Sunday, April 26, 2015

பாடல் - 15

15. பாலை - செவிலி கூற்று

பாடியவர்: ஔவையார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஔவையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் காண்கிறோம்.  சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய ஔவையார் மற்ற ஔவையார்களைவிடக் காலத்தால் முந்தியவர்.  இவர் புறநானூற்றில் 33 பாடல்களும், அகநானூற்றில் 4 பாடல்களும், குறுந்தொகையில் 15 பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும் இயற்றியவர்.  இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி ஆகிய பல அரசர்களைப் பற்றிப் பாடிய 33 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.
            சங்க காலத்துப் புலவராகிய ஔவையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) ஔவையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர். 
            அடுத்து, மற்றுமொரு ஔவையார் கம்பர், ஒட்டக்கூத்தர் முதலிய புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர்.  இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர்.  இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி முதலிய நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.
            அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் ஔவையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது.  இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன.  விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும்  நூல் ஔவையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.  இவர் ஞானக்குறள் எழுதிய ஔவையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
            ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல ஔவையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து ஔவையார் காலத்தால் முந்தியவர்.  அவர் பாடல்கள்தான் புறநானூற்றில் அடங்கி உள்ளன.  ஔவையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

பாடலின் பின்னணி: ஒரு தலைவனும் தலைவியும் தற்செயலாகச் சந்தித்தார்கள். அவர்கள் நெருங்கிப் பழகிக் கருத்தொருமித்தனர். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். ஆனால், தலைவியின் பெற்றோர்கள் அவர்களுடைய  திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் தங்கள் ஊரைவிட்டு வெளியேறுகிறார்கள். தலைவனும் தலைவியும் தங்கள் ஊரைவிட்டு வெளியூருக்குப் போவதற்குத்  தோழியும் தோழியின் தாயும் உதவியாக இருந்தார்கள். ஆகவே, தலைவனும் தலைவியும் ஊரைவிட்டுச் சென்ற செய்தி அவர்களுக்குத் தெரியும். அது மட்டுமல்லாமல், தலைவனும் தலைவியும் வெளியூருக்குச் சென்று திருமணம் செய்துகொண்டார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். பொழுது விடிந்த பின்னர், தன் மகளைக் காணவில்லையே என்று தலைவியின் தாய் தேடுகிறாள். தன் மகள் எங்கே போயிருக்கக்கூடும் என்று தன் மகளின் தோழியின் தாயைக் கேட்கிறாள். ” நீங்கள் அவர்களின் திருமணத்திற்குச் சம்மதிக்காததால், உன் மகளும் அவள் காதலனும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். இந்நேரம் அவர்களுடைய திருமணம் நடந்து முடிந்திருக்கும். அவர்கள் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். ஆகவே, உன் மகள் சிறப்பாகத் தன் கணவனோடு இல்வாழ்க்கை நட்த்துவாள். நீ வருந்தாதே.” என்று தோழியின் தாய் தலைவியின் தாய்க்கு ஆறுதல் கூறுகிறாள்.
பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே. 

அருஞ்சொற்பொருள்: பறை = முரசு; பணிலம் = சங்கு; ஆர்த்தல் = ஒலித்தல்; இறை = தங்கல்; கொள்பு = கொண்டு; தொல் = பழைய ; மூது = பழைமை ; ஆலத்து = ஆலமரத்து; பொதியில் = பொதுவிடம் ; கோசர் = பழைய வீரர் குடியினருள் ஒரு சாரார் ; வாய் = உண்மை; ஆய் = அழகு; கழல் = ஆடவர் காலில் அணியும் அணிகலன்; சேயிலை = செம்மையாகிய இலை; வெள்வேல் = வெண்மையான் வேல் ; விடலை = பாலை நிலத் தலைவன், வீரன், ஆண்மகன்.

உரை: அழகிய வீரக் கழலையும், செம்மையாகிய இலையை உடைய வெண்மையான வேலையும் கொண்ட, பாலை நிலத்தலைவனோடு, பல வளையல்களை தன் முன்கைகளில்  அணிந்த உன்மகள் செய்த நட்பானது, நாலூரில் மிகப்பழைய ஆல மரத்தடியின்கண் உள்ள பொதுவிடத்தில் தங்கியிருந்த கோசரது நன்மையுடைய மொழி உண்மையாவதைப் போல, முரசு முழங்கவும், சங்கு ஒலிக்கவும், திருமணம் செய்துகொண்டதால் உண்மை ஆகியது.
விளக்கம்: தொல்காப்பியத்தில் அறத்தொடு நிற்றல்என்ற ஒருசெய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அகத்திணைப் பாடல்களில் காதல் வாழ்க்கையை களவுகற்பு என்று இரண்டாகப் பிரிப்பது வழக்கம். திருமணத்திற்கு முந்திய காதல் வாழ்கை களவு என்றும் திருமணத்திற்குப் பிந்திய காதல் வாழ்க்கை கற்பு என்றும் கருதப்பட்டது. தலைவனும் தலைவியும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்ததை முறையாக வெளிப்படுத்துவது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் காதல் தோழிக்குத் தெரியும். தக்க சமயத்தில் தோழி, தலைவன்தலைவி காதலைத் தன் தாய்க்குத் தெரிவிப்பாள். தோழியின் தாய் அந்தச் செய்தியைத் தலைவியின் தாய்க்குத் தெரிவிப்பாள். தலைவியின் தாய் தன் கணவனுக்குத் தெரிவிப்பாள். பின்னர் திருமணம் நடைபெறும். இவ்வாறு தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் தலைவன்தலைவியின் காதலை முறையாக  வெளிப்படுத்துவதின் நோக்கம் அவர்கள் காதல் திருமணத்தில் நிறைவு பெறவேண்டும் என்பதுதான். தலைவன்தலைவியின் காதல், களவொழுக்கத்திலிருந்து கற்பொழுக்கமாக மாறுவதற்காகத் தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் செய்யும்  செயல்கள் அறத்தொடு நிற்றல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இப்பாடலில், தலைவன்,தலைவி  ஆகியோர் பெற்றோரைவிட்டுப் பிரிந்து செல்வதால், இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


பாடல் - 14

14. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: தொல்கபிலர். இவர் அகநானூற்றில் ஒரு செய்யுளும் (282), குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (14), நற்றிணையில் நான்கு செய்யுட்களும் (114, 276, 328, 399) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: இந்தப் பாடலைப் புரிந்துகொள்வதற்கு சங்க காலத் தமிழர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும். ஆணும் பெண்ணும் தற்செயலாகச் சந்தித்துப் பழக ஆரம்பிப்பது இயற்கைப் புணர்ச்சி என்றும், சந்தித்த பின்னர் ஒருவர் உள்ளத்தைப் ஒருவர் புரிந்துகொண்டு பழகுவது உள்ளப் புணர்ச்சி என்று அழைக்கப்பட்டது. அவர்கள் பலமுறை சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டபிறகு அவர்கள் வாழ்க்கையில் அடுத்த நிகழ்வு திருமணம். பெற்றோர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டல், காதலர்கள் தங்கள் ஊரைவிட்டு வேறு ஊருக்குச் சென்று முறையாகத் திருமணம் செய்துகொள்வது வழக்கம். பெண்ணின் பெற்றொர்கள் திருமணத்திற்குச் சம்மதிக்காவிட்டால், அவர்களைச் சம்மதிக்க வைப்பதற்காக காதலன் மடலேறுவதும் உண்டு.
தன் காதலியைத் தனக்குத் திருமணம் செய்துகொடுக்க அவள் பெற்றொர்கள் மறுத்தாலோ அல்லது தன் காதலி தன்னைச் சந்திக்க மறுத்தாலோ, காதலன் தன் உடம்பில் சாம்பலைப் பூசிக்கொண்டு, தலையில் எருக்கம் பூவாலான மாலையை அணிந்துகொண்டு, காதலியின் உருவம் வரைந்த படமும் அதில் அவள் பெயரையையும் எழுதி, அப்படத்தைக் கையிலேந்தி, பனைமட்டையால் செய்யப்பட்ட குதிரை மீது ஏறி அமர்ந்துகொண்டு அவன் நண்பர்கள் அந்தக் குதிரையை ஊர்வலமாகத் தெருத்தெருவாக இழுத்துச் செல்லும் நிகழ்வு மடலேறுதல் என்று அழைக்கப்பட்டது. மறைமுகமாக இருந்த காதலர்களின் காதல், காதலன் மடலேறுவதால் ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியவரும். அதனால், அவன் காதலி அவனை மீண்டும் சந்திக்கும் வாய்ப்போஅல்லது அவள் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கும் வாய்ப்போ கிடைக்கும்.
இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலைவன் தலைவியைக் காணவருகிறான். அவன் வந்த இடத்தில், தலைவிக்குப் பதிலாகத் தோழி வந்திருக்கிறாள். தோழி, “உங்கள் காதல் தலைவியின் தாய்க்குத் தெரிந்துவிட்டது. அவள் தலைவியை வீட்டைவிட்டு வெளியே போகக் கூடாது என்று கூறிவிட்டாள். உன்னைக் காண்பதற்குத் தலைவி மிகுந்த ஆவலாக உள்ளாள். ஆனால், அவள் தாய் சொல்லைத் தட்ட முடியாமல் தவிக்கிறாள். ஆகவே, இனி நீ அவளைக் காண முடியாது.” என்று கூறுகிறாள். தோழி கூறியதைக் கேட்ட தலைவன், மிகுந்த சினத்தோடு, “நான் எப்படியாவது அவளை அடைந்தே தீருவேன். வேண்டுமானால் மடலேறவும் தயங்க மாட்டேன். அப்பொழுது, நான்தான் அவள் கணவன் என்பது இந்த ஊரில் உள்ளவர்கள் தெரிந்துகொள்வார்கள்.” என்று கூறுகிறான்.
மடலேறுவதை வெளிப்படையாகத் தலைவன் இப்பாடலில் கூறாவிட்டாலும், அவன் கூற்று அதைத்தான் குறிக்கிறது என்பது தொல்காப்பியத்தின் களவியலிலிருந்து (தொல்காப்பியம், பாடல் 1048) தெரியவருகிறது .
அமிழ்துபொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம யானே பெற்றாங்
கறிகதில் அம்மவிவ் வூரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூறயாம் நாணுகஞ் சிறிதே.

அருஞ்சொற்பொருள்: பொதிதல் = நிறைதல்; செந்நா = சிவந்த நாக்கு; வார்தல் = நேராகுதல்; இலங்குதல் = விளங்குதல்; வை = கூர்மை; எயிறு = பல்; சின்மொழி = சில சொற்கள்; அரிவை = இளம்பெண்; தில் = விழைவுக் குறிப்பு; அம்மஅசைச்சொல்; மறுகு = தெரு;

உரை: என் காதலியின் நாக்கு அமிழ்தம் நிறைந்தது. அவளுடைய பற்கள் கூர்மையானவையாகவும் ஒளியுடையனவாகவும் உள்ளன. பற்களின் கூர்மையைக் கண்டு அவள் நாக்கு அஞ்சுவதால் அவள் அதிகாமகப் பேசுவதில்லை.  நான் அவளை அடைந்தே தீருவேன். வேண்டுமானால் மடலேறவும் தயங்க மட்டேன். நான் அவளை என் மனைவியாகப் பெற்றபின் அந்தச் செய்தியை  இவ்வூரில் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இந்த நல்லவளின் கணவன் இவன்தான் என்று பலரும் கூறுவதைக் கண்டு நாங்கள் சிறிது வெட்கப்படுவோம்.

விளக்கம்: மடலேறுவது நாணத் தகுந்த செயல் என்று கருதப்பட்டது. மடலேறத் துணிந்த பொழுது நாணத்தை முற்றிலும் இழந்தாலும், அவர்களைக் கணவன் மனைவியாக மற்றவர்கள் காணும்பொழுது தான் இழந்த நாணத்தை மீண்டும் பெறப்போவதாகத் தலைவன் எண்ணுகிறான்.


இப்பாடலில், உரிப்பொருளாகிய புணர்ச்சி குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

பாடல் - 13

13. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  புலன் அழுக்கற்ற அந்தணாளன்என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126).  கபிலர் பாடியதாக 234 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன.  குறிப்பாக, இவர் புறநானூற்றில் 28 செய்யுட்களையும், கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுட்களையும், குறுந்தொகையில் 29 செய்யுட்களையும், நற்றிணையில் 20 செய்யுட்களையும், அகநானூற்றில் 18 செய்யுட்களையும், பதிற்றுப்பத்தில் 10 செய்யுட்களையும் , ஐங்குறுநூற்றில் 100 செய்யுட்களையும் இயற்றியுள்ளார்.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது.  இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.  இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி. 
            சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தாக அமைந்துள்ளது.  இவர் இயற்றிய பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான்.  ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.
            இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர்.  வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கபிலர் பல முயற்சிகள் செய்தார்.  முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்ததாகக் கருதப்படுகிறது.
            கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பாடலின் பின்னணி: தலைவனோடு கூடி மகிழ்ந்திருந்த தலைவி, சிலநாட்களாகத் தலைவனைக் காணாததால் வருந்துகிறாள். குவளை மலர் போன்ற அவளுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நோயுற்று ஒளி இழந்து காணப்படுகின்றன. தன் நிலையைத் தன் தோழியிடம் தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மாசறக் கழீஇய யானை போலப்
பெரும்பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகற்
பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன்
நோய்தந் தனனே தோழி
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே. 

அருஞ்சொற்பொருள்: மாசு = அழுக்கு, புழுதி; கழீஇய = கழுவிய; பெயல் = மழை; உழந்த = தூய்மையுற்ற; இரு = கரிய; பிணர் = சொரசொரப்பு ; துறுகல் = பாறை; பைதல் = பசுமை; சேத்தல் = தங்குதல், கிடத்தல், உறங்குதல்; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்; ஆர்தல் =அடைதல், பெறுதல்; அம் = அழகு.

உரை: தோழி, மேலே உள்ள தூசி முற்றிலும் நீங்கும்படிப் பாகனால் கழுவப்பட்ட யானையைப் போன்ற, பெரிய மழையால் கழுவபட்ட கரிய, சொரசொரப்பான பாறைக்கு அருகே பசுமையான ஓரிடத்தில் என்னோடு கூடியிருந்த குறிஞ்சி நிலத் தலைவன் இப்பொழுது எனக்குக் காமநோயைத் தந்தான். அதனால் குவளை மலர் போன்ற என்னுடைய அழகிய கண்கள் பசலை நோயுற்றன

விளக்கம்: பாறையின் இயல்பை மறைக்கும் மாசுகள் இல்லாத நாட்டிற்குத் தலைவன், அவ்வியல்புக்கு மாறாக என் கண்களின் இயல்பை மறைக்கும் பசலை நோயை எனக்குத் தந்தான் என்று தலைவி உள்ளுறை உவமமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.


இப்பாடலில், கருப்பொருளாக யானையும், குவளை மலரும், குறிஞ்சி நிலத் தலைவனும் உரிப்பொருளாக தலைவி தலைவனோடு கூடியிருந்ததும் குறிப்பிடப்படுவதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாடல் - 12

12. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: ஓதலாந்தையார். இவர் குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (12, 21, 329) ஐங்குறுநூற்றில் பாலைத்திணைக்குரிய 100 பாடல்களும் இயற்றியவர்.

பாடலின் பின்னணி: தலைவியைப் பிரிந்து, கடத்தற்கரிய பலை நிலத்தில் தலைவன் சென்றுகொண்டிருந்தான். அவன் பாலை நிலத்தைக் கடக்கும்பொழுதுஎத்துணைத் துன்பப்படுகிறானோ என்று எண்ணித் தலைவி வருந்துகிறாள். தலைவனின் பிரிவைவிட, பாலைநிலத்தில் அவன் படும் துன்பம்தான் அவளை மிகவும் வருத்தியது. அவள் வருத்தத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட அவ்வூர் மக்கள், அவள் தலைவனின் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துவதாக நினைத்து அவளைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.

எறும்பி யளையிற் குறும்பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறிக்
கொடுவில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத் தென்பவர் சென்ற ஆறே
அதுமற் றவலங் கொள்ளாது
நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே. 

அருஞ்சொற்பொருள்: எறும்பி = எறும்பு; அளை = வளை; குறுமை = சிறுமை; சுனை = நீரூற்று, குளம் ; உலைக்கல் = கொல்லனுடைய உலைக்கலத்திலுள்ள பட்டடைக் கல்; கொடு = வளைவு; எயினர் = பாலைநில மக்கள், வேடர்; பகழி = அம்பு; மாய்தல் = அழிதல் (தீட்டுதல்); கவலை = கவர்த்த வழிகள் (பிரியும் வழிகள்); ஆறு = வழி ; அவலம் =வருத்தம், துன்பம்; நொதுமல் = அன்பில்லாதவர்கள் கூறும் சொற்கள்; கழறுதல் = சொல்லுதல் (இடித்துரைத்தல்); = இந்த; அழுங்கல் = ஒலித்தல் (ஆரவாரம்).

உரை: தலைவன் பாலை நிலத்தைக் கடந்து செல்கிறான். அங்கே, எறும்பின் வளைபோன்ற சிறிய நீர்ச்சுனைகளே உள்ளன. கொல்லனுடைய உலைக்களத்திலுள்ள பட்டடைக் கல்லைப் போல் வெப்பம் மிகுந்த பாறைகளின் மேல் ஏறி, வளைந்த வில்லை உடைய வேடர்கள், தங்கள் அம்புகளை, அப்பாறைகளில் தீட்டுகின்றனர். அங்கே, பாதைகள் பலவாகப் பிரிந்து செல்கின்றன. அத்தகைய  பாலை நிலத்தின் கொடுமையை நினைத்து நான் வருந்துகிறேன். இந்த ஆரவாரம் மிகுந்த ஊர், என்னுடைய துயரத்தின் உண்மையான காரணத்தைப் புரிந்துகொள்ளாமல், அன்பில்லாத சொற்களைக் கூறி என்னைப்பற்றி இழிவாகப் பேசுகிறார்கள்.
.

விளக்கம்: இப்பாடலில், முதற்பொருளாக பாலை நிலமும், கருப்பொருளாக எறும்பு, எயினர்ஆகியவையும் இடம் பெற்றிருப்பதால் இப்பாடல் பாலைத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

பாடல் - 11

11. பாலை - தலைவி கூற்று

பாடியவர்: மாமூலனார். இவர் அகநானூற்றில் 27 பாடல்களும், குறுந்தொகையில் ஒரு பாடலும் (11), நற்றிணையில் இரண்டு பாடல்களும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: தலைவன் தமிழ்நாட்டிற்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிற்குச் சென்றிருக்கிறான். அவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வாடுகிறாள். இனியும் அவனைப் பிரிந்திருந்து, அவன் வருவான் என்று காத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறாள். “இவ்வாறு இங்கிருந்து வருத்தப்படுவதைவிட, தலைவன் இருக்கும் இடத்திற்கே செல்வது சிறந்ததுஎன்று தன் தோழியின் காதில் விழுமாறு தனக்குத் தானே தலைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

கோடீர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே. 

அருஞ்சொற்பொருள்: கோடு = சங்கு; ஈர்தல் = அறுத்தல்; இலங்குதல் = விளங்குதல்; ஞெகிழல் = நெகிழல் (தளர்தல்) ; பாடுதல் = பொருந்துதல் ; கலிழ்தல் = அழுதல்; புலம்பு = தனிமை, வருத்தம்; ஈங்கு = இப்படி ; இவண் = இங்கே ; உறைதல் = தங்குதல் ; உய்தல் = தப்புதல்; இனி = இப்பொழுது; முனாது = முன்னே; குல்லை = துளசி அல்லது வெட்சி அல்லது கஞ்சங் குல்லை எனப்படும் செடிவகைகளில் ஒன்று; கண்ணி = தலைமேற் சூடப்படும் மாலை ; வடுகர் = தெலுங்கர்; முனை = போர்க்களம் (இடம்); கட்டி = ஒருவன் பெயர்; உம்பர் = அப்புறம்; பெயர்தல் = வேறுபடல்; தேயம் = நாடு; மொழிபெயர் தேயம் = வேறுமொழி வழங்கும் நாடுவழிபாடு = வழியிற் செல்லுதல் ; சூழ்ந்திசின் = எண்ணினேன்.

உரை: எனது நெஞ்சே நீ வாழ்வாயாக! உடல் மெலிவினால், சங்கினை அறுத்துச் செய்யப்பட்டு விளங்கும் கைவளையல்கள் நெகிழ, நாள்தோறும், தூக்கமில்லாமல் கலங்கி அழும் கண்களோடு, தனிமையில் வருந்தி, இப்படி இங்கேயே தங்கியிருப்பதைத் தவிர்த்து, தலைவர் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்கு இப்பொழுதே எழுவாயாக; முன்னே உள்ளதாகிய, குல்லையாலாகிய கண்ணியை அணிந்த, வடுகருக்குரிய இடத்திலுள்ள, பல வேற்படையையுடைய கட்டி என்பவனுடைய நல்ல நாட்டிற்கு அப்பால் உள்ள வேறுமொழி வழங்கும் வடுகர் நாட்டில் இருந்தாலும், அவர் இருக்கும் நாட்டிற்கு செல்லலாம் என்று எண்ணினேன்.


விளக்கம்: வேங்கடத்தின் வடக்கே இருந்த ஒரு நாட்டைச் சார்ந்தவர் வடுகர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் மிக்க வீரமும் வன்மையும் உடையவராகக் கருதப்பட்டனர்கட்டி என்பவன் சேரனுடைய படைத் தலைவர்களுள் ஒருவன். அவன் தமிழ்நாட்டிற்கு வடக்கே இருந்த கங்க நாட்டிற்குத் தலைவனாகக் கருதப்படுகின்றான். கங்க நாடு தமிழ்நாட்டிற்கும் வடுகர் நாட்டிற்கும் இடையில் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.  மொழி வேறுபட்ட நாட்டில் சென்று வாழ்தல் அருமையாதலின் ஆயினும் என்று சிறப்பும்மையுடன் கூறப்பட்டது. இப்பாடலில், பாலைத்திணைக்குரிய உரிப்பொருளாகிய பிரிதல் குறிப்பிடப்பட்டிருக்கிறது

பாடல் - 10

10. மருதம் - தோழி கூற்று

பாடியவர்: ஓரம்போகியார். ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் இயற்றியவர் இவர்.  மற்றும், இவர் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் (286, 316), குறுந்தொகையில் ஐந்து செய்யுட்களையும் ( 10, 70, 122, 127, 384), நற்றிணையில் இரண்டு செய்யுட்களையும் (20, 360) இயற்றியுள்ளார்.  இவர் சேரமான் ஆதன் அவினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் ஆகியோரைப் பாடியுள்ளார். 

பாடலின் பின்னணி: பரத்தையோடு தொடர்பு காரணமாகத் தலைவியைப் பிரிந்து வாழ்ந்த தலைவன், இப்பொழுது தலைவியைக் காண வருகிறான். அங்கு, தலைவியின் தோழி வருகிறாள். தனக்காகத் தோழியைத் தலைவியிடம் தூது போகுமாறு தலைவன் வேண்டுகிறான்.   தலைவன் செய்த கொடுமைகளையும் தலைவியின் நற்பண்புகளையும் நன்கு அறிந்த தோழி, “தலைவன் செய்த கொடுமைகளை மறைத்த தலைவி, இப்பொழுது அவன் வெட்கப்படுமாறு அவனை ஏற்றுக் கொள்ளப்போகிறாள்என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு தலைவியை நோக்கிச் செல்கிறாள்.

யாயா கியளே விழவுமுத லாட்டி
பயறுபோ லிணர பைந்தாது படீஇயர்
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக்
காஞ்சி யூரன் கொடுமை
கரந்தன ளாகலின் நாணிய வருமே. 

அருஞ்சொற்பொருள்: யாய் = தலைவி (இங்கு தலைவியைக் குறிக்கிறது.); விழவு = உற்சவம், விழா, பாராட்டுதல்; முதல் = காரணம்; ஆட்டி = பெண்பால் விகுதி, பெண், மனைவி; இணர் = கொத்து; பை = பசுமை; படீஇயர் = படும்படி; வாங்கிய = வளைத்த; கமழ்தல் = மணத்தல்; சினை = கிளை; மென்சினை = மெல்லிய கிளை; காஞ்சி ஊரன் = காஞ்சி மரத்தை உடைய ஊரன்; கரத்தல் = மறைத்தல்.

உரை: தலைவன் செல்வம் பெற்று மகிழ்ச்சியாக இருப்பதற்கு முதல் காரணமாக இருப்பவள் தலைவி. தலைவனின் ஊரில் மெல்லிய கிளைகளை உடைய காஞ்சி மரங்கள் உள்ளன. அந்த மரங்களின் கிளைகளை உழவர்கள் வளைத்தால், பயற்றின் கொத்தைப்போல் இருக்கும் பூங்கொத்துக்களில் உள்ள பசுமையான பூந்தாதுகள் அவர்கள் மேல் படும்படி விழுகின்றன. அத்தகைய காஞ்சி மரங்களை உடைய ஊரனின் கொடுமைகளை யாருக்கும் தெரியாமல் தலைவி மறைத்தாள். இப்பொழுது, அவன் நாணும்படி அவனை ஏற்றுக்கொள்ள அவள் வருகிறாள்.

விளக்கம்: இப்பாடலில் கருப்பொருளாக உழவர்கள், காஞ்சி மரம், பயறு ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, இப்பாடல் மருதத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


உழவர்கள் வளைத்ததால் கிளைகளிலிருந்து விழும் பூந்தாதுக்கள் போல் தலைவனின் பரத்தமை உள்ளது என்று உள்ளுறை உவமாக இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார்

Tuesday, April 14, 2015

பாடல் - 9

9. நெய்தல் - தோழி கூற்று

பாடியவர்: கயமனார். கயம் என்ற சொல்லுக்குப் பெருமை என்று ஒருபொருள்.  ஆகவே, கயமனார் என்பது பெரியவர் என்பதைக் குறிக்கும்.  இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் (254) மட்டுமல்லாமல், அகநானூற்றில் பன்னிரண்டு பாடல்களும் (7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397), குறுந்தொகையில் நான்கு பாடல்களும் (9
356, 378, 396), நற்றிணையில் ஆறு பாடல்களும் (12, 198, 279, 293, 305, 324) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: பரத்தையிடமிருந்து திரும்பி வந்த தலைவன், தலைவி அவன் மீது கோபமாக இருப்பாள் என்பதை உணர்ந்து, தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூது போகச் சொல்கிறான். அதற்குத் தோழி, “நீ தலைவியைப் பிரிந்து, பரத்தையோடு இருந்து அவளுக்குப் பல கொடுமைகளைச் செய்தாலும், நீ செய்த குற்றங்களுக்காக அவள் வெட்கப்பட்டு, அவற்றை யாரிடமும் சொல்லாமல் மறைத்துக்கொண்டு, உன்மீது அன்போடுதான் இருக்கிறாள்.” என்று கூறுகிறாள்.

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே. 

அருஞ்சொற்பொருள்:  யாய் = தாய் (இங்கு தலைவியைக் குறிக்கிறது.); மாயோள் = கருநிறமானவள்; மடை = பூண்; மாண் = மாட்சிமை (அழகு); செப்பு = ஒரு வகைப் பாத்திரம் (பெட்டி); தமி = தனிமை; வைகுதல் = இருத்தல் (வைத்தல்); பெய்தல் = இடுதல்; சாய்தல் = மெலிதல்; பாசு =பசுமை; அடை = இலை ; நிவந்த = உயர்ந்த; கணை = திரண்ட வடிவு ; நெய்தல் = நெய்தல் மலர்; இனம் = கூட்டம்; இரு = கரிய; ஓதம் = வெள்ளம் (நீர்ப்பெருக்கம்); மல்குதல் = பெருகுதல்; கயம் = குளம் ; மானுதல் = ஒத்தல்; துறைவன் = நீர்த்துறைத் தலைவன்( நெய்தல் நிலத் தலைவன்); கரத்தல் = மறைத்தல்; ஆடுதல் = சொல்லுதல்.

உரை: தலைவி கருநிறமானவள்; நற்பண்புகள் உடையவள்.  பூட்டப்பட்ட அழகான பெட்டியில் வைத்து அடைக்கப்பட்ட, சூடப்படாத பூக்களைப் போலத் தனியளாக இருந்து அவள் இப்பொழுது உடல் மெலிந்தாள். கூட்டமாகிய மீன்களை உடைய கரிய கழியின்கண் வெள்ளம் அதிகரிக்குந்தோறும், பசுமையான இலைகளுக்கு மேலே உயர்ந்து தோன்றும் திரண்ட  காம்பை உடைய நெய்தற் பூக்கள், குளத்தில் முழுகும் மகளிரது கண்களைப் போல் காட்சி அளிக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவனது கொடுமையை, நம் முன்னே சொல்லுதற்கு நாணமுற்றுத் தலைவி மறைக்கிறாள்.

விளக்கம்: குளத்தில் குளிக்கும் பெண்களின் கண்களுக்கு நெய்தற் பூக்கள் உவமையாகவும், தலைவியின் மெலிந்த உடலுக்குப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டுத் தலையில் சூடாமல் வாடிய பூ உவமையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இப்பாடலில், முதற் பொருளாக கடற்கரையும், கருப்பொருள்களாக நெய்தல் மலர்கள், மீன்கள் ஆகியவையும், உரிப்பொருளாகத் தலைவனின் பிரிவால் வாடும்  தலைவியும் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாடல் - 8

8. மருதம் - காதற் பரத்தை கூற்று

பாடியவர்: ஆலங்குடி வங்கனார். இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), நற்றிணையில் மூன்று பாடல்களும் (230, 330, 400), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒரு தலைவன் தன் மனைவியைவிட்டுச் சிலகாலம் ஒரு பரத்தையோடு தொடர்புகொண்டு, அவள் வீட்டில் தங்கியிருந்தான். அங்கிருந்தபொழுது அவள் விருப்பப்படி நடந்துகொண்டான். பிறகு, தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்று தன் மனைவியோடு வாழ ஆரம்பித்தான். தலைவி (தலைவனின் மனைவி) தன்னை இழித்துப் பேசியதை அறிந்த பரத்தை, “இங்கிருந்த பொழுது என் மனம்போல் நடந்து கொண்டான். இப்பொழுது தன் மனைவிக்கு அடங்கி வாழ்கிறான்என்று தன் கருத்தைத் தலைவியின் அருகில் உள்ளவர்கள் கேட்குமாறு பரத்தை கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம்
பழன வாளை கதூஉ மூரன்
எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. 

அருஞ்சொற்பொருள்: கழனி = வயல்; மா = மா மரம்; உகுதல் = உதிர்தல்; தீம்பழம் = இனிய பழம் ; பழனம் = பொய்கை; வாளை = ஒருவகை மீன்; கதுவுதல் = பற்றுதல்; ஊரன் = ஊரை உடைய தலைவன்; ஆடி = கண்ணாடி; பாவை = கண்ணாடியில் தோன்றும் உருவம் ; மேவல் = விரும்பல்.

உரை: வயல் அருகில் உள்ள மா மரத்திலிருந்து, பழுத்துத் தானாக விழுகின்ற இனிய பழங்களைக் கவ்வி உண்ணும் வாளை மீன்கள் வாழும் ஊரை உடைய தலைவன், என் வீட்டிலிருந்த பொழுது என்னை வயப்படுத்துவதற்காக என்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளைப் பேசினான். இப்பொழுது, தன்னுடைய வீட்டில், முன்னால் நிற்பவர்கள் கையையும் காலையும் தூக்குவதால் தானும் தன் காலையும் கையையும் தூக்கும் கண்ணாடியில் தோன்றும் உருவத்தைப்போல், தன் புதல்வனின் தாய் (மனைவி) விரும்பியவற்றைத் தலைவன் செய்கிறான்.

விளக்கம்: இப்பாடலில் முதற்பொருளாக வயலும், கருப்பொருளாக வாளைமீன் , மாம்பழம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் மருதத்திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

தலைவனின் மனைவியை மனைவிஎன்று குறிப்பிடாமல்,  ”தலைவனின் புதல்வனின் தாய்என்று குறிப்பிடுவது பரத்தை தலைவி மீது கோபமாக இருக்கிறாள் என்பதைக் குறிக்கிறது.


வயலருகில் உள்ள மாமரத்திலிருந்து விழும் பழங்களைக் கவ்வும் வாளைமீன் என்பது எவ்வித முயற்சியும் இன்றி, தலைவனை எளிதில் பற்றி அவனோடு இன்புறும் பரத்தையரின் செயலை உள்ளுறை உவமமாகக் குறிக்கிறது.. 

பாடல் - 7

7. பாலை - கண்டோர் கூற்று

பாடியவர்: பெரும்பதுமனார். குறுந்தொகையில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.  இவர் புறநானூற்றில் ஒரு செய்யுளும் (199), நற்றிணையில் இரண்டு செய்யுட்களும் (2, 109) இயற்றியுள்ளார்.  இவருடைய பாடல்களில் உவமை நயம் மிகுந்து காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒரு ஆடவனும் ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அவர்களுடைய திருமணத்திற்குச் சம்மதிக்கவில்லை. ஆகவே, அவர்கள் தங்கள் ஊரைவிட்டு, வறண்ட காட்டு வழியாக வேறு ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். வில்லேந்திய அந்த ஆடவனும்,மெல்லிய பாதங்களை உடைய அந்தப் பெண்ணும், துன்பப்பட்டு அந்தக் காட்டைக்  கடந்து செல்வதைக் கண்ட சிலர் அவர்களுக்காக இரக்கப்படுகிறார்கள்.

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே. 

அருஞ்சொற்பொருள்: வில்லோன் = வில்லை உடையவன்; காலன = காலில்; கழல் = வீரத்தின் சின்னாமாக ஆண்கள் காலில் அணியும் அணிகலன் (வளையம்); தொடி = வளையல்; அளியர் = இரங்கத் தக்கவர்கள்; கால் = காற்று; பொருதல் = தாக்குதல்; வாகை = ஒரு வகை மரம்; நெற்று = உலர்ந்த பழம்; வேய் = மூங்கில்; பயில்தல் = நெருங்குதல்; அழுவம் = நிலப்பரப்பு; முன்னுதல் = நினைத்தல், எதிர்ப்படுதல்.

உரை: ஆரியக்கூத்தர்கள் கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையின் ஒலியைப் போல, காற்று தாக்குவதால் நிலை கலங்கி, வாகை மரத்தின் வெண்மையான நெற்றுக்கள் ஒலிக்கும் இடமாகிய மூங்கில் செறிந்த இந்த பாலை நிலப்பரப்பை, காலில் கழல் அணிந்த இந்த ஆடவனும் தோளில் வளையலும் தன்னுடைய மெல்லிய பாதங்களில் சிலம்பும் அணிந்த இந்தப் பெண்ணும் கடந்து செல்ல நினைக்கிறார்கள். இந்த நல்லவர்கள் யாரோ? இவர்கள் இரங்கத்தக்கவர்கள்!

விளக்கம்: சங்க காலத்தில், திருமணமாகாத பெண்கள் காலில் சிலம்பு அணிவதும், திருமணத்திற்குமுன் சிலம்பைக் கழட்டிவிடுவதும் வழக்கமாக இருந்தது. இப்பாடலில், பெண் தன்னுடைய காலில் சிலம்பு அணிந்திருப்பதாகப் புலவர் கூறியதால் அந்தப் பெண் திருமணம் ஆகாதவள் என்பது புலனாகிறது.

இந்தியாவின் வடபகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த சிலர் (ஆரியர்கள்) மூங்கில் கம்புகளின் இடையே கட்டப்பட்ட கயிற்றின்மேல் நடந்துகாட்டி மக்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி கழைக்கூத்து என்று அழைக்கப்பட்டது.  கழைக்கூத்து நடைபெறும்பொழுது பறைகொட்டி ஒலியெழுப்புவது வழக்கம். சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் கழைக்கூத்தைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில், “ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது.


இப்பாடலில், முதற்பொருளாக பாலை நிலமும், உரிப்பொருளாகத் தலைவனும் தலைவியும் பிரிந்து செல்வதும் கூறப்படுவதால் இப்பாடல் பாலைத் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

பாடல் - 6

6. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: பதுமனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே காணப்படுகிறது.

பாடலின் பின்னணி: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் விளைந்த வருத்தத்தால் அவளால் தூங்க முடியவில்லை. நள்ளிரவில் அனைவரும் உறங்கிய பிறகும் தான் மட்டும் தூங்க  முடியாமல் பட்ட துன்பத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. 

அருஞ்சொற்பொருள்: நள் = நடு, செறிதல், மிகுதிப்பொருள் தரும் ஓர் இடைச்சொல், இரவு; யாமம் = நள்ளிரவு; அவிந்து = ஓய்ந்து ; மாக்கள் = ஐய்யறிவு உடையவர்கள், மனிதர்; முனிவு = வெறுப்பு, வருத்தம்; நனம் = அகற்சி; நனந்தலை =அகன்றவிடம்; துஞ்சுதல் = தூங்குதல்; மன்ற = உறுதியாக.

உரை: நடு இரவு இருள் மிகுந்ததாக உள்ளது. மனிதர்கள் அனைவரும் பேசுவதை நிறுத்திவிட்டு, இனிமையாக உறங்குகின்றனர். அகன்ற இடத்தையுடைய இவ்வுலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் வருத்தமின்றி உறங்குகின்றன. நான் ஒருத்தி மட்டும் (உறுதியாகத்) தூங்காமல் இருக்கிறேன்.

விளக்கம்: இப்பாடலில், தலைவிமாக்கள்என்று குறிப்பிடுவது அவள் வீட்டில் உள்ளவர்களைக் குறிக்கும். அவர்கள் அனைவரும் அவளுடைய மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், சினமுற்ற தலைவி, அவர்களை ஐய்யறிவு உடையவர்கள் என்று குறிப்பிடுகிறாள் என்று கருதுவது பொருத்தமானதாகத் தோன்றுகிறது


இப்பாடலில், உரிப்பொருளாகிய இரங்கல் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தற் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது

பாடல் - 5

5. நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: நரிவெரூஉத்தலையார். இப்புலவரின் தலை நரியின் தலையைப் போல் இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும், இவர் நரிவெரூஉத்தலை என்னும் ஊரினர் என்ற காரணத்தால் இவருக்கு இப்பெயர் வந்ததென்றும், இவர் இயற்றிய பாடல் ஒன்றில்நரிவெரூஉத்தலைஎன்ற சொல்லைப் பயன்படுத்தியதால் இவருக்கு இப்பெயர் வந்ததாகவும் இவர் பெயருக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றனஇவர் இயற்பெயர் தெரியவில்லைஇவர் புறநானூற்றில் இரண்டு பாடல்களும்  (5, 195) குறுந்தொகைகயில் இரண்டு பாடல்களும் (5, 236) இயற்றியுள்ளார்இவர் பாடல்கள் கருத்துச் செறிவு உடையவை.

பாடலின் பின்னணி: தலைவனைப் பிரிந்திருப்பதால், தலைவி மிகுந்த வருத்தமாக இருப்பதை அறிந்த தோழி, தலைவியைக் காண வருகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, தலைவிக்கு ஆறுதலாக அன்றிரவுப் பொழுதை அவளோடு கழிக்கலாம் என்று எண்ணித் தலைவியோடு தங்குகிறாள். இரவு நேரம் வந்தவுடன், தலைவியும் தோழியும் தூங்கப் போகிறார்கள். தோழி விரைவில் உறங்கிவிட்டாள். தலைவி உறக்கமின்றி வாடுகிறாள். தற்செயலாகக் கண்விழித்த தோழி , தலைவி தூங்காமல் இருப்பதைப் பார்த்து, “இவ்வளவு நேரமாகிவிட்டதே! நீ இன்னும் தூங்கவில்லையா?” என்று கேட்கிறாள். தோழியின் கேள்விக்குத் தலைவி மறுமொழி கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே. 

அருஞ்சொற்பொருள்: வதி = தங்குமிடம்; குருகு = நாரை, கொக்கு ; புன்னை = புன்னை மரம்; திரை = அலை; திவலை = சிதறும் நீர்த்துளி ; அரும்பும் = மலரச் செய்யும்; தீநீர் = இனிமையான நீர் ; அம் = அழகிய; புலம்பன் = நெய்தல் நிலத் தலைவன் ; பிரிந்தென = பிரிந்ததால்; பல்லிதழ் = பல இதழ்கள்; உண்கண் = மை தீட்டிய கண்கள்; பாடு = தூக்கம் ; ஒல்லுதல் = பொருந்துதல்.

உரை: தன்னிடத்தில் தங்கியிருக்கும் குருகுகள் உறங்குவதற்கேற்ற இனிய நிழலைத் தரும் புன்னைமரங்களை, கரையை மோதும் அலைகளிலிருந்து சிதறும் இனிய நீர்த்துளிகள் மலரச் செய்கின்றன. அத்தகைய நெய்தல் நிலத்தின் தலைவன் என்னைப் பிரிந்ததால், பல இதழ்களை உடைய தாமரை மலரைப் போன்ற என்னுடைய மை தீட்டிய கண்களால் தூங்க முடியவில்லை. தோழி! இதுதான் காதல் நோயா


விளக்கம்: முதற்பொருளாக நெய்தல் நிலமும், உரிப்பொருளாகத் தலைவனைப் பிரிந்து வாழும் தலைவியின் இரங்கலும் இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் நெய்தற் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. தலைவியை பிரிந்திருந்தபொழுதும், நெய்தல் நிலத்தில் உள்ள குருகுகள் இனிமையாக உறங்குவதைப்போல் தலைவன் வருத்தப்படாமல் உறங்குகிறான் போலும் என்ற குறிப்பு இப்பாடலில் உள்ளுறை உவமமாகக் காணப்படுகிறது

பாடல் - 4

4.   நெய்தல் - தலைவி கூற்று

பாடியவர்: காமஞ்சேர் குளத்தார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் கூடியிருந்தபொழுது, எக்காரணத்திலாவது தலைவி வருத்தமுற்று அழுதால், தலைவன் அவளுக்கு ஆறுதல் கூறி அவள் கண்ணீரைத் துடைப்பது வழக்கம். இப்பொழுது, தலைவி தலைவனைப் பிரிந்து வருந்துகிறாள். முன்பு ஆறுதலாக இருந்து, தன் கண்ணீரைத் துடைத்த தன் தலைவன் இப்பொழுது தன் அருகே இல்லாததால் தான் வருத்தப்படுவதைத் தன் தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்தநங் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே. 

அருஞ்சொற்பொருள்: நோ = வருத்தம்; நோம் = வருந்துகிறது; தீத்தல் = சுடுதல்; தாங்கி = தடுத்து; அமைதல் = உடன்படுதல்

உரை: என் நெஞ்சம் வருந்துகிறது; என் நெஞ்சம் வருந்துகிறது. இமைகளைச் சுடும் சூடான என் கண்ணீரைத் துடைத்து, எனக்கு ஆதரவாக இருந்த நம் தலைவர் இப்பொழுது எனக்கு  ஆதரவாக இல்லாமல் பிரிந்திருத்தலால், என் நெஞ்சம் வருந்துகிறது.

விளக்கம்: இப்பாடலில், நெய்தல் திணைக்குரிய உரிப்பொருளாகிய இரங்கல் கூறப்படுவதால், இப்பாடல் நெய்தல் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
நோம் என் நெஞ்சேஎன்று தலைவி மூன்றுமுறை கூறுவது அவள் வருத்தத்தின் மிகுதியைக் குறிக்கிறது.

பாடல் - 3

3. குறிஞ்சி - தலைவி கூற்று

பாடியவர்: தேவகுலத்தார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: தலைவன்மீது தலைவி மிகுந்த காதல் உடையவளாகவும் அன்புடையவளாகவும் இருக்கிறாள். அவர்களிடையே உள்ள நட்பை அவள் மிகவும் அருமையானதாகக் கருதுகிறாள். ஒருநாள் தலைவன் தலைவியைக் காண வருகிறான். தலைவன் காதில்  கேட்கும்படியாக, அவர்களுடைய நட்பின் அருமையைத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. 

அருஞ்சொற்பொருள்: உயர்ந்தன்று = உயர்ந்தது; நீர் = கடல்; ஆர் = அருமை; அளவின்று = அளவினை உடையது; சாரல் = மலைப் பக்கம்; கருங்கோல் = கரிய கொம்பு; இழைத்தல் = செய்தல்; நாடன் = குறிஞ்சி நிலத் தலைவன்.

உரை: மலைப் பக்கத்தில் உள்ள, கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு, பெருமளவில் வண்டுகள் தேனைச் செய்தற்கு ஏற்ற இடமாகிய நாட்டை உடைய தலைவனோடு எனக்குடைய நட்பு, பூமியைக் காட்டிலும் பெரியது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.


விளக்கம்: இப்பாடலில் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாகிய குறிஞ்சிப் பூவும், வண்டும், உரிப்பொருளாகிய புணர்ச்சியும் (ஆண் பெண் சேர்க்கையும்குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.

பாடல் - 2

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடியவர்: இறையனார். குறுந்தொகையில் இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே உள்ளது.

பாடலின் பின்னணி: ஒரு ஆண்மகன் (தலைவன்) தற்செயலாக ஒரு அழகான பெண்ணைச் சந்திக்கிறான். அவனும் அவளும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஒருநாள், அவளோடு இருக்கும்பொழுது, அவள் கூந்தலில் உள்ள நறுமணம் அவனை மிகவும் கவர்கிறது.  தன் காதலியின் கூந்தலைப்போல் நறுமணமுள்ள பூக்களும் உளவோ என்று அவனுக்கு ஐயம் எழுகிறது. அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு, சில வண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் ஒரு வண்டைப் பார்த்து, “வண்டே! என் காதலியின் கூந்தலில் உள்ளதைப்போல் நறுமணம் உள்ள பூக்களும் உளவோ?” என்று அவன் கேட்கிறான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே. 

அருஞ்சொற்பொருள்: கொங்கு = பூந்தாது, தேன்; தேர்தல் = அறிதல், ஆராய்தல்; அம் = அழகு; சிறை = இறகு; தும்பி = வண்டு; காமம் = விருப்பம்; கண்டது = கண்டு அறிந்தது; பயிலல் = பழகல்; கெழீஇய = பொருந்திய (நெருங்கிய); இயல் = சாயல்; செறி = நெருக்கம்; எயிறு = பல்; அரிவை = இளம்பெண்; நறிய = நறுமணமுடைய.

உரை: பூந்தாதை ஆராய்ந்து, தேனை உண்ணுகின்ற வாழ்க்கையையும், அழகிய இறகுகளையும் உடைய வண்டே! நான் கேட்க விரும்பியதைக் கூறாமல், நீ கண்டு அறிந்ததையே சொல்வாயாக! நீ அறியும் மலர்களுள், என்னோடு பழகியதால் நெருங்கிய நட்பையும், மயில் போன்ற சாயலையும், நெருங்கிய பற்களையும் உடைய, இந்த இளம்பெண்ணின் கூந்தலைப் போல, நறுமணமுடைய மலர்களும் உளவோ?
விளக்கம்: இப்பாடலில் குறிஞ்சி நிலத்தின் கருப்பொருளாகிய வண்டும், உரிப்பொருளாகிய புணர்ச்சியும் (ஆண் பெண் சேர்க்கையும்குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
இப்பாடலைச் சிவபெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தருமி அதைச் சண்பக பாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் அவையில் பாடிப் பரிசுபெற முயன்றதாகவும், நக்கீரர் இப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாகக் கூறியதாகவும் (அதாவது,பெண்களின் கூந்தலில் இயற்கையான மணமில்லை என்று கூறியதாகவும்சிவபெருமான் சினந்து, தன் நெற்றிக்கண்ணைக் காட்டியதாகவும், நக்கீரர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று கூறியதாகவும், சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த வெப்பம் தாங்க முடியாமல் நக்கீரரின் உடலெல்லாம் புண் ஆனதாகவும், பின்னர் சிவபெருமான் நக்கீரரை மன்னித்ததாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.



பாடல் - 1

1.   குறிஞ்சிதோழி கூற்று

பாடியவர்: திப்புத் தோளார் (தீப்புத் தேளார், தீப்புத் தோளார், திட்புத் தோளார் என்றும் பாடபேதம் உண்டு). குறுந்தொகையில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றுதான். இப்பாடலைச் சேர்த்து, குறுந்தொகையில் 401 பாடல்கள் உள்ளன. அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் நானூறு பாடல்களே உள்ளன. குறுந்தொகையில் மட்டும் 401 பாடல்கள் உள்ளன. ஆகவே, இப்பாடல் இடைச்செருகலாக, பிற்காலத்தில் சேர்க்கப் பட்டிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் தன் காதலியைத் தேடி வருகிறான். வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் தலைவியைக் காணவில்லை. தலைவிக்குப் பதிலாக தலைவியின் தோழி அங்கே இருக்கிறாள். தலைவிக்காக அவன் கொண்டுவந்த செங்காந்தள் பூக்களைத் தோழியிடம் கொடுத்து, அவற்றைத் தலைவியிடம் கொடுக்குமாறு தலைவன் வேண்டுகிறான். அவன் மீது தலைவி கோபமாக இருக்கிறாள் என்பதை அவனுக்கு உணர்த்த விரும்பிய தோழி, ”எங்கள் நாட்டில் உள்ள குன்றுகளில் இது போன்ற பூக்கள் கொத்துகொத்தாக உள்ளன.” என்று கூறி, அவன் கொடுக்கும் பூக்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறாள்.

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே. 

அருஞ்சொற்பொருள்: செங்களம் = சிவந்த போர்க்களம்; அவுணர் = அசுரர்; தேய்த்தல் = அழித்தல்; கோல் = திரட்சி; கோடு = கொம்பு; செங்கோடு =சிவந்த கொம்பு; கழல்தொடி = உழலும் (அசையும்) வளையல்; சேஎய் = சேய் = முருகன்; காந்தள் = காந்தள் பூ; து = நிறைத்தல்.

உரை: போர்க்களம் இரத்தத்தால் சிவக்கும்படி அசுரர்களைக் கொன்று அழித்த சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்புகளை உடைய யானையையும், உழலவிடப்பட்ட வீரவளையலையும் உடைய முருகனுக்குரிய இம்மலையானது இரத்தம்போல் சிவந்த காந்தட்பூக்களின் குலைகளை உடையது.

விளக்கம்:  இப்பாடலில், முதற்பொருளாகக் குன்றும், கருப்பொருளாக முருகன், யானை, காந்தள் ஆகியவையும் குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.


தலைவனை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று என்று தலைவி விரும்புவதால், தலைவன் அளிக்கும் மலர்களை வாங்கிக்கொள்ளத்  தோழி மறுக்கிறாள் என்பதைப் புலவர்  மறைமுகமாகக் கூறுவதாகத் தோன்றுகிறது.