Sunday, October 2, 2016

258. தோழி கூற்று

258.  தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று - 1:  தோழி, தலைமகற்கு வாயில் மறுத்தது.
கூற்று - 2: வாயில்  நேர்ந்ததூஉமாம்.
கூற்று விளக்கம் - 1:  தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்துவந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி மிகுந்த கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியை அணுகி, அவளைத் தன் சார்பாகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். “உன்னுடைய செயலால் தலைவி மிகுந்த வருந்தம் அடைந்தாள். வருத்தம் அடைந்தது மட்டுமல்லாமல், அவள் தன் அழகையும் இழந்தாள். உன் செயலால் ஊர்மக்கள் அவளைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்கள். அவள் உன்னைக் காண விரும்பவில்லை.” என்று கூறித் தோழி தலைவனுக்காகத் தூது போக மறுக்கிறாள்.
கூற்று விளக்கம் - 2:  தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையோடு வாழ்ந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவி மிகுந்த கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்த தலைவன், தலைவியின் தோழியை அணுகி, அவளைத் தன் சார்பாகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். தலைவனின் செயலால் தலைவி வருத்தம் அடைந்ததையும் அவள் அழகை இழந்ததையும் தோழி நன்கு அறிந்தவள். ஆகவே, அவள் தலைவனுக்காகத் தூது போக விரும்பவில்லைஇருந்தாலும், தலைவன் தலைவியோடு சேர்ந்து வாழ்ந்தால், ஊர்மக்கள் அலர் பேசுவதைத் தடுக்கலாம் என்று எண்ணுகிறாள். ஆகவே, அவள் தலைவன் சார்பாகத் தூது போகச் சம்மதிக்கிறாள். இப்பாடலின் கருத்தை ஆழ்ந்து ஆரய்ந்து பார்த்தால், இந்தக் கூற்றைவிட, முதற் கூற்று பொருத்தமானதாகத் தோன்றுகிறது.

வாரலெஞ் சேரி தாரனின் றாரே
அலரா கின்றாற் பெரும காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட் டியானைச் சேந்தன் தந்தை
அரியலம் புகவி னந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்கா டன்ன விவள்
பழிதீர் மாணலந் தொலைதல் கண்டே. 

கொண்டு கூட்டு:
பெரும!  காவிரிப் பலராடு பெருந்துறை, மருதொடு பிணித்த,ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை அரியல் அம்புகவின் அம் தோட்டு வேட்டை நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழிதீர் மாண் நலம் தொலைதல் கண்டு அலர் ஆகின்றுஎம் சேரி வாரல்! நின் தார் தாரல்!

அருஞ்சொற்பொருள்: வாரல் = வர வேண்டாம்; சேரி = தெரு; அலர் = பழிச்சொல்; தார் = மாலை. தாரல் = தர வேண்டாம்; மருது = மருத மரம்; பிணித்த = கட்டிய; ஏந்து = உயர்ந்த; கோடு = கொம்பு; சேந்தன்அழிசி என்ற மன்னனின் மகன்; அரியல் = கள்; புகவு = உணவு; தோடு = விலங்குத் தொகுதி; நிரையம் = நரகம்; ஓள் = ஓளிபொருந்திய; ஆர்க்காடுஓரூர்; மாண் = மாட்சிமைப்பட்ட; தொலைதல் = கெடுதல்.

உரை: பெரும! காவிரி ஆற்றின் பலரும் நீராடுகின்ற பெரிய நீர்த்துறையில் வளர்ந்த மருத மரத்தில் கட்டிய, மேல் நோக்கி உயர்ந்த கொம்பை உடைய யானைகளை உடைய சேந்தனுடைய தந்தையும், கள்ளாகிய உணவையும்,  அழகிய விலங்குத் தொகுதியை வேட்டையாடும் தொழிலையும், பகைவருக்கு நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரும் ஒள்ளிய வாளையும் உடைய,  இளைய வீரர்களுடைய தலைவனுமாகிய, அழிசியின் ஆர்க்காடு என்னும் நகரத்தைப் போன்ற,  இவளது குற்றமற்ற அழகு அழிதலைக் கண்டு, பழிச்சொல் உண்டாகின்றது.  எமது சேரிக்கு நீ வர வேண்டாம்!  நீ உனது மாலையைத் தர வேண்டாம்!

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், அழிசி என்பவன் சோழநாட்டில், காவிரைக்கரையில் இருந்த ஆர்க்காடு என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த ஒரு குறுநில மன்னன். இவன் சேந்தன் என்பவனின் தந்தையும் ஆவான்.


இப்பாடலில் முதற்பொருளாக காவிரியாற்றைச் சார்ந்த மருத நிலமும், கருப்பொருளாக மருத மரமும், உரிப்பொருளாக ஊடலும் குறிப்பிடப்பட்டுள்ளதால், இப்பாடல்  மருதத் திணையைச் சார்ந்தது என்பது தெளிவு. ஆனால், இப்பாடலில் குறிஞ்சித் திணைக்குரிய கருப்பொருளாகிய யானை குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, ஒரு திணைக்குரிய கருப்பொருள் மற்றொரு திணையில் வந்தால், அதைத் தொல்காப்பியம் திணை மயக்கம் என்று கூறுகிறது. இப்பாடலில் உள்ள திணை மயக்கம் இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமத்தைப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. குறிஞ்சி நிலத்துக்குரிய யானை மருத நிலத்தில் உள்ள மருத மரத்தில் கட்டப்பட்டுள்ளதைப் போல், தலைவன் தனக்குரிய மனைவியோடு வாழாமல் பரத்தையால் கவரப்பட்டான். இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்இக்கருத்து, தமிழறிஞர்கள் எழுதிய உரைநூல்கள் எவற்றிலும் காணப்படவில்லை. ஆனால், இது ஆங்கிலேயத் தமிழறிஞர் ராபர்ட் பட்லர் (Robert Butller) என்பவரால், அவருடைய குறுந்தொகையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் கூறப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கணத்திலும், சங்க இலக்கிய அகத்திணை நூல்களிலும் அவருடைய புலமைக்கு ஒரு எடுத்துக்காட்டு

3 comments:

  1. சீரீய செந்தமிழ்ச் செவ்விலக்கியப் பணி சிறக்கட்டும்! சிறக்கட்டும்!தருதும் தருதும் தகுநல் வாழ்த்துகள்!
    - குணத்தொகை, சென்னை - 100. (99414 92701)

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    உங்களுடைய வாழ்த்துகளுக்கும் பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  3. அருமையான பணி. தொடர்ந்து வாசிக்கிறேன். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு பாடலையும் எளிய தமிழில் புதுக்கவிதை நடையில் எழுதி வருகிறேன்.

    ReplyDelete