Sunday, January 22, 2017

300. தலைவன் கூற்று

300.  தலைவன் கூற்று

பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிவச்சமும் வன்புறையும் (வன்புறை = உறுதிமொழி கூறித்  தலைவன் தலைவியை ஆற்றுவித்தல்.)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்தித்தான்; காதல் கொண்டான்; கூடி மகிழ்ந்தான். தலைவியை நோக்கி, “நான் உன்னைப் பிரிய மாட்டேன்.” என்று கூறினான். அதைக் கேட்ட தலைவி, அப்பொழுதுதான் பிரிவு என்ற ஒன்று உண்டு என்பதை உணர்ந்தாள். ஆகவே, அவள் அஞ்சினாள். “நீ அஞ்சாதே! இவ்வுலகத்தையே பெறுவதாயினும் நான் உன்னை விட்டுப் பிரிவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.” என்று உறுதிமொழி கூறித் தலைவன் தலைவியை ஆற்றுவிக்கிறான்.

குவளை நாறுங் குவையிருங் கூந்தல்
ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்க்
குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண்பல் தித்தி மாஅ யோயே
நீயே, அஞ்ச லென்றவென் சொல்லஞ் சலையே
யானே, குறுங்கா லன்னங் குவவுமணற் சேக்கும்
கடல்சூழ் மண்டிலம் பெறினும்
விடல்சூ ழலனான் நின்னுடை நட்பே. 

கொண்டு கூட்டு: குவளை நாறுங் குவைஇரும் கூந்தல்ஆம்பல் நாறும் தேம்பொதி துவர்வாய்குண்டுநீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண்பல் தித்தி மாஅயோயே!
நீ, ”அஞ்சல்என்ற என் சொல் அஞ்சலையான், குறுங்கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல்சூழ் மண்டிலம் பெறினும் நின்னுடை நட்பு விடல் சூழலன். 

அருஞ்சொற்பொருள்: குவை = திரட்சி; பொதிதல் = நிறைதல்; துவர் = சிவப்பு; குண்டு நீர் = ஆழமான நீர்; கொங்கு = பூந்தாது; தித்தி = தேமல்; மாஅயோயே = மாந்தளிர் போன்ற நிறமுடையவளே; குவவுதல் = குவிதல்; சேக்கும் = தங்கும்; மண்டிலம் = உலகம்; சூழலன் = நினைக்க மாட்டேன்.
உரை: குவளை மலரின் மணம் வீசுகின்ற திரண்ட கரிய கூந்தலையும், ஆம்பல் மலரின் மணம் வீசும் இனிமை நிறைந்த சிவந்த வாயையும், ஆழமான நீரில் வளர்ந்த தாமரைப் பூந்தாதைப் போன்ற நுண்ணிய பல தேமற் புள்ளிகளையுமுடைய, மாந்தளிர் போன்ற நிறமுடையவளே! “நான் பிரிவேன் என்று நீ அஞ்சாதே!” என்று கூறும் என் உறுதிமொழியைக் கேட்டு நீ அஞ்சாதேகுறுகிய காலையுடைய அன்னப் பறவைகள்,  மணல் குவிந்துள்ள இடத்தில் தங்கியிருக்கும் கடல் சூழ்ந்த நிலத்தைப் பெறினும், நான் உன்னுடைய நட்பைக் கைவிடுவதைப் பற்றி நினைக்க மாட்டேன்.

சிறப்புக் குறிப்பு: குவளை மலர் போன்ற மணமுள்ள கூந்தலால் மூக்குக்கு இன்பமும், ஆம்பல் மலரின் மணம் வீசும் சிவந்த வாயில் ஊறும் இனிமை நிறைந்த நீரால் நாக்குக்கு இன்பமும், அந்த வாயால் அவள் கூறும் சொற்களால் செவிக்கு இன்பமும், தேமல் நிறைந்த மாந்தளிர் போன்ற மேனியால்  காண்பதற்கு இன்பமும், உடலுக்கு இன்பமும் தலைவியிடத்தில் தான் பெற்றதைத் தலைவன் நினைவுகூர்கிறான்.

299. தலைவி கூற்று

299.  தலைவி கூற்று

பாடியவர்: வெண்மணிப் பூதி.
திணை: நெய்தல்.
கூற்று : சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியின் வீட்டுக்கு வெளியே, தலைவியைக் காண்பதற்காக வந்து நிற்கிறான். தலைவன் தன்னைக் கூடிய பிறகு, பிரிந்து சென்றால், தன் தோள்கள் மெலிவதாகவும், திருமணம் செய்துகொண்டால், பிரிவு இல்லாமல் இருக்கலாம் என்றும், தலைவன் காதுகளில் கேட்குமாறு, குறிப்பாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப்
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல்
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற்
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன்
மணப்பின் மாணல மெய்தித்
தணப்பின் நெகிழ்பவெந் தடமென் றோளே. 

கொண்டு கூட்டு: தோழி! முதுநீர்ப் புணரி திளைக்கும், புள்ளிமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல்புணர்குறி வாய்த்த ஞான்றை, கொண்கன் கண்டன மன் எம் கண்ணே;  அவன் சொல் கேட்டன மன் எம் செவியே; மற்று அவன் மணப்பின் மாண் நலம் எய்தி, மற்று அவன் தணப்பின்  என் தட மென்தோள் நெகிழ்பஇது மற்று எவன்?

அருஞ்சொற்பொருள்: முதுநீர் = கடல்நீர்; புணரி = கடல் அலைகள்; திளைத்தல் = பொருதல்; புள் = பறவை; இமிழ்தல் = ஒலித்தல்; எக்கர் = மணல்மேடு; கானல் = கடற்கரைச் சோலை; ஞான்று = பொழுது; கொண்கன் = நெய்தல் நிலத்தலைவன்; மணத்தல் = கூடுதல்; தணத்தல் = பிரிதல்; புணர்குறி = முதன்முதல் இருவரும் கண்டு காதல்கொண்டு கூடியது; ஞான்று = பொழுது; நெகிழ்தல் = தளர்தல் (சோர்தல்).

உரை:  தோழி! நிலத்தைவிடப் பழையதாகிய கடலின் அலைகள் மோதுகின்ற, பறவைகள் ஒலிக்கின்ற, கடற்கரைச் சோலையிலுள்ள, பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னைமரங்கள் வளர்ந்த, மணல்மேட்டில் உள்ள நிழலில், முதன்முதல் இருவரும் கூடி மகிழும் வாய்ப்புக் கிடைத்த பொழுது, எம் கண்கள் நெய்தல் நிலத்தலைவனைப் பார்த்தன;  எம்முடைய காதுகள் அவனுடைய சொற்களைக் கேட்டன.  எமது பரந்த மெல்லிய தோள்கள், அவன் எம்மைக் கூடினால், மிகச் சிறந்த அழகைப்பெற்று, அவன் பிரிந்தால் அவை சோர்ந்துவிடுகின்றன. இது என்ன வியப்பு!

சிறப்புக் குறிப்பு: தலைவனைக் கண்ட கண்ணும், கேட்ட செவியும் எவ்விதமான வேறுபாடும் இல்லாதிருக்கத் தோள்கள் மட்டும் தம் மெலிவைப் பிறர் அறியும்படி நெகிழ்ந்தன.“என்று தலைவி கூறுகிறாள்.  களவொழுக்கத்தின் பொழுது, பிரிதலும் கூடுதலும் இருப்பதால் அவள் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் மாறிமாறி அனுபவிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால், வருத்தம் இல்லாமல் இருக்கலாம் என்று தலைவனுக்கு கேட்குமாறு, தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

298. தோழி கூற்று

298.  தோழி கூற்று 
பாடியவர்: பரணர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : கிழத்திக்குத் தோழி குறைமறாமற் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணை விரும்புகிறான். ஆனால், அவனால் அவளைக் காண முடியவில்லை. அவன் அடிக்கடி தலைவி இருக்கும் தெருவிற்கு வருகிறான். தலையின் தோழியிடம் இனிமையாகப் பேசுகிறான். அவனுக்கு உதவி செய்ய வேண்டுமென்று தோழி எண்ணுகிறாள். “தலைவனின் நிலையை நினைத்துப் பார். அவன் நாள்தோறும் என்னிடத்தில் வந்து உன்னைக் காண்பதற்கு உதவி செய்யுமாறு வேண்டுகிறான். ஆனால், அவன் மனதிலே வேறு எதையோ எண்னுகிறான் என்று நினைக்கிறேன்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

சேரி சேர மெல்ல வந்துவந்
தரிது வாய்விட் டினிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந் துறையுமவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 
 கொண்டு கூட்டு: தோழி சேரி சேர மெல்ல வந்துவந்துஅரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் நினையாய்.
இன்கடுங் கள்ளின் அகுதை பின்றை வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானஅவன் நெடும் புறநிலை பிறிதொன்று குறித்தது.

அருஞ்சொற்பொருள்: வைகல் = நாள்; உறையும் = தங்கும்; பைதல் = துன்பம்; நோக்கம் = பார்வை; பின்றை = பின்நிற்றல்; கடை = முனை; அகவன் மகளிர் = கட்டுவிச்சி (குறி சொல்லும் பெண்); பிடி = பெண்யானை; மடப்பிடி = இளம் பெண்யானை; மான = போல; புறநிலை = நீண்ட காலமாகக் கெஞ்சிக் கேட்கும் நிலை.
உரை: தோழி! தலைவன் நம் சேரிப்பக்கம் அடிக்கடி வருகிறான். அவன் அருமையாக வாய்திறந்து, நம் சிந்தைக்கினிய சொற்களைப் பேசுகிறான். நாள்தோறும், தான் நினைத்தது ஒன்றும் கைகூடாததால் தனது உடலின் நிறம் வேறுபட்டுத் தோன்றுகிறது. அத்தலைவனது, துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை, நினைத்துப் பார்ப்பாயாக. இனிய கடுங்கள்ளையுடைய அகுதைக்குப் பின்நிற்கும்வெண்ணிறமான முனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறுகின்ற,  இளமை பொருந்திய பெண்யானையாகிய பரிசிலைப் போல, அவன் நீண்ட காலமாக நம்மைக் கெஞ்சிக் கேட்டு நிற்பது, வேறு எதையோ ஒன்றைக் கருதியதாகும்.

சிறப்புக் குறிப்பு: ”இன் கடுங்கள் என்றது உண்ணுவதற்கு இனிமையும் மயக்கம் தருவதில் கடுமையும் உடைய கள் என்பதைக் குறிக்கிறது. வெள்ளிய நுனி என்றது வெள்ளியால் செய்த பூண் கட்டிய நுனியைக் குறிக்கிறது. “பிரிதொன்று குறித்ததுஎன்றது தலைவன் மனதில் வேறு எதையோ நினைக்கிறான் என்பதைக் குறிக்கிறது. இங்கு, “வேறு எதையோஎன்றது தலைவன் மடலேறக்கூடும் என்பதைக் குறிக்கிறது. யானையைப் பரிசாகப் பெறுவதற்காக, அகவன் மகள் அகுதையிடம் வந்து பாடுவாள்; குறிசொல்லுவாள். ஆனால், அவள் தனக்கு யானையைப் பரிசாகக் கொடுக்க வேண்டுமென்று வாய்விட்டுக் கூறமாட்டாள். தலைவனின் செயலும் அத்தகையதே என்று தோழி கூறுகிறாள்.

297. தோழி கூற்று

297.  தோழி கூற்று 
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி வரைவு மலிந்தது. (மலிந்ததுதிருமணம் செய்துகொள்ளத் தூண்டுவது)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்துவந்தார்கள். தலைவி தலைவனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகியது. தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விக்கத் தலைவியின் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டர்கள் என்பதைத் தோழி தெரிந்துகொண்டாள்.  ஆகவே, “இனித் தலைவனுடன் சென்று அவனை மணந்து வாழ்தலே நீ செய்யக் கூடிய நல்ல செயல்.” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

அவ்விளிம் புரீஇய கொடுஞ்சிலை மறவர்
வைவார் வாளி விறற்பகை பேணார்
மாறுநின் றிறந்த ஆறுசெல் வம்பலர்
உவலிடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல்லுயர் நனந்தலை நல்ல கூறிப்
புணர்ந்துடன் போதல் பொருளென
உணர்ந்தேன் மன்றவவர் உணரா வூங்கே. 

கொண்டு கூட்டு: அவ் விளிம்பு உரீஇய, கொடுஞ்சிலை மறவர் வை வார் வாளி விறல் பகை பேணார் மாறுநின்று இறந்த ஆறுசெல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர் நனந்தலை நல்ல கூறிபுணர்ந்து உடன் போதல் பொருள்என அவர் உணரா ஊங்கு மன்ற உணர்ந்தேன்.

அருஞ்சொற்பொருள்: விளிம்பு = நாண்; உரீஇய = உருவி இழுத்துக் கட்டிய; சிலை = வில்; வை = கூர்மை; வார் = நீண்ட; வாளி = அம்பு; விறல் = வலி; பேணல் = காத்தல்; மாறுநின்று = எதிரே நின்று; வம்பலர் = வழிப்போக்கர்; உவல் = தழை; பதுக்கை = குவியல்; நனந்தலை = அகன்ற இடம்.

உரை: மேல் விளிம்பை இழுத்துக் கட்டிய கொடிய வில்லையுடைய மறவர்களின் கூர்மையான நீண்ட அம்பின் வலிய பகையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளாமல், எதிரே நின்று இறந்த வழிப்போக்கர்கள்மீது,  தழையை இட்டுவைத்த குவியல்கள், ஊரைப்போலத் தோன்றுகின்ற, மலைகள் ஓங்கி உயர்ந்த அகன்ற பலை நிலத்தில், நல்ல சொற்களைக் கூறித் தலைவன் உன்னை உடன்போக்கில் அழைத்துச் செல்வதுதான் அவன் செய்யத்தக்க செயல் என்று, அவன்  உணர்வதற்கு முன்னர், நான் அதை  உறுதியாக உணர்ந்தேன்.

296. தலைவி கூற்று

296.  தலைவி கூற்று

பாடியவர்: பெரும்பாக்கனார்.
திணை: நெய்தல்.
கூற்று : காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களொவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். சிலநாட்களாகத் தலைவனைக் காண முடியவில்லைஅதனால் தலைவி வருத்தம் அடைந்தாள்; உடல் மெலிந்தாள். இன்று, அவன் வந்து தலைவியின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான்அவன் வந்திருப்பதை அறிந்த தலைவி,  ”தலைவனைக் கண்டால், என்னை இவ்வாறு வருத்தம் அடையச் செய்வது முறையா என்று அவனைக் கடுமையாகக் கடிந்துரைக்க வேண்டாம்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஓம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே.

 கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! புன்னை அலங்குசினை இருந்த அம்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையின், செறுவில்கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின், முன்நின்று,  ”தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ?” என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி

அருஞ்சொற்பொருள்: அலங்குதல் = அசைதல்; சிறை = இறகு; உறுகழி = பெரிய நீர்நிலைகள்; செறு = நெல்வயல்; கள் = மலர்த்தேன்; நயக்கும் = விரும்பும்; தண்ணம் = தண்+அம் = குளிர்ந்த அழகிய; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; கடிய = கடுமையான; கழறல் = இடித்துக் கூறுதல்; ஓம்புதல் = தவிர்த்தல்; தொடியோள் = வளையல் அணிந்தவள்; இன்னள் = இத்தன்மையை உடையவள்; ஓம்புதல் = தவிர்த்தல்.
உரை: தோழி! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! புன்னைமரத்தின் அசையும் கிளையிலிருந்த அழகிய சிறகையுடைய நாரை, உப்பங்கழியில்  உள்ள சிறுமீனை உணவாகக் கொள்வதை வெறுத்ததால், வயலிலுள்ள, தேன் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு உண்ண விரும்புகின்ற, குளிர்ந்த அழகிய கடற்கரைத் தலைவனைக் கண்டால், அவன் முன்னே நின்று, ”வளையலை அணிந்த தலைவி இத்தன்மை உடையவளாகும்படி, பிரிந்து செல்லுதல், உமக்குத் தகுமோ?” என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைப்பதை, நீ தவிர்ப்பாயாக.
சிறப்புக் குறிப்பு: நாரை உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் கள்நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணந் துறைவன்என்றது, “மருதநிலத்திற்குரிய நாரை, நெய்தல் நிலத்தில் உள்ள சிறிய மீன்களைப் பிடித்து உண்ணுவதை வெறுத்ததால், அவ்விடத்தைவிட்டு அகன்று, மருதநிலத்திற்குச் சென்றதைப்போல், தலைவன் களவொழுக்கத்தின் பொழுது தலைவியைச் சந்திப்பது அரிதாக இருப்பதால், அவளிடமிருந்து அவன் பிரிந்திருக்க விரும்புகிறான்என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.
தொடியோள் இன்னளாகஎன்றது  வளையல்களை அணிந்த தலைவி, வருத்தத்தால் உடல் மெலிந்தாள். அவள் உடல் மெலிந்ததால் வளையல்கள் நெகிழ்ந்து இந்த நிலைக்கு உள்ளானாள்.” என்பதைக் குறிக்கிறது.

தோழி தலைவனைக் கடிந்துரைக்கக் கூடாது என்பது தலைவியின் நோக்கம் அன்று. வீட்டுக்கு வெளியே நிற்கும் தலைவன் தன் நிலைமையை அறிந்துகொள்ள வேண்டும் என்று தலைவி விரும்புவதால் அவள் தோழியிடம் அவ்வாறு கூறுகிறாள்

295. தோழி கூற்று

295.  தோழி கூற்று

பாடியவர்: தூங்கலோரியார்.
திணை: மருதம்.
கூற்று : வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பரத்தையோடு சிலகாலம் இருந்தான். இப்பொழுது, அவன் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தான் தன் மனைவியோடு சேர்ந்து வாழ்வதற்குத் தலைவியின் தோழியின் உதவியைத் தலைவன் நாடுகின்றான். அவளைத் தனக்காகத் தலைவியிடம் தூது போகுமாறு வேண்டுகிறான். “இப்பொழுது, பரத்தையரோடு இருந்ததற்கான அடையாளங்களோடு நீ வந்திருக்கிறாய். ஒருகாலத்தில் நீ வறுமையில் வாடினாய். உனக்குத் தலைவி மனைவியாக வந்த பிறகுதான் வளமான வாழ்க்கை கிடைத்தது.” என்று இவ்வூரில் உள்ளவர்கள் பேசிக்கொள்கிறார்கள் என்று தோழி கூறுகிறாள்

உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் 
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழவொடு வருதி நீயே யிஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. 

கொண்டு கூட்டு: உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி நீ விழவொடு வருதி.  இவ்வூர், இஃதோ ஓர் ஆன் வல்சிச் சீர்இல்  வாழ்க்கை பெருநலக் குறுமகள் வந்தெனஇனி விழவு ஆயிற்று என்னும்.
அருஞ்சொற்பொருள்: துவன்றி = நெருங்கி; ஆன் = பசு; வல்சி = உணவு; சீர் = சிறப்பு; இனி = இப்பொழுது; விழவாயிற்று = விழாவைப் போலச் சிறப்புடையதாயிற்று.

உரை: தழைகளை உடுத்திக் கொண்டும், அவற்றை மாலையாகத் தொடுத்து அணிந்து கொண்டும், குழை முதலிய அணிகலன்களாகத் தழைகளை அணிந்தும், கூந்தலில் அவற்றைச் செருகியும், தழையலங்காரத்தால் பொலிவு பெற்ற பரத்தையர் கூட்டத்தோடு நெருங்கி இருந்து, நீ விழாவிற்குரிய அடையாளங்களோடு வருகின்றாய். இந்த ஊரில் உள்ளவர்கள், ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக்கொண்டு உண்ணும் உணவையுடைய, செல்வச் சிறப்பில்லாத வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த உனக்குமிகுந்த நன்மையுடைய இளமை பொருந்திய தலைவி மனைவியாக வந்ததால், இப்பொழுது விழாக்கோலம் பூண்டது போன்ற  வாழ்க்கை உண்டாயிற்று என்று கூறுகின்றனர்.

Sunday, January 8, 2017

294. தோழி கூற்று

294.  தோழி கூற்று

பாடியவர்: அஞ்சிலாந்தையார். இவர் அஞ்சில் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில்  ஒருபாடலும் (294), நற்றிணையில் ஒருபாடலும் (233) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
கூற்று : பகற் குறிக்கண் தலைமகன் வந்தவிடத்துத் தோழி செறிப்பறிவுறீஇயது.
கூற்று விளக்கம்: பகலில், தலைவன் தலைவியைக் காண்பதற்காக வந்திருக்கிறான். .அவன் வந்திருப்பதைத் அறிந்த தோழி, “நாம் பெண்களுடன் விளையாடும் பொழுது, தலைவன் நம்மோடு வந்து அளவளாவிச் சென்றிருந்தால், அலர் உண்டாயிருக்கும். இப்பொழுது, அவன் எப்பொழுதும் நம் அருகிலேயே இருப்பதால், தாய் உன்னை வீட்டில் காவலில் வைக்கப் போகிறாள். அதற்கு அவன்தான் காரணம்.” என்று தலைவனின் காதுகளில் விழுமாறு தலைவியிடம் கூறுகிறாள். தாய் தலைவியைக் காவலில் வைத்தால், தலைவனைக் காண இயலாது. அதனால், தலைவன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வான் என்று தோழி எண்ணுகிறாள்.

கடலுட னாடியும் கான லல்கியும்
தொடலை யாயமொடு தழுவணி யயர்ந்தும்
நொதுமலர் போலக் கதுமென வந்து
முயங்கினன் செலினே யலர்ந்தன்று மன்னே
தித்திப் பரந்த பைத்தக லல்குல்
திருந்திழை துயல்வுக்கோட் டசைத்த பசுங்குழைத்
தழையினும் உழையிற் போகான்
தான்தந் தனன்யாய் காத்தோம் பல்லே. 

கொண்டு கூட்டு: கடல் உடன் ஆடியும், கானல் அல்கியும்தொடலை ஆயமொடு தழுவணி அயர்ந்தும்நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலின், அலர்ந்தன்று மன்.  தித்திப் பரந்த பைத்து அகல் அல்குல் திருந்து இழை துயல்வுக் கோட்டு அசைத்த பசுங்குழைத் தழையினும் உழையிற் போகான்யாய் காத்து ஓம்பல் தான் தந்தனன். 

அருஞ்சொற்பொருள்: கானல் = கடற்கரைச் சோலை; அல்கி = தங்கி; தொடலை = மாலை; ஆயம் = தோழியர் கூட்டம்; தழுவணி = பெண்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு ஆடும் குரவைக் கூத்து; அயர்தல் = விளையாடுதல்; நொதுமலர் = அயலார்; கதும் = விரைந்து; முயங்குதல் = தழுவுதல்; அலர்ந்தன்றுஅலர் உண்டாயிற்று; மன் = கழிந்தது; தித்தி = தேமல்; பைத்து = விரிந்து; துயல்தல் = அசைதல்; கோடு = பக்கம்; குழை = தளிர்; உழை = பக்கம், அண்மை; ஓம்பல் = காவல் செய்தல்.


உரை:  கடலில் ஒன்றுசேர்ந்து நீராடியும், கடற்கரைச் சோலையில் தங்கியும், மாலை அணிந்த மகளிர் கூட்டத்தோடு,  குரவை கூத்து ஆடியும், நாம் மற்ற மகளிரோடு மகிழ்ந்து இருக்கும்பொழுது, அயலாரைப் போல,  விரைவாக வந்து, தலைவன் தழுவிச் சென்றிருந்தால், அலர் உண்டாயிருக்கும். அது நடைபெறவில்லை. இப்பொழுது, அங்ஙனம் செய்யாமல், தேமல் படர்ந்த, விரிந்து அகன்ற, அல்குலிடத்தே, திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசையும் பக்கத்தில், கட்டிய பசுமையான தளிரால் செய்த தழையாடையைப் போல, மிக அண்மையில், அகலாது இருந்ததால், தாய் நம்மை வீட்டில் வைத்துக்  காவல் செய்வதற்கு அவனே காரணமானான்.

293. தலைவி கூற்று

293.  தலைவி கூற்று

பாடியவர்: கள்ளில் ஆத்திரையன். கள்ளில் என்பது தொண்டை நாட்டிலுள்ள ஒரூர். இவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களும் (175, 389), குறுந்தொகையில் ஒருபாடலும் (294), நற்றிணையில் ஒருபாடலும் (293) இயற்ரியுள்ளார்.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்கத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: பரத்தையிடமிருந்து பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்த தோழியை நோக்கி, “தலைவன் இங்கு இருப்பது பரத்தைக்குத் தெரியுமானால், அவள் இங்கு வந்து அவனைக் கொண்டு செல்வள்என்று தலைவி கூறுகிறாள்.

கள்ளிற் கேளிர் ஆத்திரை யுள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி யருமன் மூதூ ரன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மா றலைப்ப
வருமே சேயிழை யந்திற்
கொழுநற் காணிய அளியேன் யானே. 

கொண்டு கூட்டு: கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியம் குறுங்காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன சேயிழை அயவெள் ஆம்பல் அம்பகை நெறித்தழை தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப அந்தில்
கொழுநன் காணிய வரும். யான் அளியேன்.

அருஞ்சொற்பொருள்: கேளிர் = நண்பர்கள்; கள்ளின் கேளிர் = கள் குடிக்கும் வழக்கம் உள்ளவர்களின் கூட்டம்; ஆத்திரை = யாத்திரை; பாளை = பனை, தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல்; பஞ்சி = நார்; இரும் = பெரிய; பெண்ணை = பனை; பெயர்தல்  = திரும்பி  வருதல்; அயம் = நீர், குளம்; தித்தி = தேமல்; குறங்கு = துடை; ஊழ் = முறை; ஊழ்மாறு = முறையே மாறி மாறி; அலைத்தல் = அசைத்தல்; சேயிழைசெம்பொன்னாலான அணிகலன்களை அணிந்த பெண்; அந்தில் = அவ்விடம்; கொழுநன் = கணவன்.

உரை: ஆதி அருமனுக்குரிய பழைமையான  ஊரில், கள் குடிக்கும் விருப்பத்தோடு செல்பவர்கள்,  கள்ளைக் குடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்கு உள்ள  பாளை ஈன்ற நாரையுடைய சிறிய காய்களைக்கொண்ட, உயர்ந்த கரிய பனையின் நுங்கையும் கொண்டு செல்வர். அதைப்போல், செம்பொன்னால் செய்த சிறந்த அணிகலன்களை அணிந்த  பரத்தை, நீரில் வளர்ந்த வெண்ணிறமான ஆம்பலின் அழகிய நிறம் மாறுபட்ட முதிர்ந்த தழைகளால் தைக்கப்பட்ட தழையுடை, அவளின் தேமலை உடைய துடையில் முறையே மாறி மாறி அசைய, அவ்விடத்திலே தலைவனைக் காணும் பொருட்டு வருவாள். நான் இரங்கத் தகுந்தவள்.


சிறப்புக் குறிப்பு: பனை மரத்தில் உள்ள கள்ளை உண்ணச் சென்றோர், அதனை உண்ணுவது மட்டுமல்லாமல் நுங்கைப் பறித்து பனைமரத்திற்கு கேடு விளைவித்ததைப் போலத் தலைவனைக் காண வரும் பரத்தை, அவனைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல்,  தன்னைப் பழிப்பாள் என்று தலைவி எண்ணுகிறாள்.

292. தோழி கூற்று

292.  தோழி கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள், தலைவன் தலைவியைக் காண்பதற்காக இரவு நேரத்தில் வந்து, வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தோழி, “அன்றொருநாள் தலைவன் விருந்தினரைப் போல் நம் வீட்டிற்கு வந்ததை நம் தாய் பார்த்துவிட்டாள். அதிலிருந்து, அவள் உன்னைக் கடுமையான காவலில் வைத்திருக்கிறாள். அவள் நரகத்திற்குத்தான் போகப்போகிறாள்.” என்று தலைவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள். தலைவியின் நிலையை அறிந்தால், தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தோழி எண்ணுகிறாள்.

மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே. 

கொண்டு கூட்டு: ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனபகைமுக ஊரின் அன்னை துஞ்சல் இலள். மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு, அவள் நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்பெண்கொலை புரிந்த நன்னன் போலவரையா நிரையத்துச் செலீஇயர்.

அருஞ்சொற்பொருள்: மண்ணுதல் = நீராடுதல்; நுதல் = நெற்றி; ஒண்ணுதல் = ஒள்+நுதல் = ஒளிபொருந்திய நெற்றி; அரிவை = இளம்பெண் (தலைவி); புனல் = நீர்; பசுங்காய் = பச்சைக்காய் (பச்சை மாங்காய்); ஒன்பதிற்று ஒன்பது = எண்பத்து ஒன்று; நிறை = எடை; வரையா = மீளமுடியாத; நிரையம் = நரகம்; பகைமுகம் = போர்முனை.
உரை ஒருநாள்,  மலர்ந்த முகத்துடன் விருந்தினனைப் போல் தலைவன் வீட்டுக்குள் வந்ததைக் நம் அன்னை கண்டாள். அதுமுதல்,  பகைவரின் போர்முனையில் இருக்கும் ஊர்மக்களைப் போல், அன்னை பல நாட்களாகத் தூங்காமல் இருக்கிறாள். நீராடுவதற்காகச் சென்ற, ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்,  அந்த நீர் கொண்டுவந்த பச்சை மாங்காயைத் தின்ற  குற்றத்திற்காக, அவள் தந்தை எண்பத்தொரு ஆண்யானைகளோடு, அவளது எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்த பாவையையும் கொடுத்ததை ஏற்றுக்கொள்ளாமல், அப்பெண்ணைக் கொலைசெய்த நன்னனைப் போலநம் அன்னை மீளமுடியாத நரகத்திற்குச் செல்வாளாக!
சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், ஓரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்பவர்கள் தங்குவதற்கு ஏற்ற விடுதிகள் இல்லை. தம்முடைய ஊருக்குப் புதிதாக வந்து, தங்க இடமில்லாமல் இருப்பவர்களுக்கு, அவ்வூரில் இருப்பவர்கள் அவர்களை விருந்தினராக உபசரிப்பது வழக்கம். அவர்கள், தாம் உறங்குவதற்குகுன், தம் வீட்டுத் திண்ணையில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்து அவர்களை உள்ளே வரவழைத்து விருந்தளிப்பது வழக்கம். அவ்வாறு, ஒருநாள் தலைவன் வழிப்போக்கனைப் போல்  தலைவி வீட்டுக்கு வந்தான். அவன் வந்ததைத் தலைவியின் தாய் கண்டாள். அதிலிருந்து அவள் தலைவியைக் கடுமையான காவலில் வைத்தாள். தலைவியை அவள் தாய் காவலில் வைத்தது நன்னன் செய்த பெண்கொலையைப் போன்ற கொடிய செயல் என்று தோழி கருதுகிறாள்.
சங்க காலத்தில், ஒவ்வொரு அரசனும் தன் நாட்டிலுள்ள ஒருமரத்தைக் காவல் மரமாக வைத்திருந்தான். அந்த மரத்தை வெட்டுவது, அந்த மரத்தின் கிளைகளை ஒடிப்பது, அந்த மரத்தின் காய் அல்லது பழங்களை உண்ணுவது போன்ற செயல்கள் பெருங்குற்றங்களாகக் கருதப்பட்டன. அத்தகைய குற்றங்களுக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டன. நன்னன் என்ற சிற்றரசனுக்கு மாமரம் ஒன்று காவல் மரமாக இருந்தது. அவனுடைய காவல் மரத்திலிருந்து விழுந்த காய் ஒன்று ஆற்று நீரில் மிதந்து சென்றது. அங்கு, குளிக்கச் சென்ற பெண் ஒருத்தி அந்த மாங்காயைத் தின்றாள். அதைக் கண்ட நன்னனின் வேலையாட்கள் அவனிடம் சென்று அந்தப் பெண் மாங்காயைத் தின்ற செய்தியைக் கூறினர். அதைக் கேள்வியுற்ற நன்னன், அந்தப் பெண்ணை அழைத்துவரச் சொன்னான். அப்பெண் செய்த குற்றத்திற்காக அவள் தந்தை அப்பெண்ணின் எடைக்கு ஈடாகப் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும், எண்பத்தொரு யானைகளையும் நன்னனுக்குத் தண்டனையாக அளிப்பதாகக் கூறினான். நன்னன் அதை ஏற்க மறுத்து, அப்பெண்ணைக் கொலை செய்யுமாறு தன் வேலையாட்களைப் பணித்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். நன்னன் பெண்கொலை செய்தவன் என்று பலராலும் பழிக்கப்பட்டான். அவன் செயலால் அவனது குலத்தினரும் நீங்காத பழி உற்றனர். இச்செய்தி புறநானூற்றுப் பாடல் 151 – இல் குறிப்பிடப்பட்டுள்ளது.


291. தலைவன் கூற்று

291.  தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஒருபெண்ணைக் காதலிக்கிறான். ஒருநாள், அவள் தினைப்புனத்திற்கு வரும் கிளிகளை வெருட்டுவதற்காக வந்து குளிர் என்னும் இசைக்கருவியை இசைத்துப் பாடிக்கொண்டிருந்தாள். குளிரின் ஓசையையும், அவள் பாடியதையும் கேட்ட கிளிகள், தலைவி தம்மை அழைப்பதாக எண்ணி, தினைப்புனத்திலிருந்து விலகாமல் அங்கேயே இருந்தன. அதைக் கண்ட தலைவி, தன்னால் கிளிகளை வெருட்ட முடியவில்லையே என்பதை நினைத்து அழுதுகொண்டிருந்தாள். இந்தக் காட்சி தலைவனின் உள்ளத்தில் பதிந்துவிட்டது. அவன் அதையே மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்துகொண்டிருக்கிறான். அப்பொழுது, தலைவனின் தோழன் தலைவன் இருக்கும் இடத்திற்கு வருகிறான். தலைவனின் நிலையைக் கண்ட தோழன், “உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்த ஆழ்ந்த சிந்தனை?” என்று கேட்கிறான். தோழனின் கேள்விக்குத் தலைவனின் மறுமொழியாக இந்தப் பாடல் அமைந்துள்ளது

சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற்
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே. 

கொண்டு கூட்டு: சுடுபுன மருங்கில் கலித்த ஏனல் படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிர்இசையின் இசையா இன்பாணித்துகிளி அவள் விளியென எழல் ஒல்லாஅது புலந்து அழுத கண், சாரற் குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளைவண்டு பயில் பல் இதழ் கலைஇதண்துளிக்கு ஏற்ற மலர் போன்றன
அருஞ்சொற்பொருள்: புனம் = கொல்லை (நிலம்), தினைப் புனம்; சுடுபுனம் = மரங்களை வெட்டிச் சுட்டெரித்த கொல்லை; மருங்கு = பக்கம்; கலித்த = தழைத்த; ஏனல் = தினை; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப்பெண்; குளிர் = ஒரு இசைக் கருவி; இசையா = பொருந்தி; பாணி = தாளம்; விளித்தல் = அழைத்தல்; ஒல்லுதல் = இயலுதல்; புலந்து = வெறுத்து; குண்டு நீர்ஆழமான நீர்; பை = பசுமை; பயிலுதல் = பழகுதல்; பல்லிதழ் = பல்+இதழ் = பல இதழ்கள்; கலைஇ = கலைந்து.
உரை: மரங்களை வெட்டிச் சுட்டெரித்துப் பண்படுத்திய கொல்லைப் பக்கத்தில், தழைத்து விளைந்த தினைப்புனத்தில் வந்து வீழ்கின்ற கிளிகளை ஓட்டுகின்ற, தலைவியின் (என் காதலியின்) கைகளில் உள்ள குளிர் என்னும் கருவியானது,  இசையோடு பொருந்தி, இனியதாளத்தை உடையதாக இருந்தது. அக்குளிரின் ஓசையை, தலைவி தம்மை அழைக்கும் ஓசை என்று கருதி, கிளிகள் தாம் படிந்த தினைப்புனத்திலிருந்து எழுந்து பறக்க இயலாமல் இருந்தன. கிளிகளை வெருட்ட முடியாததால், தலைவி தன் நிலையை வெறுத்து அழுதாள். கண்ணீர் வடியும் அவளுடைய கண்கள், மலைப்பக்கத்திலே உள்ள, ஆழமான நீரை உடைய பசிய சுனையில் பூத்த குவளைமலர்களில் வண்டுகள் படிந்து, பல இதழ்கள் கலைந்து, குளிர்ந்த மழைத்துளிகளை ஏற்றுக் கொண்ட  மலர்களைப் போலிருந்தன.

சிறப்புக் குறிப்பு: தினைப்புனத்தில் கிளிகளை ஓட்டுபவர்கள் மூங்கிலை வீணை போல் கட்டித் தம் விரலால் தெறித்து இசை எழுப்பும் கருவிக்குக் குளிர் என்று பெயர்

290. தலைவி கூற்று

290.  தலைவி கூற்று

பாடியவர்: கல்பொரு சிறுநுரையார்.
திணை: நெய்தல்.
கூற்று: வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள். பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று தோழி அவளுக்கு அறிவுரை கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “காமத்தின் இயல்பை அறியாத கொடியவர்கள், நான் என் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுகின்றனர்.” என்று படர்க்கையில், மற்றவர்களைப் பற்றிக் கூறுவதுபோல் தோழியிடம் வருத்தத்தோடு கூறுகிறாள்.


காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே. 

கொண்டு கூட்டு: காமம் தாங்குமதி என்போர், தாம் அஃ து அறியலர் கொல்? அனை மதுகையர் கொல்யாம் எம் காதலர்க் காணேமாயின்செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போலமெல்ல மெல்ல இல்லாகுதுமே!

அருஞ்சொற்பொருள்: மதிமுன்னிலை அசைசொல்; அனை = அத்தனை; மதுகை = மன வலிமை; செறிதல் = நெருக்கம்; துனி = துன்பம்; செறி துனி = மிகுந்த துன்பம்; பெருநீர் = வெள்ளம்; கல் = பாறை; பொருதல் = மோதுதல்.

உரை: காம நோயைப் பொறுத்துக்கொள்.” என்று கூறுபவர்கள், அக் காமத்தின் தன்மையை அறிந்திலரோ? அல்லது அவர்கள் அவ்வளவு மனவலிமை உடையவர்களோ? நாம் எம் தலைவரைக் காணாவிட்டால், மிகுந்த துன்பத்தோடு, வெள்ளத்தில் மிதந்து வந்து பாறையின் மேல் மோதும் சிறுநுரையைப் போல், மெல்ல மெல்ல அழிந்து போவோம்.

சிறப்புக் குறிப்பு: தலைவனின் பிரிவால் தலைவி  வருந்துவதைக் கண்ட அறிவில்லாதவர்கள், அவள் படும் துன்பத்தை  உணராமல், அவள் காதால் கேட்கும் வகையிலும் கண்ணால் காணும் வகையிலும் எள்ளி நகையாடுவர் என்பதைத் திருவள்ளுவரும் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

          யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
            யாம்பட்ட  தாம்படா வாறு.                                                             (குறள் – 1140)


பொருள்: அறிவில்லாதவர்கள், நாம் பட்ட துன்பத்தைத் தாம்பட்டு அறியாததால், நாம் காதால் கேட்குமாறு மட்டுமின்றிக் கண்ணாலுங் காணுமாறு நம்மை எள்ளி நகையாடுவர்.