358. தோழி கூற்று
பாடியவர்: கொற்றனார்.
திணை: முல்லை.
திணை: முல்லை.
கூற்று : தலைமகன்
பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறித் தலைவியைப் பிரிந்து சென்றான். அவன் பிரிவால் வருந்தும் தலைவியைக் கண்ட தோழி, “ இதோ
பார்! முல்லைக் கொடிகள் அரும்பின; கார்காலம்
வந்துவிட்டது. உன் துன்பம்
தீரப் போகிறது. உன் தலைவன் விரைவில் திரும்பிவந்துவிடுவான்”
என்று கூறித் தலைவியை ஆற்றுவிக்கிறாள்.
வீங்கிழை நெகிழ விம்மி யீங்கே
எறிகண் பேதுற லாய்கோ டிட்டுச்
சுவர்வாய் பற்றுநின் படர்சே ணீங்க
வருவேம் என்ற பருவம் உதுக்காண்
தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப்
பல்லான் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன முல்லைமென் முகையே.
கொண்டு
கூட்டு:
வீங்கு
இழை நெகிழ விம்மி,
ஈங்கு எறிகண் பேதுறல்! ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர்சேண் நீங்க, வருவேம் என்ற பருவம்
உதுக்காண்! முல்லை மென் முகை, தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் பல்லான் கோவலர்
கண்ணிச் சொல்லுப அன்ன.
அருஞ்சொற்பொருள்: வீக்கம் = இறுக்கம்; இழை = அணிகலன்;
நெகிழ்தல் = இளகுதல் (கழலுதல்);
விம்மி = அழுது; பேதுறல்
= அறிவு மயங்குதல்; ஆய்கோடு = ஆராய்கின்ற கோடுகள் (தலைவரைப் பிரிந்த பொழுது,
சுவரில் ஒருநாளுக்கு ஒரு கோடு இட்டு, நாள்களைக்
கணக்கிடுவது வழக்கிலிருந்தது.); படர் = துன்பம்; சேண் நீங்க = நெடுந்தூரம்
போகும்படி நீங்க
(முற்றிலும் நீங்க); உதுக்காண் = அதோ பார்; பனிகூர் = குளிர் மிகுந்த;
பல்லான் = பல பசுக்கள்; கோவலர்
= இடையர்; கண்ணி = தலைமேல்
சூடப்படும் மாலை.
உரை: இறுக்கமாக
இருந்த அணிகலன்கள் நெகிழும்படி அழுது, இவ்வாறு நீர்த்துளிகளைச்
சிந்தும் கண்களுடன் மயங்கற்க! தலைவர் சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்காகச்
சுவரில் கோடுகளைக் கிழித்து, அச்சுவரைப் பற்றி நிற்கின்ற,
உனது துன்பம், நெடுந் தூரம் போகும்படி, தான் திரும்பி வருவதாகத் தலைவர்
கூறிய, கார்காலம் வந்ததைப் பார்! முல்லையின்
மெல்லிய அரும்புகள், தலைவரைப் பிரிந்து தனிமையில் இருப்பவர்கள் வருந்துதற்குக் காரணமாகிய
குளிர்ச்சி மிகுந்த மாலைக்காலத்தில், பல பசுக்களை உடைய
இடையர்கள் தம் தலையில் சூடிய மாலைகளிலிருந்து, இப்பருவம் வந்ததை சொல்லுவதைப்போல் உள்ளன.
சிறப்புக்
குறிப்பு:
தலைவனைப்
பிரிந்து வாழும் தலைவியர்,
அவர் பிரிந்து சென்ற நாட்களைக் கணக்கிடுவதற்குச் சுவரில் கோடுகளைக் கிழிப்பது
வழக்கம் என்பது திருக்குறளிலும் கூறப்பட்டுள்ளது.
வாளற்றுப்
புற்கென்ற கண்ணு மவர்சென்ற
நாளொற்றித்
தேய்ந்த விரல். (குறள் - 1261)
பொருள்: அவர் பிரிந்துசென்ற நாட்களைக் கணக்கிடுவதற்காகச் சுவரில் கோடிட்டு,
அக் கோடுகளைத் தொட்டுத்தொட்டு எண்ணியதால் என் விரல்கள் தேய்ந்து போயின.
அது மட்டுமல்லாமல், அவர் வரும் வழியைப் பார்த்துப்
பார்த்து என் கண்களும் ஒளி இழந்தன.
No comments:
Post a Comment