை.
இங்கு புணை
என்றது,
முறையாகக் கட்டப்பட்ட
தெப்பத்தைக் குறிக்காமல், வழைமரத் துண்டு
அல்லது நீரில் மிதக்கக்கூடிய மரக்கட்டையைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment