259.
தோழி கூற்று
பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: காப்பு
மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி, அறத்தொடு நின்று,அவனே பரிகரிப்பன் என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. ( காப்பு = காவல்; பரிகரிப்பன் = துன்பத்தைத்
தீர்ப்பன்; நயப்பாளாக = ஏற்பாளாக)
கூற்று
விளக்கம்: தலைவியின்
களவொழுக்கம் அவள் பெற்றோருக்குத் தெரிய வந்தது. அதனால், அவர்கள் தலைவியை வீட்டில் காவலில் வைத்தார்கள். தலைவியின்
நிலைமையை அறிந்த தோழி, அவளுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும்
என்று எண்ணினாள். ஆகவே, அவள் தலைவியின்
காதலைப் பற்றிய செய்தியை வெளிப்படுத்தினாள். அவ்வாறு செய்தால்,
தலைவன் தலைவியை மணந்து கொள்வதற்கான ஏற்படுகளை விரைவில் செய்வான் என்று
எதிர்பார்த்து அவள் அச்செயலைச் செய்தாள். தன் செயலைப் பற்றித்
தலைவியிடம் தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
மழைசேர்ந் தெழுதரு மாரிக் குன்றத்
தருவி யார்ந்த தண்ணறுங் காந்தள்
முகையவிழ்ந் தானா நாறு நறுநுதல்
பல்லிதழ் மழைக்கண் மாஅ யோயே
ஒல்வை யாயினுங் கொல்வை யாயினும்
நீயளந் தறிவைநின் புரைமை வாய்போற்
பொய்ம்மொழி கூறலஃ தெவனோ
நெஞ்ச நன்றே நின்வயி னானே.
கொண்டு
கூட்டு:
மழைசேர்ந்து
எழுதரு மாரிக் குன்றத்து அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறு நறுநுதல் பல்லிதழ்
மழைக்கண் மாஅயோயே! ஒல்வையாயினும் கொல்வையாயினும் நீ அளந்து அறிவை நின் புரைமை. வாய்போற் பொய்ம்மொழி கூறல், அஃது எவனோ? நின்வயினான் நெஞ்சம் நன்று.
அருஞ்சொற்பொருள்: மழை = மேகம்; மாரி = மழை; ஆர்தல் = பொருந்துதல்;
தண் = குளிர்ச்சி; ஆனா=
இடைவிடாமல்; நறும் = மணமுள்ள;
முகை = அரும்பு; நுதல்
= நெற்றி; பல்லிதழ் = பல
இதழ்களைக் கொண்ட (இங்கு தாமரையைக் குறிக்கிறது); மழைக்கண் = குளிர்ச்சியுடைய கண்; மாயோய் = மாந்தளிர் போன்ற நிறமுடையவள்; ஒல்லுதல் = பொறுத்தல்; புரைமை
= மேன்மை; வாய் = உண்மை;
வயின் = இடம்.
உரை: மேகங்கள்
சேர்ந்து எழுந்த,
மழையை உடைய மலையில், அருவிக்கு அருகில்
குளிர்ந்த நறுமணமுள்ள காந்தளின் அரும்புகள் விரிந்து இடைவிடாமல் மணக்கும். அம்மலரின் மணம் கமழும்
நெற்றியையும், பல இதழ்களை உடைய தாமரைப் மலரைப் போன்ற குளிர்ச்சியை உடைய கண்களையும் உடைய மாந்தளிர் போன்ற நிறம் பொருந்தியவளே!
நீ என் பிழையைப் பொறுப்பாயாயினும், அல்லது சினந்து
என்னைக் கொல்வாயாயினும், உனது மேன்மையை, நீயே அளவிட்டு அறியும் ஆற்றலை
உடையவள். மெய்யைப் போலப் பொய்யைக் கூறுவதால் என்ன பயன்?
தலைவனின் நெஞ்சம் உனக்கு நல்லதையே
நினைக்கிறது.
சிறப்புக்
குறிப்பு:
புரைமை
என்பதற்கு உயர்ச்சி என்ற பொருள் மட்டுமல்லாமல் குற்றம், களவு என்ற பொருள்களும் உள்ளன. உதாரணமாக, “பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (குறள் – 292)” என்ற குறளில் புரை என்ற சொல் குற்றம் என்ற
பொருளில் வந்துள்ளது. அதுபோல், “நீஅளந்து
அறிவைநின் புரைமை” என்பதற்கு “நீ உன் களவொழுக்கத்தின்
குற்றத்தை நன்கு அறிவாய்” என்று பொருள்கொள்ளலாம். இவ்வாறு பொருள்கொண்டால், தோழியின் கூற்றுக்கு வேறுவிதமான
அளிக்கலாம். “நான் உன்னுடைய காதலைப் பற்றி நம் தாய்க்கு அறிவித்தேன்.
நான் செய்தது பிழை என்று நீ நினைத்தால், நீ என்
பிழையைப் பொறுத்துக்கொண்டாலும் சரி; அல்லது சினந்து என்னைக் கொன்றாலும்
சரி. உனது களவொழுக்கமாகிய குற்றத்தை, நீயே அறியும் ஆற்றலை உடையவள். மெய்யைப் போலப் பொய்யைக் கூறுவதால் (களவொழுக்கத்தை மறைப்பதால்)
என்ன பயன்? தலைவனின் நெஞ்சம் உனக்கு நல்லதையே நினைக்கிறது.
ஆகவே, விரைவில் அவன் உன்னை மணந்துகொள்வான்.”
என்று பொருள்கொள்ளலாம்.
இப்பாடலுக்கு
மற்றொரு வகையிலும் விளக்கம் அளிக்கலாம். ”ஒல்வை ஆயினுங்
கொல்வை ஆயினும் நீ அளந்து அறிவைநின் புரைமை; வாய்போற் பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ? நெஞ்ச நன்றே நின்வயி னானே” என்பதற்கு, “திருமணம் நடைபெறும் வரை நீ உன் காமநோயைப் பொறுத்துக்கொண்டாலும் சரி;
அல்லது உன் நாணத்தை அழித்து நீ உன் தலைவனோடு உடன்போனாலும் சரி.
உன் உயர்ந்த பண்புகளை நீ நன்கு அறிவாய். மெய்யைப்
போலப் பொய்யைக் கூறுவதால் என்ன பயன் என்று கருதி நான் உன் காதலைப் பற்றி நம் தாயிடம்
அறிவித்தேன். உன் தலைவன் உன் நலனையே எண்ணுகிறவன் என்று எனக்குத்
தெரியும்.” என்று தோழி கூறுவதாகவும் பொருள்கொள்ளலாம்.
No comments:
Post a Comment