Sunday, October 2, 2016

253. தோழி கூற்று

253. தோழி கூற்று

பாடியவர்: பூங்கண்ணனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். “உன்னுடைய நிலையைப் பற்றி உன் தலைவனிடம் எவரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, நீ படும் துயரத்தைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்க முடியாது. கேள்விப்பட்டிருந்தால், தான் பொருள் தேடிச் சென்ற முயற்சியில் வெற்றி பெறாவிட்டாலும், அவர் காலம் தாழ்த்தாமல், உடனே வந்து உன் துன்பத்தை நீக்குவர்.“ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

கேளா ராகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவ தாயினு நெகிழ் நூற்
பூச்சே ரணையிற் பெருங்கவின் றொலைந்தநின்
நாட்டுயர் கெடப்பி னீடலர் மாதோ
ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரற்
புலிபுகா வுறுத்த புலவுநாறு கல்லளை
ஆறுசென் மாக்கள் சேக்கும்
கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! ஒலிகழை நிவந்த ஓங்குமலைச் சாரல்  புலிபுகா உறுத்த புலவுநாறு கல்லளை  ஆறுசெல் மாக்கள் சேக்கும்  கோடுயர் பிறங்கல் மலை இறந்தோர் கேளார் ஆகுவர். கேட்பின்விழுமிது கழிவதாயினும் நூல்பூச்சேர் நெகிழ்அணையில் பெருங்கவின் தொலைந்த நின் நாள் துயர் கெடப் பின் நீடலர்!

அருஞ்சொற்பொருள்: விழுமிது = சிறந்தது; நெகிழ்தல் = தளர்தல்; அணை = படுக்கை; பூச்சேர் அணை = மலர்களுடன்கூடிய படுக்கை; பெருங்கவின் = பேரழகு; நாள் துயர் = நாள்தோறும் படுகின்ற துயரம்; நீடலர் = நீட்டிக்க மாட்டார்; மாது, அசைநிலை; கழை = மூங்கில்; நிவந்த = உயர்ந்த; புகா = உணவு; உறுத்த = உட்செலுத்தி வைத்த; அளை = குகை; ஆறு = வழி; சேக்கும் = தங்கும்; கோடு = மலையுச்சி; பிறங்கல் = ஒளி செய்தல் (கண்ணுக்கு விளங்கித் தோன்றும்); இறந்தோர் = கடந்து சென்றவர்.

உரை: தோழி! ஒன்றோடு ஒன்று உராய்வதால் ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த, உயர்ந்த மலைப் பக்கத்தில், புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருப்பதால் புலால் நாற்றம் வீசும் கற்குகையில், அவ்வழியாகச் செல்லும் மக்கள் தங்கும், உயர்ந்த சிகரங்கள் விளங்கும் மலைகளைக், கடந்து சென்ற தலைவர்,  ன் துயரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டார். அவர் கேள்விப்பட்டிருந்தால், சிறந்த பொருள் கைகூடாது போவதாக இருந்தாலும், நூலால் கட்டிய மலர் மாலைகள் உள்ள  மென்மையான படுக்கையில் இருந்து வருந்தி, உன் பேரழகு கெடுமாறு, நாள்தோறும் நீ படுகின்ற துன்பம் நீங்கும்படி, காலம் தாமதிக்காமல் உடனே  வருவார்.


 சிறப்புக் குறிப்பு: கேட்பின் நீடலர் என்பது, நான் தூது விட்டு உன்துயரத்தை உன் தலைவைருக்குத் தெரிவித்து அவரைத் திரும்பிவரச் செய்வேன்.”  என்று தோழி தலைவிக்குக் கூறியதாகப் பொருள்கொள்ள இடமளிக்கிறது.

No comments:

Post a Comment