336. தோழி கூற்று
பாடியவர்: குன்றியனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தலைமகன்
இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லி மறுத்தது.
கூற்று
விளக்கம்: தலைவனும்
தலைவியும் பகலில் சந்தித்துப் பழகி வந்தார்கள். பகலில் சந்திக்க முடியாத
சூழ்நிலை உருவாகியது. தலைவன் தோழியை அணுகி, “நான் இனிமேல் இரவில் வந்து தலைவியைச் சந்திப்பேன் என்று நீ அவளிடம் சொல்லுவாயாக.”
என்று வேண்டுகிறான். அதற்குத் தோழி, “ நீ இரவில் வர வேண்டாம்.” என்று கூறி அவன் வேண்டுகோளை
மறுக்கிறாள்.
செறுவர்க் குவகை யாகத் தெறுவர
ஈங்கனம் வருபவோ தேம்பாய் துறைவ
சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தின ளளியணீ பிரிந்திசி னோளே.
கொண்டு
கூட்டு: தேம்பாய்
துறைவ! செறுவர்க்கு உவகையாகத் தெறுவர,
ஈங்கனம் வருபவோ? நீ பிரிந்திசினோள், சிறு நா ஓள் மணி விளரி ஆர்ப்ப,
கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல, வருந்தினள்; அளியள்!
ஈங்கனம் வருபவோ? நீ பிரிந்திசினோள், சிறு நா ஓள் மணி விளரி ஆர்ப்ப,
கடுமா நெடுந்தேர் நேமி போகிய இருங்கழி நெய்தல் போல, வருந்தினள்; அளியள்!
அருஞ்சொற்பொருள்: செறுவர் = பகைவர் (இங்கு, அலர் கூறுவோரைக்
குறிக்கிறது); உவகை = மகிழ்ச்சி;
தெறுவருதல் = மனம் சுழன்று வருந்துதல்;
ஈங்கனம் = இங்கே; விளரி
= நெய்தல் நிலத்திற்குரிய இரங்கற் பண்; ஆர்ப்ப
= முழங்க; கடுமா = விரைவாகச் செல்லும் குதிரை; நேமி = சக்கரம்; கழி = கடல் சார்ந்த நீர்நிலை; அளியள் = இரங்கத் தக்கவள்.
உரை: பூக்களிலிருந்து
தேன் சிந்திப் பரவும் நெய்தல் நிலத்தலைவனே! எம்மை வருத்தும் அலர் கூறுவோர் மகிழுமாறு,
நாங்கள் துன்புற, இரவில் நீ இங்கே வரலாமா? நீ பிரிந்த தலைவி, சிறிய நாவையுடைய ஒள்ளிய மணிகள் விளரிப்பண் போல
ஒலிக்க, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய தேரின் சக்கரம்
மேலே ஏறிப்போனதால் நலிந்த, கரிய கழியில் உள்ள நெய்தல் மலரைப்
போல, வருத்தம் அடைந்தாள். அவள் இரங்கத்
தக்கவள்!
சிறப்புக்
குறிப்பு:
தலைவனும்
தலைவியும் பகலில் சந்திக்க முடியவில்லை. தலைவனைக் காணாமல் தலைவி
வருந்துகிறாள். தலைவனும் அவளை காண விழைகிறான். அதனால், அவன் ஆர்வத்தோடு, இரவில்
வருவதாகக் கூறுகிறான். ”நீ இரவில் வந்தால் அலர் பேசுவோர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மற்றும், இரவில் வருவதால் உனக்குப் பல இன்னல்கள் நேரிடலாம்.
அவற்றை நினைத்துத் தலைவி வருந்துவாள்.” என்று தோழி
கூறுகிறாள். இரவில் வருவது சிறந்த செயலன்று என்று தலைவன் உணர்ந்தால்,
அவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான்
என்ற நோக்கத்தோடு தோழி இவ்வாறு கூறுகிறாள்.
இப்பாடலில், தலைவனைத் துறைவன் என்று குறிப்பிட்டிருப்பதாலும், நெய்தல்
நிலத்திற்குரிய விளரிப் பண்ணைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், கழியில் உள்ள நெய்தல் மலரைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதாலும், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்பட வேண்டும்.
No comments:
Post a Comment