Sunday, October 2, 2016

254. தலைவி கூற்று

254. தலைவி கூற்று

பாடியவர்: பார்காப்பானார். இவர் பெயர் பாரகாபரர் என்றும் சில நூல்களில் காணப்படுகிறது. இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: பருவம் கண்டு, வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் ஈட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம் ஆகிய காலங்கள் கழிந்து இப்பொழுது இளவேனிற்காலம் வந்து விட்டது. ஆனால், தலைவன் வருவதற்கான அறிகுறிகள் எவற்றையும்  காணவில்லை. ஆகவே, தலைவி வருத்தமாக இருக்கிறாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள்.  "அவர் திரும்பிவருவதாகக் கூறிய கார்காலம் கழிந்த பின்னரும் அவர் வருவார் எனச் சொல்லும் தூதுகள் வரவில்லையே; அவர் என்னை மறந்துவிட்டார் போலும். என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இலையி லஞ்சினை யினவண் டார்ப்ப
முலையேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின்
தலையலர் வந்தன வாரா தோழி
துயிலின் கங்குல் துயிலவர் மறந்தனர்
பயினறுங் கதுப்பிற் பாயலு முள்ளார்
செய்பொருள் தரனசைஇச் சென்றோர்
எய்தின ராலென வரூஉந் தூதே. 

கொண்டு கூட்டு: தோழி! இலை இல் அம் சினை இனவண்டு ஆர்ப்பமுலை ஏர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன.  செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினர்  என வரூஉம் தூது வாரா.  அவர் துயில்இன் கங்குல் துயில் மறந்தனர்;  பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார்.

அருஞ்சொற்பொருள்: அம் = அழகிய; சினை = கிளை; ஆர்ப்ப = ஒலிக்க; ஏர்தல் = ஒத்தல்; கோங்கு = ஒரு வகை மரம்; தலை அலர் = முதலில் பூக்கும் மலர்கள்; முகை = அரும்பு; கங்குல் = இரவு ; துயில் = உறக்கம்; பயில்தல் = பழகுதல்; கதுப்பு = பெண்களின் கூந்தல்; பாயல்படுக்கை; நசைஇ = விரும்பி; ஆல்அசைச் சொல்.
உரை: தோழி! இலை இல்லாத அழகிய கிளையில் வண்டுகளின் கூட்டம் ஆரவாரிக்கும்படி, மகளிரின் முலையைப் போன்ற அரும்புகள் மலர,  இளவேனிற் காலம் வந்ததின் அடையாளமாக முதலில் பூக்கும் கோங்க மரத்தின் மலர்கள் தோன்றின.  ஈட்டுதற்குரிய பொருளைக் கொண்டு வருவதை விரும்பிச் சென்ற தலைவர், அதைப் பெற்றுத் திரும்பி வருகிறார் என்பதை அறிவிப்பதற்குத் தூதர்கள் எவரும் வரவில்லைநம்மைப் பிரிந்து சென்ற அவர், உறங்கும் நேரமாகிய இனிய இரவில் என்னுடன் உறங்குவதை மறந்தார்பாயில் படுப்பதைப்போல் என்னுடைய நறுமணமுள்ள கூந்தலில் படுத்துப் பழகியதையும் அவர் நினைக்காமல் மறந்துவிட்டார்.


சிறப்புக் குறிப்பு: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்) கழிந்து, குளிர் காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதன்கள்), முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்), பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்) ஆகியவை எல்லாம் முடிந்து இப்பொழுது இளவேனிற் காலம் (சித்திரை, வைகாசி மாதங்கள்)வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக கோங்கு மரம் பூக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், தலவன் இன்னும் வரவில்லை. அவன் வரப்போகிறான் என்ற செய்தியை அறிவிக்கும் தூதர்கள் எவரும் வரவில்லை. ஆகவே, தலைவன் தன்னை மறந்துவிட்டதாகத் தலைவி எண்ணி வருந்துகிறாள்.

No comments:

Post a Comment