337. தலைவன் கூற்று
பாடியவர்: பொதுக்கயத்துக்
கீரந்தையார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழியை
இரந்து பின்னின்ற கிழவன்,
தனது குறையறியக் கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவியைக்
கண்டு தலைவன் காதலுற்றான்.
அவளை மீண்டும் சந்தித்து அவளோடு பழக விரும்புகிறான். தலைவியைச் சந்திப்பதற்குத் தோழியின் உதவியை நாடிவந்து, அவளைப் பலமுறை பணிவோடு வேண்டுகிறான். ”அவள் மிகவும் இளையவள். நீ அவளைக் காதலிப்பது முறையன்று.” என்று கூறித் தோழி
அவன் வேண்டுகோளை மறுக்கிறாள். தோழியின் கூற்றுக்கு மறுமொழியாகத்
தலைவன், “ நீ கூறுவதுபோல், அவள் மிகவும்
இளையவளாக எனக்குத் தோன்றவில்லை. அவள் அழகால் என்னை வருத்துகிறாள்.”
என்று கூறுகிறான்.
முலையே
முகிழ்முகிழ்த் தனவே தலையே
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.
கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந் தனவே
செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின
சுணங்குஞ் சிலதோன் றினவே யணங்குதற்
கியான்ற னறிவலே தானறி யலளே
யாங்கா குவள்கொ றானே
பெருமுது செல்வ ரொருமட மகளே.
கொண்டு
கூட்டு:
முலை
முகிழ் முகிழ்த்தன;
தலை கிளைஇய மென்குரல் கிழக்கு வீழ்ந்தன; செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின; சுணங்கும்
சில தோன்றின. அணங்குதற்கு யான் தன் அறிவல்; தான் அறியலள். பெருமுது செல்வர் ஒருமட மகள் தான் யாங்கு ஆகுவள் கொல்?
அருஞ்சொற்பொருள்: முகிழ் = அரும்பு; கிளைஇய = கிளைத்த,
நிறைந்த; குரல் = மயிர்க்கொத்துக்கள்;
கிழக்கு வீழ்தல் = கீழே தொங்குதல்; செறிதல் = நெருங்குதல்; நிரை
= வரிசை; பறிதல் = வெளிப்படுதல்;
பறிமுறை = பல் விழுந்து முளைத்தல்; சுணங்கு = தேமல்; அணங்கு
= வருத்தும் அழகு; அணங்குதற்கு = அவளால் வருத்தும் பொருட்டு; மடமகள் = இளமை பொருந்திய பெண் (தலைவி).
உரை: தலைவியின் முலைகள்
அரும்புகளைப் போல் அரும்பின; தலையில் நிறைந்துள்ள மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழே தாழ்ந்தன;
நெருக்கமாகவும் வரிசையாகவும் உள்ள வெண்மையான பற்கள், முறையாக விழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; தேமலும்
சில தோன்றின. அவள்
என்னை வருத்தும் அழகுடைய பருவத்தினள் என்பதை நான் அறிவேன்; அவள்
அதனை அறியாள். பெரிய
பழமையான செல்வந்தருடைய ஒப்பற்ற இளமை பொருந்திய தலைவியாகிய ஒரே மகள், எத்தன்மையை உடை யவள் ஆவாளோ? (எப்படிப்பட்டவளோ?)
No comments:
Post a Comment