346. தோழி கூற்று
பாடியவர்: வாயில் இளங்கண்ணனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி
கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
பகலில் வந்து தலைவியைச் சந்திக்கிறான். ஆனால், பகற்பொழுதில் அவனால் அதிகநேரம் தலைவியோடு அளவளாவ முடியவில்லை. அவன் மாலை நேரத்தில் தலைவியைவிட்டுப் பிரிய வேண்டியதை நினத்து வருந்துகிறான்.
அவன் இரவில் வந்து தலைவியைக் காண விழைகிறான். தன்
விருப்பத்தைத் தோழியிடம் சொல்ல விரும்புகிறான். ஆனால்,
அவனால் அதை வெளிப்படையாகக் கூற முடியவில்லை. தலைவன்
சொல்ல விரும்புவதை அறிந்த தோழி, தலைவிக்கு அதை உணர்த்தி, அவனை இரவில் சந்திப்பதற்கு
உடன்படுமாறு கூறுகிறாள்.
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.
குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப
மன்றம் போழு நாடன் தோழி
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும்
காலை வந்து மாலைப் பொழுதில்
நல்லக நயந்துதான் உயங்கிச்
சொல்லவும் ஆகா தஃகி யோனே.
கொண்டு
கூட்டு:
தோழி! நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங்களிறு, குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப மன்றம் போழும் நாடன், காலை வந்து சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும், தினைப்புன மருங்கிற் படுகிளி
ஓப்பியும், மாலைப் பொழுதில், நல்லகம்
நயந்து தான் உயங்கிச் சொல்லவும் ஆகாது, அஃகியோன்.
அருஞ்சொற்பொருள்: நாகு = இளமை; பிடி = பெண்யானை; முளை = மூங்கில் முளை;
நண்ணி = பொருந்தி; ஆர்த்தல்
= ஆரவாரித்தல்; போழ்தல் = பிளத்தல்; தொடலை = மாலை;
ஓப்புதல் = ஓட்டுதல்; அகம்
= நெஞ்சம்; உயங்கி = வருந்தி;
அஃகல் = சுருங்குதல் (சோர்வடைதல்).
உரை: தோழி! இளம் பெண்யானையை விரும்பிய, மூங்கில் முளையைப் போன்ற வெண்மையான கொம்பையுடைய
இளைய ஆண்யானை, மலையை அடைந்து, அங்குள்ள
குறவர் ஆரவாரம் செய்ததால், ஊரில் உள்ள பொதுவிடத்தைப் பிளந்துகொண்டு
ஓடும். அத்தகைய நாட்டையுடைய
தலைவன், பகலில்
வந்து, சுனையில் மலர்ந்த குவளை மலர்களை மாலையாக உனக்குத்
தந்தும், தினைக் கொல்லையில்
வந்து வீழ்கின்ற கிளிகளை நம்மோடு சேர்ந்து ஓட்டியும், பிறகு வந்த
மாலைக்காலத்தில், நல்ல நெஞ்சத்தில் ஏதோ ஒன்றை விரும்பி, வருந்தி, அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும் எழுச்சி
பெறாமல், சோர்வடைகின்றான்.
சிறப்புக்
குறிப்பு:
இளம்
பெண்யானையை விரும்பிய ஆண்யானை குன்றம் நண்ணும் என்றது உன்னை விரும்பிய தலைவன்
ஊராரின் அலருக்கு அஞ்சி நம் மனையகத்தே இரவில் வருவான் என்ற குறிப்பை உணர்த்தியது.
No comments:
Post a Comment