Sunday, June 18, 2017

357. தோழி கூற்று

357. தோழி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : தோழி, கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்திக்கொண்டு, களவொழுக்கத்தையே விரும்பித் தலைவியோடு பழகி வந்தான். ஒருநாள் அவன் தலைவியைக் காண்பதற்கு, அவள் வீட்டிற்கு வந்து வேலிக்கு வெளியே நின்றுகொண்டிருக்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, தலைவியை நோக்கி, “ நீ தலைவனோடு பழகுவதற்குமுன், உன் தோள்கள் அழகுடையனவாக இருந்தனஎன்று தலைவன் காதில் கேட்குமாறு கூறுகிறாள்.

முனிபடர் உழந்த பாடில் உண்கண்
பனிகால் போழ்ந்து பணையெழில் ஞெகிழ்தோள்
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு
நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய
ஏனலஞ் சிறுதினை காக்குஞ் சேணோன்
ஞெகிழியிற் பெயர்ந்த நெடுநல் யானை
மின்படு சுடரொளி வெரூஉம்
வான்தோய் வெற்பன் மணவா ஊங்கே. 

கொண்டு கூட்டு: முனிபடர் உழந்த பாடுஇல் உண்கண் பனிகால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ்தோள்  மெல்லிய ஆகலின், ஏனலம் சிறுதினை காக்கும் சேணோன்  ஞெகிழியின் பெயர்ந்த நெடுநல் யானை,  மீன்படு சுடரொளி வெரூஉம்வான்தோய் வெற்பன் மணாவா ஊங்கு மேவரத் திரண்டு  நல்ல என்னுஞ் சொல்லை மன்னிய.

அருஞ்சொற்பொருள்: முனிதல் = வெறுத்தல்; படர் = துன்பம்; பாடு = படுதல் (கண்படுதல், உறங்குதல்); உண்கண் = மை தீட்டிய கண்; கால் போழ்தல் = குறுக்கே வீழ்தல்; பணை = மூங்கில்; ஞெகிழ்தல் = மெலிதல்; மேவருதல் = விரும்புதல்; மன்னுதல் = பொருந்துதல், நிலைபெற்று உறுதியாக நிற்றல்; ஏனல் = தினை; சேணோன் = உயரமான பரணிலிருந்து தினைப்புனம் காப்பவன்; ஞெகிழி = கொள்ளி; மீன்படு சுடரொளி = வீண்மீன் விழுவதால் தோன்றும் ஒளி; வெரூஉம் = அஞ்சும்; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; மணத்தல் = தழுவுதல்.


உரை:  வெறுக்கத்தக்க துன்பத்தால் வருந்தி, உறக்கமில்லாத, மைதீட்டிய உன் கண்களிலிலிருந்து வடியும் கண்ணீர்த் துளிகள் குறுக்கே வீழ்ந்து, மூங்கில் போன்ற அழகிய தோள்கள் தளர்ச்சி அடைந்து மெலிந்தன. அதனால், தினைப்புனத்தில் உள்ள அழகிய சிறிய தினையைக் காக்கின்ற, பரணின் மேலுள்ள குறவனது, கொள்ளிக் கட்டையைக் கண்டு, அஞ்சி ஓடிய  உயர்ந்த நல்ல யானை, விண்மீன் வீழ்வதனால் உண்டாகிய மிகுந்த  ஒளியைக் கண்டு அஞ்சுகின்ற, வானளாவிய மலையையுடைய தலைவன், உன்னைக்கூடி மகிழ்வதற்குமுன், உன் தோள்கள் காண்போர் விரும்பும்படி பருத்து,  இவை நன்றாகா அழகாக உள்ளன என்ற சொல்லைப் பெற்று, அவர்களால் பாராட்டப்பட்டன

No comments:

Post a Comment