340. தலைவி கூற்று
பாடியவர்: அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி (இரவிலே தலைவனும்
தலைவியும் சந்திப்பதற்காகக் குறிக்கப்பட்ட இடம்) உணர்த்திய
தோழிக்குக் கிழத்தி மறுத்தது.
கூற்று
விளக்கம்: இப்பாடலில், இரவுக்குறியைப் பற்றிய செய்தியோ, அல்லது தலைவி தலைவனை
இரவிலே சந்திப்பதற்குத் தலைவி மறுப்பதைப் பற்றிய
செய்தியோ இல்லை. ஆகவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள
கூற்று பொருத்தமானதாகத் தோன்றவில்லை. தலைவன் மீது காதல் அதிகமாகும்
பொழுது தன் நெஞ்சு அவனிடமும், அவனைப் பிரிந்து வருந்தும் பொழுது
மீண்டும் தன்னிடமும் தன் நெஞ்சு வந்து அலைவதாகத் தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம்
பகிர்ந்துகொள்கிறாள். இதுவே இப்பாடலில் உள்ள கருத்து.
காமங் கடையிற் காதலர்ப் படர்ந்து
நாமவர்ப் புலம்பி னம்மோ டாகி
ஒருபாற் படுதல் செல்லா தாயிடை
அழுவ நின்ற அலர்வேய் கண்டல்
கழிபெயர் மருங்கி னொல்கி யோதம்
பெயர்தரப் பெயர்தந் தாங்கு
வருந்துந் தோழியவ ரிருந்தவென் நெஞ்சே.
கொண்டு
கூட்டு:
தோழி! அவர் இருந்த என் நெஞ்சு, காமங் கடையின் காதலர்ப்
படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி, ஒருபாற் படுதல் செல்லாது ஆயிடை அழுவம் நின்ற அலர்வேய் கண்டல், கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர்தர, பெயர் தந்தாங்கு வருந்தும்!
நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி, ஒருபாற் படுதல் செல்லாது ஆயிடை அழுவம் நின்ற அலர்வேய் கண்டல், கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் பெயர்தர, பெயர் தந்தாங்கு வருந்தும்!
அருஞ்சொற்பொருள்: கடைதல் = மிகுதல்; கடையின் = மிகுந்தால்;
படர்ந்து = நினைத்துச் சென்று; புலம்பின் = வருந்தினால்; ஆயிடை
= அவ்விடம், அக்காலத்து; அழுவம் = கடற்பரப்பு; அலர் வேய்
= மலர்கள் பொருந்திய; கண்டல் = தாழை; ஒல்கி = சாய்ந்து;
ஓதம் = வெள்ளம்.
உரை: தோழி!, நம் காதலர் இருந்த என் நெஞ்சு,
காமம் மிகுந்தால் அவரை நினைத்து அவரிடம் செல்லுகிறது.
நாம் அவரைப் பிரிந்து வருந்தும்
பொழுது நம்மிடம் திரும்பி வந்துவிடுகிறது.
கடற்கரையில் வளர்ந்து நின்ற மலர்களையுடைய தாழை, கழியின் பக்கம் அலை வரும்பொழுது அப்பக்கமாகச் சாய்ந்து, அந்த அலை கடலின் பக்கம் திரும்பிச் செல்லும்பொழுது தானும் கடற்பக்கம் சாய்கிறது.
இருபக்கமும் சாயும் தாழையைப்போல், என் நெஞ்சு என்
தலைவரிடமும் என்னிடமும் மாறிமாறி அலைந்து வருந்துகிறது.
No comments:
Post a Comment