341. தலைவி கூற்று
பாடியவர்: மிளைகிழார்
நல்வேட்டனார்.
திணை: நெய்தல்.
கூற்று : பருவவரவின்கண்
வேறுபடுமெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று
விளக்கம்: தலைவன்
திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்தது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று கவலைப்பட்ட தோழிக்கு, “அவர்
செய்ய வேண்டிய செயலைச் செய்து முடித்தபின் வருவார் என்ற நம்பிக்கையால், நான் மனவலிமையோடு அவர் பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவர் வரும்வரை உயிர் வாழ்வேன்.”
என்று தலைவி கூறுகிறாள்.
பல்வீ
பட்ட பசுநனைக் குரவம்
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழியென் வன்க ணானே.
பொரிப்பூம் புன்கொடு பொழிலணிக் கொளாஅச்
சினையினி தாகிய காலையுங் காதலர்
பேணா ராயினும் பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவ தன்றென
வலியா நெஞ்சம் வலிப்ப
வாழ்வேன் தோழியென் வன்க ணானே.
கொண்டு
கூட்டு:
தோழி! பல்வீ பட்ட பசுநனைக் குரவம், பொரிப்பூம்
புன்கொடு பொழில் அணிக்கொளாஅச் சினை இனிதாகிய காலையும் காதலர் பேணாராயினும், பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம்
வலிப்ப என் வன்கணான் வாழ்வேன்!
அருஞ்சொற்பொருள்: வீ = பூ; நனை = அரும்பு; குரவம் = குரா மரம்; புன்கு
= புன்க மரம்; பொழில் = சோலை;
கொளாஅ = கொண்டு; சினை
= கிளை; பேணுதல் = பாதுகாத்தல்;
கண்ணுதல் = கருதுதல்; கடவது
= தவறுவது; வலிதல் = துணிதல்;
வன்கண் = மனத்திண்மை.
உரை: தோழி! பல மலர்களையும் பசுமையான அரும்புகளையும் உடைய குராமரமும், நெற்பொரியைப் போன்ற பூக்களையுடைய புன்க மரமும் சேர்ந்து சோலை அழகாக உள்ளது.
இம் மரங்களின் கிளைகள் கண்ணுக்கு இனியவையாகக் காட்சி அளிக்கின்றன.
இத்தகைய அழகிய காலத்திலும், தலைவர் நம்மை
பாதுகாக்கவில்லை என்றாலும், பெரியோர் தம் உள்ளத்திலே நினைத்த
வீரச்செயலைச் செய்து முடிக்கத் தவறுவது இல்லை என்று எண்ணி, முன்பு துணிவில்லாமல் இருந்த என் நெஞ்சம், பின்னர் துணிவு பெற்றது. அந்தத் துணிவினால்,
நான் உயிர் வாழ்வேன்.
சிறப்புக்
குறிப்பு:
“நம்மிடம் அன்புடைய தலைவர், தாம் மேற்கொண்ட செயலைச் செய்து
முடிக்காவிட்டாலும் குறித்த காலத்தில் திரும்பிவருவார்.” என்று
தலைவி முதலில் நினைத்தாள். பின்னர், “அவர்
தான் மேற்கொண்ட பணியைச் செய்து முடித்த பிறகுதான் வருவார். அதனால்,
நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.” என்று முடிவு
செய்தாள். அவ்வாறு முடிவு
செய்தாலும் தலைவன் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு மனவலிமை வெண்டுமாதலால். “தலைவர் மீது எனக்குள்ள நம்பிக்கையால் மனவலிமை பெற்றேன். அதனால் நான் உயிர் வாழ்வேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
குரவமும் புன்கும்
இளவேனிற் காலத்தில் மலரும் மலர்கள் என்ற செய்தி ஐங்குறுநூற்றின் இளவேனிற் பத்து என்ற
பகுதியில் உள்ள பாடல்கள்
344 மற்றும் 347 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அவரோ
வாரார் தான்வந் தன்றே
நறும்பூங்
குரவம் பயந்த
செய்யாப்
பாவை கொய்யும் பொழுதே!
(ஐங்குறுநூறு – 344)
பொருள்: நறுமணம் கொண்ட பூக்களையுடைய குரா மரமானது பயந்துள்ள செய்த பாவை போன்ற பூக்களைக்
கொய்யும் பருவமான இளவேனிலும் வந்ததே! அவரோ, இன்னும் வாராதிருக்கின்றனரே!
அவரோ
வாரார் தான்வந் தன்றே
எழிற்றகை
இளமுலை பொலிய
பொரிப்பூம்
புன்கின் முறிதிமிர் பொழுதே! (ஐங்குறுநூறு – 347)
பொருள்: எழிலின் தகைமை எல்லாம் ஒருங்கே பொருந்திய என் இளைய முலைகள் பொலிவு அடையும்படியாக,
பொரிபோலும் பூக்களையுடைய புன்கினது தளிர்களை அணிகின்ற இளவேனிற்பொழுதும்
இதோ வந்தது. அவர் இன்னும் வந்தாரல்லர்!
No comments:
Post a Comment