347. தலைவன் கூற்று
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துச்
சேந்தங் கண்ணனார்.
திணை: பாலை.
கூற்று : பொருள்
வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது. (வலிக்கும் – பொருள் தேட வேண்டுமென்று வற்புறுத்தும்;
செலவு அழுங்குதல் –பிரிதலைத் தவிர்த்தல்.
இது தலைவியைப் பிரிந்து செல்லாமை அன்று. இது தலைவியை
ஆற்றுவித்துப் பின்னர் செல்வதைக் குறிக்கிறது.)
கூற்று
விளக்கம்: பொருள்
தேடுவதற்காகத் தலைவியைப் பிரிய எண்ணிய தலைவன் தன் நெஞ்சத்தை நோக்கி, ”தலைவியும் உடன் வருவாளாயின் நாம் பிரிதல் கூடும்" என்று கூறித் தலைவன்
தான் செல்லுவதைத் தவிர்த்தான்.
மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதற்
குமரி வாகைக் கோலுடை நறுவீ
மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்
கான நீளிடைத் தானு நம்மொடு
ஒன்றுமணஞ் செய்தனள் இவளெனின்
நன்றே நெஞ்சம் நயந்தநின் துணிவே.
கொண்டு
கூட்டு:
நெஞ்சம்! மல்குசுனை புலர்ந்த நல்கூர் சுரமுதல், குமரி
வாகைக் கோல் உடை நறுவீ மடமாத் தோகைக் குடுமியின் தோன்றும், கான நீள்இடை, இவள் தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் எனின் நயந்த நின் துணிவு நன்றே!
அருஞ்சொற்பொருள்: மல்குதல் = நிறைதல்; சுனை = குளம்;
புலர்தல் = வற்றுதல்; நல்கூர்தல்
= வறுமைப்படுதல் (இங்கு, வறண்டு இருப்பதைக் குறிக்கிறது.); சுரம் = பாலைநிலம்; முதல் = இடம்;
குமரி = இளமை; வாகை
= ஒருவகை மரம்; கோல் = கொம்பு;
வீ = மலரிதழ்; மடம்
= இளமை; மா = கருமை;
தோகை = மயில்; குடுமி
= உச்சிக் கொண்டை; கானம் = காடு; மணத்தல் = கூடுதல்;
நயந்த = விரும்பிய.
உரை: நெஞ்சே! முன்பு நீர் நிறைந்த சுனை வற்றியதால், வறண்ட பாலைநிலத்தில் வளர்ந்த, இளைய வாகைமரத்தின் நீண்ட
கொம்பையுடைய மணமுள்ள மலரிதழ்கள், இளமை பொருந்திய கரிய மயிலின் உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றும். அந்தப் பாலைநிலத்தில் உள்ள நீண்ட காட்டு வழியில், இத்தலைவி நம்மொடு ஒன்று சேர்ந்து வருவாளானால்,
பொருள் ஈட்ட விரும்பிய உன் துணிவு நன்மையுடையதே ஆகும்.
No comments:
Post a Comment