377.
தலைவி கூற்று
பாடியவர்: மோசிக்
கொற்றனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை
ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று
விளக்கம்: தலைவன்
தலைவியை மண்ந்துகொள்வதற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி உடல் மெலிந்து
காணப்பட்டாள். தன் தோற்றத்தில் உள்ள மாற்றங்களைக் கண்டு,
தனக்காகக் கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “ என் உடல் மெலிந்தாலும், நான் தலைவனின் நல்லியில்புகளை
எண்ணிப் பிரிவைப் பொறுத்துகொண்டிருக்கிறேன். நீ ஏன் இவ்வாறு வருந்துகிறாய்?”
என்று வினவுகிறாள்.
மலரேர்
உண்கண் மாணலந் தொலைய
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே.
வளையேர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும்
மாற்றா கின்றே தோழியாற் றலையே
அறிதற் கமையா நாடனொடு
செய்து கொண்டதோர் சிறுநன் னட்பே.
கொண்டு
கூட்டு:
தோழி! அறிதற் கமையா நாடனொடு செய்து கொண்டது ஓர்
சிறுநல் நட்பு, மலர்ஏர் உண்கண் மாண்நலம் தொலைய வளைஏர் மென்றோள் ஞெகிழ்ந்ததன் தலையும் மாற்று ஆகின்று; ஆற்றலையே.
அருஞ்சொற்பொருள்: ஏர் = போன்ற; உண்கண் = மை தீட்டிய கண்;
மாண் = சிறந்த; தொலைய
= நீங்க; வளையேர் = வளை ஏர் = வலையல்கள் பொருந்திய; நலம் = அழகு; மாற்று = பரிகாரம்.
உரை: தோழி! நம்மால் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முடியாத இயல்பினை உடையவன் தலைவன்.
அவனோடு நாம் செய்துகொண்டது ஒரு சிறிய நல்ல நட்பு. அந்த நட்பு,
பூவைப் போன்ற என் மையுண்ட கண்களின் சிறந்த அழகு நீங்க, வளையையுடைய அழகிய மெல்லியதோள் நெகிழ்ந்ததன் மேலும், அத்துன்பங்கள்
தீர்தற்குரிய பரிகாரமாக உள்ளது. அது கருதியே, அவன் பிரிவால் தோன்றிய வருத்தத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், நீ என் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவளாக இருக்கின்றாயே!