Monday, August 29, 2016

245. தலைவி கூற்று

245.  தலைவி கூற்று

பாடியவர்: மாலைமாறனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவைத் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துவாளே என்று எண்ணித் தோழி கவலைப்படுகிறாள். தோழி கவலைப்படுவதை அறிந்த தலைவி, “தலைவன் என்னைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான் என்பதைப் பலரும் அறிந்தால், நான் என் அழகை இழந்ததை நினைத்து வருந்துவதைவிட அதிகமாக வருந்துவேன்ஆகவே, நான் தலைவனின் பிரிவை எப்படியாவது பொறுத்துக் கொள்வேன்என்று கூறுகிறாள்.

கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே. 

கொண்டு கூட்டு: வாள்போல் வாய கொழுமடல் தாழைமாலைவேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம் புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படின்கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்நலம் இழந்ததனினும் நனி இன்னாது.

அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; ஆயம் = தோழியர் கூட்டம்; ஆய்ந்த = பாராட்டிய; நலம் = பெண்மை நலன் (அழகு); நனி = மிகவும்; இன்னாதது = துன்பம் தருவது; வாய = வாயையுடைய; மாலை = வரிசை; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன்.

உரை: (தோழி!) கருக்குடைய வாயையுடைய வாள் போன்ற விளிம்புடன்கூடிய,   கொழுவிய மடலை உடைய தாழையானது, வரிசையாக வேல்களை நட்டு வைத்த வேலியைப்போல் காக்கும், மெல்லிய கடற்கரைக்குரிய தலைவன் எனக்குச் செய்த கொடுமை, பலர் அறியும் வண்ணம் பரவினால், அது, அழகிய கடற்கரைச் சோலையிலே விளையாடும் மகளிர் கூட்டத்தினர், பாராட்டிய என்னுடைய பெண்மை நலத்தை நான் இழந்ததைக் காட்டிலும், மிகுந்த துன்பத்தைத் தருவதாகும்..


சிறப்புக் குறிப்பு: தன்னோடு விளையாடும் பெண்கள், தங்களைக் காட்டிலும் அழகானவள் என்று தன்னை வியந்து பாராட்டியதை, “ஆயம் ஆய்ந்த என் நலம்என்று தலைவி குறிப்பிடுகிறாள். தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதைத் தலவி, தலைவன் தனக்குச் செய்த கொடுமையாகக் கருதுகிறாள்

244. தோழி கூற்று

244. தோழி கூற்று

பாடியவர்: கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற்  புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று (மறுநாள்) தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுகலாற்றின் (களவொழுக்கத்தில்) இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.
கூற்று விளக்கம்:  முதல்நாள் இரவு, தலைவன் தலைவியின் வீட்டிற்கு வந்து, தாழிடப்பட்ட கதவைத் திறக்க முயன்றான். ஆனால், தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்து அவனைச் சந்திக்கவில்லை. மறுநாள், தலைவனும் தோழியும் சந்திக்கிறார்கள். “தலைவ, நேற்றிரவு நீ வந்து ஒலியெழுப்பியதை நாங்கள் கேட்டோம். ஆனால், தலைவி எழுந்துவருவதற்கு முயன்றபொழுது, அவள்தாய் அவளை இறுகத் தழுவிக்கொண்டாள். ஆகவே, இனி நீ இரவில் வந்து தலைவியைக் காணமுடியாது.” என்று தோழி கூறுகிறாள்.

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே. 

கொண்டு கூட்டு: பெருமபல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து, உரவுக்களிறு போல் வந்து இரவுக் கதவம் முயறல் கேளேம்  அல்லேம்;  கேட்டனெம்.  ஓரி முருங்கப் பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கு, யாம் உயங்குதொறும் அறனில் யாய் முயங்கும். 

அருஞ்சொற்பொருள்: துஞ்சுதல் = தூங்குதல் ; நள்ளென் = இருள் செறிந்தயாமம் = நள்ளிரவு ; உரவு = வலிய; கதவம் = கதவு; முயறல் = முயலுதல்; ஓரி = ஆணின் தலைமுடி (இங்கு ஆண்மயிலின் உச்சிக் கொண்டையைக் குறிக்கிறது); முருங்குதல் = அழிதல்பீலி = தோகை; சாய்தல் = மெலிதல்; உயங்குதல் = அசைதல்; முயங்கும் = தழுவும்.

உரை: தலைவ!  ஊரில் உள்ளவர்கள் பலரும் தூங்கும் இருள் செறிந்த நடுஇரவில், வலிமையான யானையைப் போல் வந்து,  நீ இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, நாங்கள் கேட்காமல் இல்லை; கேட்டோம். தலைக்கொண்டை நெரியவும்,  தோகை மெலியவும்,  நல்ல மயில் வலையில் அகப்பட்டதைப் போல், நாங்கள் அசையுந்தோறும், எம் அறமில்லாத தாய் எம்மைத் தழுவினாள்.


சிறப்புக் குறிப்பு: ’நீ அவளைக் காண விரும்பினால், திருமணம் செய்துகொளவதுதான் சிறந்த வழி. அதற்கான முயற்சிகளை விரைந்து செய்.” என்று தோழி தலைவனிடம் மறைமுகமாகக் கூறுகிறாள்.  

243. தலைவி கூற்று

243. தலைவி கூற்று

பாடியவர்: நம்பி குட்டுவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 109 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வன்புறை யெதிர் அழிந்து சொல்லியது (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி உறக்கமின்றி வருந்துகிறாள். “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை நீ பொறுமையக இருஎன்று வற்புறுத்திய தோழிக்கு மறுமொழியாகத் தலைவி, “ நான் தலைவன் நினைவாகவே இருப்பதால்தான் என்னால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; உறங்க முடியவில்லை. இனிமேல், நான்  அவரை நினைக்க மாட்டேன். ஆகவே, என் கண்கள் இனி நன்கு உறங்கலாம்என்று கூறுகிறாள்.

மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே. 

கொண்டு கூட்டு: தோழி மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் தார்மணி அன்ன ஒண்பூக் கொழுதிஒண்தொடி மகளிர் வண்ட ல் அயரும் புள் இமிழ் பெருங்கடல் சேர்ப்பனை  உள்ளேன்; படீஇயர் என் கண்ணே. 

அருஞ்சொற்பொருள்: கவடு = பிளவு; அடும்பு = நெய்தல் நிலத்தில் படரும் ஒரு வகைக்  கொடி; தார் = கழுத்துப் பட்டை, மாலை (இங்கு குதிரை அல்லது மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் மாலையைக் குறிக்கிறது); கொழுதுதல் = கிழித்தல், வலிந்து கையால் மலரச் செய்தல்; வண்டல் = சிறுமியர் விளையாட்டு; அயர்தல் = விளையாடுதல்; இமிழ்தல் = ஒலித்தல்; படீஇயர் = உரங்குக.

உரை: தோழி! மானின் குளம்பைப் போன்ற பிளவுபட்ட இலைகளை உடைய அடும்பினது, குதிரையின் கழுத்தில் இடும் மாலையின்கண் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவை வலிந்து மலரச் செய்து, ஒளிபொருந்திய வளையல்களையுடைய பெண்கள் விளையாடுகின்ற,  பறவைகள் ஒலிக்கின்ற, பெரிய கடற்கரைக்குத் தலைவனை, இனி நினைக்க மாட்டேன்; ஆதலின், என் கண்கள் உறங்குவனவாக.


சிறப்புக் குறிப்பு: பெண்கள் மலர்களின் மொட்டுக்களைத் தங்கள் விரல்களால் வலிய மலரச் செய்து விளையாடிய பொழுது, பூக்களைத் துன்புறுத்தியது போல், தலைவன் தன் பணியிலேயே கவனம் செலுத்தித் தலைவியை த் தனிமையில் தவிக்கவிட்டுக் கொடுமை செய்தான் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

242. செவிலித்தாய் கூற்று

242.  செவிலித்தாய் கூற்று

பாடியவர்: குழற்றத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:
முல்லை.
கூற்று: கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.

கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு, தலைவனும் தலைவியும் தனிக்குடுத்தனம் நட்த்துகிறார்கள். ”அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? தலைவி மகிழ்ச்சியாக இருக்கிறாளா?” என்று தெரிந்துகொள்ளத் தலைவியின் தாய் ஆவலாக இருக்கிறாள். தலைவியின் செவிலித்தாய், தான் தலைவியின் இல்லத்திற்குச் சென்று தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாக கூறித் தலைவியின் இல்லத்திற்குச் சென்றாள். தலைவியின் இல்லத்திற்குச் சென்ற பிறகு, தலைவனும் தலைவியும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்துவதையும், தலைவன் அதிகமாக வெளியூருக்குப் போகாமல் தலைவியோடு இருப்பதையும், வேந்தன் ஏவிய பணிக்காக வெளியூருக்குச் சென்றாலும், தலைவன் அங்கே தங்காமல் உடனே திரும்பி வந்துவிடுவதையும் செவிலித்தாய் காண்கிறாள்.  தலைவனும் தலைவியும் இனிமையாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்ற மகிழ்ச்சிகரமான  செய்தியைத் தலைவியின் தாய்க்குச்  செவிலித்தாய்  கூறுகிறாள்.


கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே
. 

கொண்டு கூட்டு: மடந்தை கானம் கோழி கவர்குரல் சேவல் ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப் புதல்நீர் வாரும், பூநாறு புறவிற் சிறு ஊரோள். செம்மல் தேர், வேந்துவிடு தொழிலொடு வேறூர் செலினும்சேந்துவரல் அறியாது. 

அருஞ்சொற்பொருள்: கானம் = காடு; கவர் குரல் = பலகுரல்கள் ஒன்றுசேர்ந்தது போல் உள்ள குரல்; பொறி = புள்ளி; எருத்து = கழுத்து; சிதர் = துளிகள்; உறைதல் = தங்குதல்; புதல் = புதர்; வாரும் = ஒழுகும்; புறவு = முல்லை நிலம்; சீறூரோள் = சிறு + ஊரோள் = சிறிய ஊரில் உள்ளவள்; மடந்தை = தலைவி; வேந்துவிடு தொழில் = அரசனால் ஏவப்பட்ட தொழில்; சேந்து வரல் = தங்கி வருதல்; செம்மல் = தலைவன்.

உரை: தலைவி,  காட்டுக் கோழியின் பலகுரல்கள் ஒன்று சேர்ந்ததைப்போல் உள்ள குரலையுடைய சேவலின்,  ஒளியுள்ள புள்ளிகளை உடைய கழுத்தில், குளிர்ந்த நீர்த்துளிகள் படும்படி, புதரிலிருந்து நீர் ஒழுகும், மலர் மணம் வீசுகின்ற முல்லை நிலத்தில் அமைந்த, சிறிய ஊரில் உள்ளாள். வேந்தனால் ஏவப்பட்ட தொழிலை மேற்கொள்வதற்காகத் தலைவனது தேர்  வெளியூருக்குச் சென்றாலும், சென்ற ஊரில் அதிக நாட்கள்  தங்கியிருக்காமல், உடனே வந்து விடுகிறது.


சிறப்புக் குறிப்பு:. ”புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூரோள்என்றது தலைவி, நிலவளமும் நீர்வளமும் நிறைந்த முல்லை நிலத்தில் உள்ள சிறிய ஊரில் வாழ்கிறாள் என்பதைக் குறிக்கிறது. வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினும்” என்பதிலிருந்து, தலைவன் செல்வாக்குள்ளவன் என்றும் அரசனோடு தொடர்புடையவன் என்றும் தெரிகிறது. “செலினும்என்றது, தலைவன் அடிக்கடித் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதில்லை என்பதை வலியுறுத்துகிறது. ”சேந்துவரல் அறியாதுஎன்றது, தலைவிமீது மிகுந்த அன்புடையனாகையால் அவளைவிட்டுப் பிரிய விரும்பாமல், வெளியூருக்குச் சென்றாலும், விரைவில் பணியை முடித்துத் திரும்பி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. தேரில் செல்கிறான் என்றது அவன் செல்வமும் செல்வாக்கும் உள்ளவன் என்பதை வலியுறுத்துகிறதுஆகவே, தலைவி செல்வமும், செல்வாக்கும், மிகுந்த அன்பும் உடைய தலைவனோடு நீர்வளமும் நிலவளமும் நிறைந்த முல்லை நிலத்தில் வாழ்கிறாள் என்பதைச் செவிலித்தாய் தலைவியின் தாயிடம் உரைக்கிறாள்

241. தலைவி கூற்று

241.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான்தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொண்டு இருக்கிறாள். அவளைக் கண்டு ஆறுதல் கூற, தோழி வருகிறாள். தோழியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஊர்ப்பொதுவிடத்தில், சில சிறுவர்கள் ஆரவாரத்தோடு செய்த ஒலியைத் தலைவனுக்குரிய மலை எதிரொலித்தது. அதைக் கேட்டுத் தலைவியின் வருத்தம் அதிகமாகிறது. அவளை அறியாமலேயே, அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுகியது. அதைக் கண்ட தோழி, “பிரிவைப் பொறுத்துக்கொள்ள முயற்சி செய். அவர் விரைவில் வந்துவிடுவார்என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “ நான் பொறுத்துக்கொண்டுதான் இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால், என் கண்கள்தாம்  அவரை முதன்முதலாகக் கண்டன. அதனால், அவை, அவரோடு கொண்ட  நட்பினால், உரிமையோடு அழுகின்றனஎன்று விடை கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்தாமல் மறைக்க முயற்சி செய்கிறாள்.

யாமெங் காமந் தாங்கவும் தாந்தம்
கெழுதகை மையி னழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.

கொண்டு கூட்டு: தோழியாம் எம் காமம் தாங்கவும், கன்று ஆற்றுப் படுத்த புன்தலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பதம் நோக்கி, ஏறாது இட்ட ஏமப் பூசல்விண்தோய் விடரகத்து இயம்பும் குன்றம் நாடன் கண்ட எம் கண், தாம் தம் கெழுதகைமையின் அழுதன.

அருஞ்சொற்பொருள்: தாங்குதல் = வெளிப்படாது அடக்குதல்; கெழுதகைமை = நட்புரிமை; ஆற்றுப் படுத்தல் = மேய்ச்சல் நிலத்தை நோக்கி ஓட்டிச் செல்லுதல்புன்தலை =சிறிய தலை; மன்றம் = பொதுவிடம்; பதம் = பருவம்; ஏமம் = இன்பம்; பூசல் = ஆரவாரம்; விடர் = பிளவு; இயம்புதல் = எதிர் ஒலித்தல்.

உரை: தோழி! நான் என்  காம நோயைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். கன்றுகளை மேய்ச்சல் நிலத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டு செல்லும்  சிறிய தலையை உடைய சிறுவர்கள், பொதுவிடத்தில் உள்ள வேங்கை மரம், மலரும் பருவத்தில் இருப்பதைப் பார்த்து, அம் மரத்தின் மேல் ஏறாமல், மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆரவாரத்தோடு எழுப்பிய ஒலி, வானத்தை அளாவிய மலைக்குகைகளிலிருந்து எதிரொலிக்கிறது. எம் கண்கள் அத்தகைய  குன்றுகளை உடைய நாட்டிற்குத் தலைவனை முதலில்  கண்டு காதல் கொண்டதால், தம்முடைய நட்புரிமையால், தலைவர் பிரிந்ததைக் கருதித் தாமே அழுதன.


சிறப்புக் குறிப்பு: வேங்கை மரத்தில் கடவுள் இருப்பதாக நம்பிக்கை இருந்ததால், எவரும்  வேங்கை மரத்தில் ஏறும் வழக்கம் இல்லை என்று தெரிகிறது.

240. தலைவி கூற்று

240. தலைவி கூற்று

பாடியவர்: கொல்லனழிசியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 26 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப்  பிரிந்து சென்றிருக்கிறான். அவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது, கார்காலம் முடிந்து குளிர்காலமும் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. தலைவனின் பிரிவைத் தலைவி பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துவாளே என்று எண்ணிய தோழி, தலைவியைக் கண்டு ஆறுதல் கூற வருகிறாள். “தலைவனின் பிரிவை எப்படிப் பொறுத்துக் கொள்கிறாய்?” என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். அதற்கு மறுமொழியாகத் தலைவி, “ இங்கிருந்து பார்த்தால் தலைவன் நாட்டில் உள்ள குன்று தெரிகிறதுஅதை பார்த்தால், தலைவனைப் பார்த்தது போல் இருக்கிறது. அதனால், பகல் நேரத்தில் பிரிவைப் பொறுத்துக் கொள்கிறேன். ஆனால், வாடைக் காற்று வீசும் மாலை நேரத்தில், அந்தக் குன்று மறையும் பொழுது என் வருத்தம் அதிகமாகிறதுஎன்று கூறுகிறாள்.


பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் றலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி!  பனிப்புதல் இவர்ந்த பைங்கொடி அவரைக் கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு பன்மலர் வெருக்குப்பல் உருவின் முல்லையொடு கஞலிவாடை வந்ததன் தலையும் நோய்பொர, அவர் மணிநெடுங்குன்று தெண்திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி,  மாலை, மறையும். கண்டிசின்!

அருஞ்சொற்பொருள்: புதல் = புதர்; இவர்தல் = படர்தல்; வெருகு = காட்டுப்பூனை; கஞலி = நிறைந்து; நோய் = துன்பம்; பொருதல் = அலைமோதுதல்; போரிடுதல்; மணி = அழகு.

உரை: தோழி! வாழி! குளிர்ந்த புதரில் படர்ந்த, பசுமையான அவரைக் கொடியின், கிளி மூக்கைப் போன்ற உருவத்தோடு ஒளி வீசும் பல மலர்கள், காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கிப் பூத்து, வாடைக்காற்று வீசுங்காலம் வந்த பிறகும், துன்பம் என்னை அலைக்கும் வண்ணம், தலைவரது அழகிய உயர்ந்த குன்று, தெளிந்த அலைகள் உள்ள கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போலத் தோன்றி, மாலைக் காலத்தில் மறையும்.  இதனைக் காண்பாயாக!

சிறப்புக் குறிப்பு: அவரைப் பூவிற்கு கிளிமூக்கு  உவமை. இருளில் மறையும் குன்றுக்குக் கடலில் ஆழும் கப்பல் உவமை.
தலைவன் கார்காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், அவன் கார்காலத்தில் வரவில்லை. கார்காலத்தில் முல்லை மலர்ந்ததைக் கண்டு, தலைவன் இன்னும் வரவில்லையே என்று வருந்தினாள். இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. அவளுடைய  வருத்தம் தொடர்கிறது. பகல் நேரத்தில், தலைவனுடைய நாட்டில் உள்ள மலையைத் தலைவியால் காணமுடிகிறது. அந்த மலையைக் காண்பது, தலைவனைக் காண்பதுபோல் தலைவிக்குத் தோன்றியது. அது அவளுக்கு ஆறூதலாக இருந்தது. ஆனால், கதிரவன் மறைகின்ற மாலை நேரத்தில், கொஞ்சம் கொஞ்சமாக அந்த மலை மறைய ஆரம்பித்து, இருள் சூழ்ந்த பிறகு, கடலில் மூழ்கிய கப்பலைப்போல், அந்த மலை, தலைவியின் கண்களுக்குத் தென்படவில்லைஅதனால், அவள் வருத்தம் அதிகமாகிறது.


239. தலைவி கூற்று

239. தலைவி கூற்று

பாடியவர்: ஆசிரியர் பெருங்கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: சிறைப்புறம்.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் பலநாட்கள் கூடி மகிழ்ந்தார்கள்தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளவில்லை. அவன் அவளோடு களவொழுக்கத்தில் கூடி மகிழ்வதையே விரும்புகிறான். அவர்களின் காதல், ஊரில் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. அதனால், ஊர் மக்கள் அலர் பேசுகிறார்கள். தலைவி வருந்துகிறாள். தலைவன் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள். அவளைக் காணத் தலைவன் வந்து வேலிக்குப் புறமாக நின்றுகொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த தலைவி, தன் வருத்தத்தையும் விருப்பத்தையும் தோழியிடம் கூறுவதுபோல் தலைவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள்.


தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. 

கொண்டு கூட்டு: தோழி விடர்முகைச் சிலம்பு உடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந்தாது ஊ துங் குறுஞ்சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும்  முந்தூழ் வேலிய, மலை கிழவோற்கே தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடுநாண் உண்டோ?

அருஞ்சொற்பொருள்: தொடி = வளையல்; சாயின = மெலிந்தன; விடர் = பிளவு; முகை = குகை; சிலம்பு = மலை; அலங்குதல் =அசைதல்; குலை = கொத்து; குறுஞ்சிறை = சிறிய சிறகு; தும்பி = ஒரு வகை வண்டு; முந்தூஉழ் = மூங்கில்.

உரை: தோழி! பிளவுகளையும் குகைகளையும் உடைய மலை முழுவதும் மணம் வீசும், அசைகின்ற கொத்துக்களாக உள்ள காந்தட் பூவின் மணமுள்ள தாதை ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலக் காட்சி அளிக்கிறது. அந்த மலைகளுக்கு  மூங்கில் வேலியாக உள்ளது. அத்தகைய மலைகளை உடைய தலைவன் பொருட்டு, என் வளையல்கள் நழுவின; என் தோள்கள் மெலிந்தன; இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.


சிறப்புக் குறிப்பு: காந்தள் மலரின் தாது இயற்கையாகவே மணம் கமழும் தன்மை உடையதானாலும், தும்பி ஊதியதால் இன்னும் அதிகமாக மணம் கமழ்வதாயிற்று. பாம்பு காந்தளுக்கும், பாம்பு உமிழும் மணி வண்டுக்கும் உவமைகள். ”காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் அச்சம் தரும் தோற்றத்தைத் தந்தது போல, எங்கள் நட்பும் அஞ்சுவதற்கு உரியதாயிற்றுஎன்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது.  காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போலத் தலைவன் என் நலனை நுகர்ந்து எங்கும் அலர் (பழிச்சொற்கள்)  பரவும்படிச் செய்தான் என்றும் அதனால், தன் மேனி மெலிந்ததையும் நாணம் அழிந்ததையும் கூறித் திருமணத்தின் இன்றியமையாமையைத் தலைவனுக்குத் தலைவி புலப்படுத்துகிறாள்

238. தோழி கூற்று

238. தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று: தலைமகன் பரத்தையின் மறுத்தந்து வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. (மறுத்தந்து - மீண்டு வந்து, தெளித்தல் - சூள் கூறித் தேற்றுதல்.)
கூற்று விளக்கம்: பரத்தையிடம் இருந்து மீண்டுவந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன் தன் மனைவியின் தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூதுசெல்லுமாறு வேண்டுகிறான்.  “நான் என் தவறை உணர்ந்தேன். இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்.” என்று தோழியிடம் சூளுரைக்கிறான். தோழி , “நான் உன்னுடைய சூளை நம்ப மாட்டேன். என் நலத்தைத் திருப்பித் தந்துவிட்டு, உன் சூளை நீயே எடுத்துக்கொண்டு செல்வாயாக.” என்று கூறித் தோழி அவனுக்காகத் தலைவியிடம் தூது போக மறுக்கிறாள்.

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே. 

கொண்டு கூட்டு: மகிழ்ந! பசு அவல் இடித்த கருங்காழ் உலக்கை ஆய்கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றிஒள் தொடி மகளிர் வண்ட ல் அயரும் தொண்டி அன்ன என் நலன் தந்து, நின் சூள் கொண்டனை சென்மோ!

அருஞ்சொற்பொருள்: பாசவல் = பசு+அவல் = பசுமையான அவல்; காழ் = வயிரம்; ஆய் = அழகு; வரம்பு = வரப்பு; துயிற்றி = படுக்கைக்குப் பக்கத்தில் வைத்து; வண்டல் = சிறுமியர் வீடுகட்டி விளையாடும் விளையாட்டு; அயர்தல் = விளையாடுதல்; தொண்டி  - அழகும் சிறப்பும் மிகுந்த துறைமுகமாக விளங்கிய ஒரு  வளமான நகரம். மகிழ்நன் = மருத நிலத் தலைவன்.

உரை: மகிழ்நபச்சை அவலை இடித்த, கரிய வயிரம் பாய்ந்த உலக்கையை, அழகிய கதிரை உடைய நெற்பயிர் நிறைந்த வயல் வரப்பில் படுக்க வைத்துவிட்டு,  ஒளி பொருந்திய  வளையல்களை உடைய பெண்கள் விளையாடுகின்ற, தொண்டி என்னும் பட்டினத்தைப் போன்ற, எனது பெண்மை நலத்தைத் தந்து விட்டு,  உன் சூளை நீயே எடுத்துக் கொண்டு செல்வாயாக.
   

சிறப்புக் குறிப்பு: பெண்களின் அழகுக்கு அழகான நகரத்தை ஒப்பிடுவது வழக்கம். தலைவிக்கும் தனக்கும் இருந்த ஒற்றுமை குறித்து தலைவியின் நலனைத் தன் நலமாகத் தோழி  கருதுகிறாள்

Sunday, August 14, 2016

237. தலைவன் கூற்று

237. தலைவன் கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள் முற்றி மீள்வான், தேர்ப்பாகனுக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: பொருளுக்காகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், பொருளோடு திரும்பி வரும்பொழுது, தேர்ப்பாகனை நோக்கி, “நாம் இருக்கும் இடத்திற்கும் தலைவி இருக்கும் இடத்திற்கும் தூரம் அதிகமாக உள்ளது. வழியிலே பல இடையூறுகள் உள்ளன. என் நெஞ்சம் ஏற்கனவே, அவளிடம் விரைந்து சென்றுவிட்டது. அதைப்போல், நீயும் தேரை விரைந்து செலுத்துகஎன்று கூறுகிறான்.


அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அஃ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே. 

கொண்டு கூட்டு: அஞ்சுவது அறியாது அமர்துணை தழீஇய நெஞ்சு நப் பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய கைபிணி நெகிழின்,அஃ தெவனோ? இருவாம் இடையே நன்றும் சேய அம்ம! முயக்கிடை மலைவு, கோள்புலி மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு  வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ?

அருஞ்சொற்பொருள்: அமர்விருப்பம்; தழீஇய = தழுவும் பொருட்டு; நப் பிரிந்து = நம்மைப் பிரிந்து; பிணி = இறுக்கம்; சேய = தொலைவில்; அம்மஅசைச்சொல்; இருவாம் = இருவராகிய யாம்; மா = பெரிய; வலன் = வலம் = வலிமை; ஏர்பு = எழுந்து; கோள் புலி = கொல்லும் புலி; முயக்குதல் = தழுவுதல்; மலைவு =தடைகள்.

உரை:  (பாக!), நான் அவள் நிலையை நினைத்து அஞ்சுவதைத் தான் அறியாமல், நான் விரும்பும் தலைவியைத் தழுவும் பொருட்டு, என் நெஞ்சு, என்னைப் பிரிந்து சென்றது. ஆனாலும், என் கைகள் இங்கே எஞ்சி இருக்க, கட்டித் தழுவ முடியாத, என் நெஞ்சு சென்று தழுவியதனால் என்ன பயன்?  எனக்கும்  தலைவிக்கும் இடையில் உள்ள தூரம் மிகவும் அதிகம். நான் தலைவியைத் தழுவுவதற்குத் தடையாக, இடையிலே கரியகடலின் அலையைப் போல் முழங்கி, கொலை செய்யும் புலிகள் ஆரவாரம் செய்து, வலிமையுடன்  எழுந்து, உலவுகின்ற சோலைகளை, எத்தனை என்று எப்படி எண்ணுவேன்?


சிறப்புக் குறிப்பு: தலைவன் தலைவியோடு இன்பமாக இருக்க விரும்புகிறான். அவன் அவள் இருக்கும் இடம் நோக்கித் தேரில் செல்லுகின்ற போழுது, அவன் நெஞ்சம் அவள் இருக்கும் இடத்திற்கு அவளைத் தழுவச் சென்றதாக உணர்கிறான். இன்பம் நுகர வேண்டுமானால், தலைவியைக் கையால் கட்டித் தழுவாமல், நெஞ்சால் தழுவி என்ன பயன் என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறான். அவன் இருக்கும் இடத்திற்கும் தலைவி இருக்கும் இடத்திற்கும் இடைய வெகு தூரம் உள்ளது.  மற்றும், வழியிலே பல இடையூறுகள் பல உள்ளன. ஆகவே, தேர்ப்பாகனிடம், “என் நெஞ்சு தலைவி இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றது போல், நீயும் தேரை விரைவாகச் செலுத்துகஎன்று கூறுகிறான்.

236. தோழி கூற்று

236. தோழி கூற்று

பாடியவர்: நரிவெரூஉத் தலையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 5 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிவான், ‘இவள் வேறு படாமைஆற்றுவிஎன்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தான். ”நான் திரும்பி வரும்வரை, தலைவிக்கு ஆறுதலாக இருஎன்று தோழியை வேண்டுகிறான். அவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்வதைத் தோழி விரும்பவில்லை. ஆகவே, தோழி, “நீ அவளைப் பிரிந்து செல்வதானல் அவளை நீ முற்றிலும் கைவிட்டுவிட்டாய் என்று பொருள். நீ அவ்வாறு செல்லுவதற்கு உடன்பட்டால், நீ நுகர்ந்த என் நலனைத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்வாயாகஎன்று கூறுகிறாள்.

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே. 

கொண்டு கூட்டு:
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை  நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்கும் தண்கடற் சேர்ப்ப, விட்டென விடுக்குநாள் வருக. அதுநீ நேர்ந்தனையாயின், நீ உண்ட என் நலனே  தந்தனை சென்மோ!

அருஞ்சொற்பொருள்: நேர்தல் = சம்மதித்தல்; தந்தனை = தந்து (திருப்பித் தந்துவிட்டு); சென்மோ = செல்வாயாக; குவவுதல் = குவிதல்; அடைகரை = மணல் அடைந்த கடற்கரை; சினை = கிளை; படுசினை = நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்த கிளை; வம்பு = புதுமை; வம்பநாரை = புதிதாக வந்த நாரை; சேக்கும் = தங்கும்; சேர்ப்பன் = நெய்தல் நிலத் தலைவன்; நலன் = அழகு, கற்பு ஆகியவற்றைக் குறிக்கும் சொல்.

உரை:  குன்றைப்போல், குவிந்து கிடக்கும் மணல் அடைந்த கடற்கரையில் வளர்ந்து, நிலத்தைத் தொடும் அளவுக்குத் தாழ்ந்து நின்ற புன்னை மரத்தின் கிளையில், புதிய நாரை வந்து தங்கும் குளிர்ந்த கடற்கரைத் தலைவனே! இப்பொழுது நீ சென்றால், நீ இவளைக் கைவிட்டுவிட்டாய் என்ற எண்ணத்தோடு செல்க; உன் பணிகளிலிருந்து உனக்கு எப்பொழுது விடுதலை கிடைக்குமோ (அதாவது, எப்பொழுது வரமுடியுமோ) அப்பொழுது நீ வருக. அத்தகைய பிரிவுக்கு நீ உடன்பட்டால். நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தைத் திருப்பித் தந்துவிட்டுச் செல்வாயாக.

சிறப்புக் குறிப்பு: தலைவிக்கும் தனக்கும் உள்ள ஒற்றுமையால், தலைவியின் நலனைத் தன் நலன் என்று தோழி குறிப்பிடுகிறாள். இவ்வாறு குறிப்பிடுவது வழக்கிலிருந்ததாகத் தொல்காப்பியம் கூறுகிறது.

          தாயத்தின் அடையா ஈயச் செல்லா
            வினைவயின் தங்கா வீற்றுக் கொள்ளப்படா
            ”எம்என வரூஉம் கிழமைத் தோற்றம்
            அல்ல ஆயினும் புல்லுவ உளவே.
                                                (தொல்காப்பியம், பொருளியல்  - 27)
பொருள்: (தாயம் = உரிமை; வீறு = வெற்றி; கிழமை = உரிமை; புல்லும் = பொருந்தும்) முன்னோர் சேர்த்துவைத்த  சொத்தைப் போல உரிமையால் அடைய முடியாததாய், கொடுத்துப் பெற இயலாததாய், தொழில் முறையால் வந்தடையாததாய்,
எவராலும், வெற்றி கொள்ள முடியாததாய், “எம்முடையதுஎனக்குரியதுஎன்று உரிமை கொண்டாடும்படியான தலைவியின் மேனி வனப்பு தோழியது அல்லவாயினும், அவளுக்கும் பொருந்தும்படிச் சொல்லும் வழக்குகள் உண்டுஉதாரணமாக, ”தலைவியின் அழகு முதலியவற்றைத் தன்னுடையது போலச் சொல்லும் கூற்றுக்கள் பலவுள. தலைவிக்காகப் பேசும் அவள், ‘என் அழகைத் திரும்பித் தா’, ‘என் தோளை மெலிய வைத்தனைஎன இவ்வாறு பேசுவாள்என்று முனைவர் தமிழண்ணல் தம் நூலில் குறிப்பிடுகிறார்.


மருத நிலத்திற்கு உரிய கருப்பொருளாகிய நாரை, நெய்தல் நிலத்திற்குப் புதிதாக வந்து, அங்குள்ள மீன்களை உண்டு, புன்னைமரத்தின் கிளையில் தங்கி இருக்கிறது. அதுபோல், தலைவி இருக்கும் ஊருக்குப் புதிதாக வந்து,  தலைவன் தலைவியின் நலனை நுகர்ந்தான். ஆனால், நாரை தான் மீன்களை உண்ட இடத்தில் தங்கி இருப்பதைப் போல், அவன் தலைவியின் ஊரில் தங்கி அவளை மகிழ்விக்காமல், பிரிந்து செல்ல நினைக்கிறான்.  ”நாரைக்கு உள்ள பண்புகூட உன்னிடம் இல்லையேஎன்று தோழி தலைவனைக் கடிந்து கொள்வதை, இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகக் கருதலாம்.

235. தலைவன் கூற்று

235. தலைவன் கூற்று

பாடியவர்: மாயேண்டனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: வரையாது பிரிந்து வருவான் (வருவான் - மீண்டு வரும் தலைவன்) வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகச் சென்ற தலைவன், தான் தேடிச் சென்ற பொருளைப் பெற்றுத் திரும்பிவருகிறான். வரும் வழியில் தலைவியின் ஊர் அவன் கண்களில் படுகிறது. அவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். ஆனால், இப்பொழுது கார்காலம் முடிந்து குளிர்காலம் வந்தது. குளிர்காலம் வந்ததால் வாடைக்கற்று வீசுகிறது. தன்னைப் பிரிந்திருக்கும் தலைவி, வாடைக் காற்றினால் வருந்துவாள் என்பது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. ஆகவே, ”என் தலைவியை வருத்தாமல் பாதுகாப்பாயாகஎன்று வடைக்காற்றை வேண்டுகிறான். இப்பாடலைத் தலைவன் தேர்ப்பாகனுக்கு உரைத்ததாகக் கருதாமல், வாடைக் காற்றை நோக்கிக் கூறியதாகக் கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே. 

கொண்டு கூட்டு:
வாடை! நெல்லி மரையினம் ஆரும் முன்றில் புல்வேய் குரம்பை நல்லோள் ஊர்பாம்பின் தூங்குதோல் கடுக்கும் தூவெள் அருவிக் கல் உயர் நண்ணியது. ஓம்புமதி! வாழியோ!

அருஞ்சொற்பொருள்: ஓம்புதல் = பாதுகாத்தல்; தூங்கும் = தொங்கும்; கடுத்தல் = ஒத்தல்; கல் = மலை; நண்ணியது = அருகில் உள்ளது; மரை = ஒரு வகை மான்; ஆரும் = உண்ணும்; முன்றில் = முற்றம்; குரம்பை = குடிசை.


உரை: வாடைக் காற்றே! நெல்லிக்காயை, மரை என்னும் மானினம் உண்ணுகின்ற முற்றத்தை உடைய, புல்லால் வேயப்பட்ட குடிசைகளை உடைய,  நல்ல தலைவியின் ஊர், பாம்பு உரித்த தோல் தொங்குவதைப் போல் விழும்  தூய வெண்மையான அருவியை உடைய, மலை  உச்சிக்கு அருகில்  உள்ளது. அங்கே உள்ள என் தலைவியை நீ பாதுகாப்பாயாக! நீ வாழ்வாயாக!