Monday, December 19, 2016

289. தலைவி கூற்று

289.  தலைவி கூற்று

பாடியவர்: பெருங் கண்ணனார்.
திணை: முல்லை.
கூற்று: காலங்கண்டு வேறுபட்டாள் எனக் கவன்ற தோழிக்கு, “காலத்து வந்திலரென்று வேறுபட்டேன் அல்லேன். அவரைப் புறத்தார் கொடியர் என்று கூறக் கேட்டு வேறுபட்டேன்என்று தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச்சென்ற பருவம் வந்தது. தலைவி உடல் மெலிந்து காணப்பட்டாள். அதைக் கண்ட தோழி, தலைவன் வராததால் தலைவி வருந்துகிறாள் என்று நினைத்து, “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து நீ வருந்தாதே!” என்று  தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  தலைவி, “நான் அவரை நினைத்து வருந்தவில்லை. தலைவர் என்னைப் பிரிந்து சென்றதால், இவ்வூர் மக்கள் என்மீது கவலை உடையவர் போல் நடிக்கின்றனர்இவர்கள் அவரைக் கொடியவர் என்று கூறுகிறார்கள் என்பதை அறிந்துதான் நான் வருந்துகிறேன்.” என்று கூறுகிறாள்  


வளர்பிறை போல வழிவழிப் பெருகி
இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழைபிசைந் தனையே மாகிச் சாஅய்
உழையர் அன்மையின் உழப்ப தன்றியும்
மழையுந் தோழி மான்றுபட் டன்றே
பட்ட மாரி படாஅக் கண்ணும்
அவர்திறத் திரங்கு நம்மினும்
நந்திறத் திரங்குமிவ் வழுங்கல் ஊரே. 

கொண்டு கூட்டு: தோழி!  வளர்பிறை போல வழிவழிப் பெருகிஇறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழைபிசைந்த அனையேம் ஆகி, சாஅய்உழையர் அன்மையின் உழப்பதன்றியும்மழையும் மான்று பட்டன்றுபட்டமாரி படாஅக் கண்ணும் இவ் அழுங்கல் ஊர், அவர் திறத்து இரங்கும் நம்மினும்நம் திறத்து இரங்கும். 

அருஞ்சொற்பொருள்: இறை = மணிக்கட்டு (முன்கை); எவ்வம் = துன்பம்; எவ்வ நோய் = துன்பம் தரும் நோய் (காம நோய்); குழை = தளிர்; சாஅய் = மெலிந்து; உழையர் = அருகில் இருப்பவர் (தலைவர்); உழப்பது = துன்புறுவது; மான்று = மயங்கி; மாரிமழை; பட்டமாரி = இப்பொழுது பெய்கின்ற மழை; படாஅக் கண்ணும் = பெய்யாத பொழுதும்; அழுங்குதல் மிக வருந்துதல்;

உரை: தோழி! வளர்பிறைத் திங்களைப்போல், மேலும்மேலும் பெருகி, என் முன்கையில் உள்ள வளையல்களை நெகிழச் செய்த காமநோயுடன், தளிரைக் கசக்கிப் பிசைந்தது போலாகி நான் மெலிந்தேன்தலைவர் பக்கத்தில் இல்லாததால், நாம் துன்பப்படுவது மட்டுமல்லாமல், காலமல்லாத காலத்தில் இந்த மழை மயங்கிப் பெய்யத் தொடங்கியது. இம் மழை பெய்வதற்கு முன்னரே, இந்த வருத்தம் மிகுந்த ஊரில் உள்ளவர்கள், அவருக்காக வருந்தும் நம்மைக் காட்டிலும், நமக்காக மிகவும் வருந்துகின்றனர்.


சிறப்புக் குறிப்பு: காலமல்லாத காலத்தில் பெய்கின்ற மழை என்று தலைவி எண்ணியதால், அது மயங்கிப் பெய்தது என்று கூறுகிறாள்.  

288. தலைவி கூற்று

288.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகனது வரவு உணர்ந்து, நம்பெருமான் நமக்கு அன்பிலன் என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகச் சென்றிருக்கிறான்.  “தலைவன் வருவதாகக் கூறிய பருவம் வந்தது. இன்னும் அவன் வரவில்லை. அவன் உண்மையில் நம்மீது  அன்புடையவனாக இருந்தால் இந்நேரம் வந்திருக்க வேண்டும்.” என்று தோழி தலைவனைப் பழித்துக் கூறினாள். ஆனால், தலைவன் பொருளோடு திரும்பிவந்துவிட்டான். அவன் வந்தது தலைவிக்குத் தெரியும். அது தோழிக்குத் தெரியாது. தலைவன் வந்ததால் மகிழ்ச்சி அடைந்த தலைவி, “தலைவன் மிகவும் அன்புடையவன். அவன் செயல்கள் அனைத்தும் இனிமையானவை. அவன் செயல்கள் துன்பம் விளைவித்தாலும் அவை இன்பமானவைதான்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

கறிவளர் அடுக்கத் தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்க னாடன்
இனிய னாகலி னினத்தி னியன்ற
இன்னா மையினு மினிதோ
இனிதெனப் படூஉம் புத்தே ணாடே. 

கொண்டு கூட்டு: கறிவளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன் இனியன். ஆகலின், இனத்தின் இயன்ற இன்னாமையினும், இனிது எனப் படூஉம் புத்தேள் நாடு இனிதோ

அருஞ்சொற்பொருள்: கறி = மிளகுக் கொடி; அருந்துதல் = உண்ணுதல்; அடுக்கம் = மலைப்பக்கம்; ஆங்கண் = அவ்விடத்தில்; முறி = தளிர்; கல் = மலை; இனம் = சுற்றம்; இயற்றுதல் = செய்தல்; புத்தேள் நாடு = சுவர்க்க உலகம்.

உரை: தோழி! மிளகுக் கொடி வளர்கின்ற மலைப்பக்கத்தில்தளிரை உண்ணுகின்ற குரங்குகள் ஒன்றாகத் திரண்டு இருக்கும்  பெரிய மலைகளையுடைய நாட்டின் தலைவன், பழகுவதற்கு இனிமையானவன். ஆதலின், சுற்றத்தார்களால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், இன்பம் நிறைந்தது என்று சொல்லப்படும் தேவருலகம், இனிமையுடையதாகுமோ?

சிறப்புக் குறிப்பு: இனத்தின் இயன்ற இன்னாமைஎன்று தலைவி கூறியதைத் தலைவனை மனதில் வைத்துக் கூறியதாகக் கொள்வது பொருத்தமானதாகத் தோன்றுகிறது. தலைவனின் செயல்களில் சில இன்னாதனவாக இருந்தாலும் முடிவில் அவை இனியனவாகவே முடியும் என்பது தலைவியின் கருத்து.


தேவருலகத்தில் உள்ளவர்கள் இன்பத்தை மட்டுமே நுகர்வதால் அவர்கள் இன்பத்தின் அருமையை அறிய மாட்டர்கள். தலைவனின் பிரிவினால் தலைவி துன்பத்தை அடைந்தாலும், அவன் வந்த பிறகு அவனோடு கூடும்பொழுது இன்பம் மிகுதியாக இருப்பதால்அன்புடைய தலைவனால் வந்த துன்பம் தேவருலகத்தில் உள்ளவர்கள் அனுபவிக்கும் இன்பத்தைவிட அதிகமானது என்றாள்

287. தோழி கூற்று

287.  தோழி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.
திணை: முல்லை.
கூற்று: பிரிவிடை வேறுபட்ட தலைவி நம்மைத் துறந்து வாரார் என்று கவன்றாட்குப் பருவம் காட்டித் தோழி, வருவரெனச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்; இனி வர மாட்டார்." என்று கவலைப்பட்ட தலைவியை நோக்கி, "இதோ கார்காலம் வந்தது; இனி அவர் உன்னைப் பிரிந்து இருக்க மாட்டார்; வருவர்." என்று தோழி கூறுகிறாள்.


அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லோ
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்
கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! முந்நால் திங்கள் நிறை பொறுத்து, அசைஇ, ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு, விசும்பு இவர்கல்லாது,  தாங்குபு புணரி, செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுது காதலர் இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: அம்ம - நான் சொல்லுவதைக் கேட்பாயக என்ற பொருளில் வந்த அசைச்சொல்; இன்னே = இப்பொழுதே; துறக்குவர் = துறந்து வாழ்பவர்; முந்நால் = பன்னிரண்டு (3 x 4 = 12); நிறை = நிறைவு; அசைஇ = தளர்ந்து, சோர்வுற்று; ஒதுங்கல் = நடத்தல்; செல்லா = இயலாத; பசும்புளி = புளியங்காய்; சூல் = கருப்பம்; கடுஞ்சூல் = முதற்சூல் (முதற் கருப்பம்); விசும்பு = ஆகாயம்; இவர்கல்லாது = ஏற முடியாமல்; தாங்குபு = தாங்கிக்கொண்டு; புணரி = ஒன்றுசேர்ந்து; செழு = செழுமையான; கலி = ஆரவாரம்; வானம் = மேகம்; ஏர்தரும் = சூழ்ந்து எழும்.

உரை: தோழி! நான் சொல்லுவதைக் கேட்பாயாக! பன்னிரண்டு மாதம் நிறை கருப்பம் தாங்கித் தளர்ந்து, நடக்க முடியாமல், புளியங்காயைத் தின்பதில் விருப்பமுடைய, முதன்முதலாகக் கருப்பம் அடைந்த மகளிரைப் போல, நீரை முகந்து கொண்டு, வானத்தில் ஏற முடியாமல், அந்த நீர்ச்சுமையைத் தாங்கிக் கொண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து, வளம் மிக்க பல மலைகளை நோக்கி, பெரிய முழக்கத்தோடு மேகங்கள் எழுகின்ற கார்ப் பருவத்தை, இப்பொழுது பார்த்த பிறகும், நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வாராமல் இருப்பாரோ? வருவர்.


சிறப்புக் குறிப்பு: மகளிர் பன்னிரண்டு மாதங்கள் கருவுற்றிருக்கக் கூடும் என்ற கருத்து பழங்காலத்தில் நிலவியது போலும்.

286. தலைவன் கூற்று

286.  தலைவன் கூற்று

பாடியவர்: எயிற்றியனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று – 1: இரந்து பின்னின்ற கிழவன், குறைமறாமற் (வேண்டுகோளை மறுக்காதவாறு)  கூறியது.
கூற்று – 2:  பாங்கற்குச் சொல்லியதூஉமாம்.
கூற்று விளக்கம் - 1: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் சந்தித்துப் பழகினார்கள். ஆனால், சில நாட்களாகத் தலைவியைக் காண முடியவில்லை. தலைவியை மீண்டும் சந்திக்க விரும்பிய தலைவன், தோழியின் உதவியை நாடுகிறான். தன்னுடைய வேண்டுகோளைத் தோழி மறுத்துவிடுவாள் என்று நினைத்த தலைவன், தனக்கும் தலைவிக்கும் ஏற்கனவே நெருங்கிய உறவு உண்டு என்பதைச் சுட்டிக் காட்டுகிறான்.
கூற்று விளக்கம் - 2: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் சந்தித்துப் பழகினார்கள். ஆனால், சில நாட்களாகத் தலைவியைக் காண முடியவில்லை. அதனால் தலைவன் வருத்தத்தோடு இருக்கிறான். தலைவனுடைய தோழன் அங்கு வருகிறான். அவன் தலைவனின் வருத்தத்திற்கு என்ன காரணம் என்று கேட்கிறான். ”நான் ஒரு பெண்மீது காதல் கொண்டேன். அவள் மிகவும் அழகானவள். இப்பொழுது அவளைக் காண முடியவில்லை. இனிமேல் நான் அவளை என் உள்ளத்தில் எப்பொழுதும் நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறேன் போலிருக்கிறது.”என்று தலைவன் தன் தோழனிடம் கூறுகிறான்.

உள்ளிக் காண்பென் போல்வன் முள்ளெயிற்
றமிழ்த மூறும்அஞ் செவ்வாய்க் கமழகில்
ஆர நாறும் அறல்போற் கூந்தல்
பேரமர் மழைக்கட் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே. 

கொண்டு கூட்டு: முள் எயிற்று அமிழ்தம் ஊறும்அம் செவ்வாய், அகில் கமழ் ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்பேரமர் மழைக்கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கு உள்ளிக் காண்பென் போல்வல்.

அருஞ்சொற்பொருள்: உள்ளி = நினைத்து; எயிறு = பல்; ஆரம் = சந்தனம்; அறல் = கருமணல்; அமர் = போர்; மழை = குளிர்ச்சி; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப் பெண்; மூரல் = பல்; முறுவல் = புன்சிரிப்பு; மதைஇய = செருக்குடன் கூடிய.

உரை: முள்போன்ற கூர்மையான பற்கள், அமிழ்தம் ஊறுகின்ற அழகிய சிவந்த வாய்,  அகிற் புகையும், சந்தனப் புகையும் மணக்கின்ற, கருமணலைப் போன்ற கரிய கூந்தல், பெரிதாகப் போரிடுவது போல் அமைந்த குளிர்ந்த கண்கள், புன்சிரிப்போடு கூடிய செருக்கான பார்வை  - இவை அனைத்தையும் உடைய குறிஞ்சி நிலப்பெண்ணாகிய என் தலைவியை, இனி நான் நினைவளவிலே மட்டும் காண்பேன் போலிருக்கிறது.

சிறப்புக் குறிப்பு: மூரல் முறுவல்என்றது பற்கள் சிறிது மட்டும் தோன்றுகின்ற புன்சிரிப்பைக் குறிக்கிறது.

முதற் கூற்றுக் கருத்து: தனக்கும் தலைவிக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதைத் தோழிக்கு உணர்த்துவதற்காகத் தலைவன் தலைவியின் அழகை விளக்கமாகக் கூறுகிறான். அவன் தலைவியோடு முன்னரே நன்கு பழகியவன் என்பதைத் தோழி அறிந்தால், தலைவியைச் சந்திப்பதற்குத் தோழி  உதவி செய்வாள் என்று அவன் எண்ணுகிறான்.


இரண்டாம் கூற்றுக் கருத்து: அழகிற் சிறந்த தன் காதலி அடைதற்கு அரியவள் என்று தலைவன் தோழனிடம் கூறுகிறான்

285. தலைவி கூற்று

285.  தலைவி கூற்று

பாடியவர்: பூதத் தேவனார்.
திணை: பாலை.
கூற்று: பருவம் கண்டு வேறுபட்ட இடத்து வற்புறுத்தும் தோழிக்கு வன்புறை எதிரழிந்து தலைமகள் சொல்லியது. (வன்புறை  - வற்புறுத்தல்எதிரழிதல்இசையாமல் வருந்துதல்).
கூற்று விளக்கம்: தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. அதை அறிந்த  தலைவி வருத்தத்தால் உடல் மெலிந்தாள். அப்பொழுது தோழி, "தலைவர் விரைவில் வருவர்; நீ பொறுமையாக இரு." என்று ஆறுதல் கூறுகிறாள். அதைக் கேட்ட தலைவி, "ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் நான் அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் இன்னும் வரவில்லை. ஆனால், அவர் வருவதாகக் கூறிய பருவம் இதுதான். அதில் ஐயமில்லை.”  என்று கூறுகிறாள்.

வைகல் வைகல் வைகவும் வாரார்
எல்லா எல்லை எல்லையுந் தோன்றார்
யாண்டுளர் கொல்லோ தோழி ஈண்டிவர்
சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ்
புன்புறப் பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை
ஊனசைஇ யொருபருந் திருக்கும்
வானுயர் பிறங்கல் மலையிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! இன்புற  புன்புறப் பெடையொடு பல் ஊழ்  பயிரி, இமைக்கண் ஏது ஆகின்றோ? ஞெமைத்தலை ஊன் நசைஇ ஒருபருந்து இருக்கும் வான் உயர் பிறங்கல் மலை இறந்தோர், வைகல் வைகல் வைகவும் வாரார்எல்லா எல்லை எல்லையும் தோன்றார்யாண்டுளர் கொல்? ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே!

அருஞ்சொற்பொருள்: வைகல் = நாள்தோறும், விடியல்; வைகவும் = விடியவும்; எல் = பகல்; ஈண்டு = இங்கே; ஊழ் = முறை; பல்லூழ் = பல் + ஊழ் = பலமுறை; புற = புறா; புன்புற = புல்லிய புற = மெல்லிய சிறகுகளை உடைய புறா; பெடை = பெண்புறா; பயிர்தல் = அழைத்தல்; இமைக்கண் = இமைப்பொழுதில்; ஏது = எத்தகைய; ஏதாகின்றோ = எத்தகைய இன்பத்தை அடைகிறது!; ஞெமை = ஒருவகை மரம்; தலை = உச்சி; நசைஇ = விரும்பி; பிறங்கல் = விளங்குதல்.

உரை: தோழி! இனிய ஆண் புறா, மெல்லிய சிறகுகளையுடைய பெண் புறாவொடு கூடுவதற்காகப் பலமுறை அழைத்து, இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை அடைகிறது! அங்கு உள்ள ஞெமை மரத்தின் உச்சியில், வழிப்போக்கர்களின் தசையை விரும்பி,  ஒருபருந்து  இருக்கின்ற, வானளவு உயர்ந்து தோன்றும் மலையைக் கடந்து சென்ற தலைவர், நாள் தோறும் விடியற் காலம் விடிந்து பகல் வரவும், அப்பகல் நேரத்தில் வாரார்; எல்லாப் பகலின் எல்லையாகிய இரவிலும் வாரார். இவர் எங்கே இருக்கின்றாரோ? இங்கே இவர் திரும்பிவருவதாகக் கூறிய பருவம் இதுதான்.

சிறப்புக் குறிப்பு: தலைவர் தலைவியின் அருகே இல்லாவிட்டாலும், அவர் தன்  நெஞ்சிற்கு அருகில் இருப்பதாக அவள் நினைப்பதால், தலைவி  “இவர்என்கிறாள்.

ஆண் புறா, பெண் புறாவை அழைத்து இன்புறுவதைத் தலைவரும் கண்டிருத்தல் கூடும். அதைக் கண்டும் தன்னை நினைந்து தலைவர் இன்னும் வரவில்லையே என்று தலைவி வருந்துகிறாள்

284. தோழி கூற்று

284. தோழி கூற்று

பாடியவர்: மிளைவேள் தித்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய் உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான்.  தன்னைவிட்டுத் தலைவன் பிரிந்து சென்றதைத் தவறாகப் புரிந்துகொண்ட  ஊர்மக்கள் தன்மீது பழிசுமத்துவதைக் குறித்துத் தலைவி வருந்துகிறாள்.  ”தலைவனின் செயலுக்காக நம்மைப் பழிப்பதால் என்ன பயன்? இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள்.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

பொருத யானைப் புகர்முகங் கடுப்ப
மன்றத் துறுகல் மீமிசைப் பலவுடன்
ஒண்செங் காந்தள் அவிழும் நாடன்
அறவ னாயினும் அல்ல னாயினும்
நம்மே சுவரோ தம்மிலர் கொல்லோ
வரையிற் றாழ்ந்த வால்வெள் ளருவி
கொன்னிலைக் குரம்பையி னிழிதரும்
இன்னா திருந்தவிச் சிறுகுடி யோரே
. 

கொண்டு கூட்டு: பொருத யானைப் புகர்முகம் கடுப்பமன்றத் துறுகல் மீமிசை ஒண்செங் காந்தள் பலவுடன் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்வரையில் தாழ்ந்த வால்வெள் அருவி கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்இன்னாது இருந்த இச் சிறுகுடியோர் நம் ஏசுவரோ? தம்மிலர் கொல்லோ

அருஞ்சொற்பொருள்: பொருத = போர் செய்த; புகர் = புள்ளி; கடுப்ப = போல; மன்றம் = பொதுவிடம்; துறுகல் = பாறை (குண்டுக்கல்); மீமிசை = மேலே; ஓண் = ஓளி பொருந்திய; அறவன் = அறவழியில் நடப்பவன்; ஏசுதல் = பழித்தல்; வரை = மலை; வால் = தூய; கொன் = அச்சம்; குரம்பை = குடிசை; இழிதல் = இறங்கி வருதல்.

உரை:  என் காதலனாகிய தலைவன், போர் செய்த யானையின், செங்குருதிப் புண்பட்ட, புள்ளியை உடைய முகத்தைப் போல், பொதுவிடத்தில் உள்ள குண்டுக்கல்லின்மேல், ஒளி பொருந்திய செங்காந்தள் மலர்கள் பல ஒருங்கே மலர்கின்ற நாட்டை உடையவன். அவன் அறவழியில் நடப்பவனானாலும், அவ்வாறு நடக்காதவனானாலும், மலையிலிருந்து தாழ்ந்து விழுகின்ற  தூய வெண்ணிறமான அருவியானது, இலைகளால்  வேயப்பட்ட கூரையுடன் கூடிய,  அச்சத்தைத் தரும், குடிலின் அருகில் இறங்கி ஓடுவதால்துன்பத்தோடு வாழும் இச்சிற்றூரில் உள்ளவர்கள்,  தலைவன் செயலுக்காக நம்மைப் பழிப்பார்களோ? அவர்கள் தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ?


சிறப்புக் குறிப்பு: தலைவன் திருமனத்திற்காகப் பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் திரும்பி வந்தவுடன், அறவழியைப் பின்பற்றித் தன் பெற்றோர்கள் சம்மதத்தோடு  தன்னை முறையாகத் திருமணம் செய்து கொள்வானோ அல்லது பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டால் மடலேற விரும்புவானோ என்பது தலைவிக்குத் தெரியாது. தலைவன் செய்யப்போகும் செயலுக்காகத் தன்னை ஏன் இவ்வூர் மக்கள் பழிக்கிறார்கள் என்ற சிந்தனை தலைவியை வருத்துகிறது. ”இவ்வூர் மக்கள் அறிவில்லாதவர்கள்.” என்று கூறித் தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கிறாள்.


போர் செய்ததால் யானையின் முகத்தில் உண்டான புண்ணும் இயல்பாக உள்ள புள்ளிகளும் பாறையின்மேல் மலர்ந்திருக்கும் செங்காந்தள் மலர்களுக்கு உவமை. பாறையில் மலர்ந்துள்ள செங்காந்தள் மலர்கள் யானையின் புண்களும் புள்ளிகளும் உள்ள முகம்போல் காட்சி அளிப்பதைப்போல், தலைவன் பிரிந்து சென்றிருப்பதை, அவ்வூரில் உள்ள மக்கள் தவறாகப் புரிந்துகொண்டு, தலைவிமீது பழிசுமத்துகிறார்கள் என்பது குறிப்பு. மலையிலிருந்து விழும் அருவி, இலைகளைக் கூரையாக வேய்ந்த குடிசையில் உள்ளவர்களுக்கு அச்சத்தைத் தருவது போல், அவ்வூர் மக்களின் ஓயாத பழிச்சொற்கள் தலைவிக்கு வருத்தத்தைத் தருகின்றன

283. தலைவி கூற்று

283. தலைவி கூற்று

பாடியவர்: பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை: பாலை.
கூற்று: தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்; அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவனைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்துவாள் என்று எண்ணிக் கவலைப்பட்ட தோழி, தலைவிக்கு  ஆறுதல் கூறுகிறாள். ”அவர் பிரிவுக்காக நான் வருந்தவில்லை. அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர்கள் செய்யும் கொடுமைகளை எண்ணி நான் அஞ்சுகிறேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி யென்றும்
கூற்றத் தன்ன கொலைவேல் மறவர்
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடை பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே. 

கொண்டு கூட்டு: தோழி! உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்; இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டி, என்றும் கூற்றத்து அன்ன  கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த படுமுடை பருந்து பார்த்திருக்கும் நெடுமூது இடைய நீர் இல் ஆறு சென்றனர், வாழி!

அருஞ்சொற்பொருள்: சிதைத்தல் = அழித்தல் (செலவழித்தல்); இரவு = யாசித்தல்; இளிவு = இழிவு; வன்மை = சொல்லியபடி செய்யும் மனவலிமை; கூற்றம் = எமன்; மறவர் = பாலைநில மக்கள் (வழிப்பறிக் கொள்ளையர்); அல்கி = தங்கி; வழங்குதல் = நடத்தல்; செகுத்தல் = வெட்டிக் கொல்லுதல் (அம்பெய்து கொல்லுதல்); படுதல் = உண்டாதல்; முடை = புலால்; மூது = முதுமை; ஆறு = வழி.

உரை: தோழி!  தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப்பட்ட பொருளைச் செலவு செய்து அழிப்பவர்கள் செல்வம் உடையவர்கள் என்று உலகத்தாரால் கருதப்பட மாட்டார்கள்.  தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார், மூதாதையோரின் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல், இரத்தலைக் காட்டினும் இழிவானது என்று, மனவலிமையோடு, நமக்குத் தெளிவாக எடுத்துக் கூறி,  நம் தலைவர் பொருள்தேடச் சென்றார். எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற, கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய வழிப்பறிக் கொள்ளையர், வழியில் தங்கி இருந்து (மறைந்திருந்து), வழிப்போக்கர்களைக்  கொன்றதனால் உண்டான புலாலைப் பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற,  நெடிய பழைய இடத்தை உடைய, நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே, தலைவர் சென்றார். அவர் வாழ்வாராக!


சிறப்புக் குறிப்பு: முன்னோர்கள் விட்டுச் சென்ற செல்வத்தைச் செலவழித்து வாழ்தல் பெருமைக்குரியது அன்று. தன் முயற்சியால் பொருள்தேடித் தான்பெற்ற செல்வத்தால் இல்லறத்தை நடத்துவது ஆண்மைக்கு அழகு என்று தலைவிக்கு எடுத்துக் கூறித் தலைவன் பொருள்தேடச் சென்றான். அதனால், தலைவன் பொருள் தேடச் சென்றதில் தலைவிக்கு உடன்பாடு உண்டு. ஆனால், அவன் சென்ற வழியில் கொலை செய்வதையும் கொள்ளை அடிப்பதையும் தொழிலாகக் கொண்ட ஆறலைக் கள்வர்களின் கொடுமையை நினைத்துத் தலைவி வருந்துகிறாள்.  

Sunday, December 4, 2016

282. தோழி கூற்று

282.  தோழி கூற்று

பாடியவர்: நாகம் போத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்:  கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறித் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். கார்காலம் வந்து விட்டது. ஆனால், இன்னும் தலைவன் வரவில்லை. தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள்.  “தான் வருவதாகக் கூறிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளைத் தலைவர் தான் சென்ற இடத்தில் கண்டிருப்பார். தான் இன்னும் வராததால், நீ வருத்தமாக இருப்பதை எண்ணிப் பார்த்து அவர் விரைவில் திரும்பி வருவார். நீ வருத்தப்படாதே!” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும்
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங் கவிழ்ந்த
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போலச்
சோர்குவ வல்ல என்பர்கொல் நமரே. 

கொண்டு கூட்டு: நமர், செஞ்சுவல் கலித்த  செவ்வி கொள் வரகின் கௌவை நாற்றின், கார் இருள் ஓரிலை நவ்வி மறி கவ்வி, நாள் கடன்கழிக்கும் கார் எதிர் தண்புனம் காணின், நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த,  வெண் கூதாளத்து  அம் தூம்பு புதுமலர்,
ஆர் கழல்பு உகுவ போலக் கைவளை சோர்குவ அல்ல என்பர் கொல்

அருஞ்சொற்பொருள்: செவ்வி = தக்க சமயம் (பருவம்); சுவல் = மேடு; கலித்த = தழைத்த; கௌவை = ஒன்றுடன் ஒன்று உராயும் ஒலி; நவ்வி = மான்; மறி = குட்டி; தண் = குளிர்ச்சி; புனம் = கொல்லை; சிலம்பு = மலை; கூதாளம் = ஒரு வகைச்செடி; தூம்பு = துளை; ஆர் = காம்பு; சோர்குதல் = சோர்தல்.
உரை: நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், செம்மண்ணை உடைய மேட்டின் மேல் தழைத்த, கதிர் ஈனும் பருவத்தை அடைந்து காற்றில் அசைந்து ஒலிக்கும் வரகின் நாற்றில் மிகுந்த கருமை நிறத்தை உடைய ஓரு இலையை மான்குட்டி கடித்துத்  தின்றுஅந்நாளுக்கான தன் பசியைத் தீர்த்துக்கொள்ளும் இடமாகிய கார்காலத்தை ஏற்றுக் கொண்ட குளிர்ந்த கொல்லையைக்  காண்பார். அங்குநீர்வளம் விளங்குகின்ற மலைப்பக்கத்தில், ஒன்றுபோல் மலர்ந்த, வெண்மையான கூதாளத்தின் துளையை உடைய அழகிய புதிய மலர்கள், காம்பிலிருந்து கழன்று உதிர்வதைப் போல, உன் கைவளையல்கள் கழன்று வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ? எண்ண மாட்டார்.
சிறப்புக் குறிப்பு: வரகு செம்மண்ணை உடைய முல்லை நிலத்தில் கார் காலத்தில் வளரும் பயிர் என்பதும், அதனை மான் மேயும் என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது. மான்குட்டி தன் இளமையினால் ஒரே ஒரு இலையை மட்டும் உண்டு தன் பசியைத் தீர்த்துக்கொண்டது.

வரகு விளைவதைக் கண்டு, தாம் மீள்வதாகக் கூறிய கார்ப்பருவம் வந்ததையும், கூதாளத்தின் மலர்கள் உதிர்வதைக் கண்டு, பிரிவினால் தலைவியின் கைவளையல்கள் நெகிழும் என்பதையும் உணர்ந்து, தலைவர் விரைவில் திரும்பி வருவார் என்று தோழி கூறுகிறாள்.

281. தலைவி கூற்று

281.  தலைவி கூற்று

பாடியவர்: குடவாயிற் கீரத்தனார்.          இவரும் இந்நூலின்  79 – ஆம் பாடலை இயற்றிய குடவாயில் கீரனக்கனார் என்பவரும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். கீரத்தனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இவர் குடவாயிலைச் சார்ந்தவராக இருந்ததால், இவர் குடவாயில் கீரத்தனார் என்று அழைக்கப்பட்டார். இவர் குடவாயிலைச் சார்ந்தவரானாலும், பல ஊர்களுக்கும் சென்று புரவலர் பலரையும் கண்டு வந்தார்.   ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவன் இவருக்கு நன்கு தெரிந்தவன். ஆகவே, அவன் இறந்ததால் புலவர் குடவாயில் கீரத்தனார் பெரும் வருத்தமுற்றுப் புறநானூற்றில் ஒருபாடலை இயற்றியுள்ளார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் (242) மட்டுமல்லாமல், அகநானூற்றில் பத்துப் பாடல்களும் (44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 385), குறுந்தொகையில் மூன்று பாடல்களும் (79, 281, 369), நற்றிணையில் நான்கு பாடல்களும் (27, 42, 212, 379) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
கூற்று: பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி பிரிவைப் பொறுத்துகொள்ள முடியாமல் வருந்துகிறாள். ” தலைவர் பொருள் தேடச் சென்றிருக்கிறார். தேடிய போருள் கிடைத்தவுடன், விரைவில் திரும்பி வந்துவிடுவார். அதுவரை, நீ வருந்தாமல், பொறுமையாக இருக்க வேண்டும்.” என்றி தோழி தலைவிக்கு ஆறுதல் கூற்கிறாள்.  "தலைவர் கொடிய பாலை நிலத்தை இன்னல்கள் இன்றிக் கடந்து சென்றாரோ இல்லையோ என்று நான் வருந்துகிறேன்.” என்று தலைவி கூறுகிறாள்.

வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம்
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. 

கொண்டு கூட்டு: சேயிழை! நமர், வெண்மணல் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோடு அத்த வேம்பின் அமலை வான்பூச் சுரி ஆர் உளைத்தலை பொலியச் சூடிக் குன்று தலை மணந்த கானம் சென்றனர் கொல்லோ?

அருஞ்சொற்பொருள்: பொதுளிய = தழைத்துப் பரவிய; பை = பசுமையான; கால் = அடிமரம்; கருக்கு = பனைமட்டை; கொம்மை = திரட்சி; போந்தை = பனை; குடுமி = மரஉச்சி; வெண்தோடு = குருத்தோலை; அத்தம் = பாலை நிலம்; அமலை = திரளை (தழைத்த); வான் = வெண்மை; சுரி = சுருண்ட; ஆர்தல் = பொருந்துதல்; உளை = ஆண் தலைமுடி; தலை மணந்த = இடையிடையே கொண்டிருத்தல்; கானம் = காடு; சேயிழை = சிவந்த அணிகலன்களை அணிந்த பெண். கொல்ஐயம்; , -  அசை நிலைகள்.
உரை: சிவந்த அணிகலன்களை அணிந்த தோழியே! நம் தலைவர், வெண்ணிற மணலில் தழைத்த, பசுமையான அடிப்பக்கத்தையும் கருக்கையும் உடைய, பருத்த பனைமரத்தின் உச்சியில் உள்ள வெண்மையான குருத்தோலையில் வைத்துக் கட்டிய, பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தின் தழைத்த வெண்மையான மலரை, சுருண்ட முடியை உடைய தன் தலையில் விளங்கும்படி சூடிக்கொண்டு, குன்றுகளை இடையிடையே உடைய காட்டைக் கடந்து சென்றனரோ?

சிறப்புக் குறிப்பு: வேம்பு பாலை நிலத்திற்கு உரியது. வேம்பின் பூவைக் கூறியதால் தலைவன் பிரிந்த காலம்  இளவேனிற் காலம் என்று தெரிகிறது. மலரைப் பனந்தோட்டில் வைத்துக் கட்டி அணிந்து கொள்வது மரபு என்று தெரிகிறது.  குன்று தலைமணந்த கானம் என்றது குறிஞ்சியும் முல்லையும் கலந்து இயல்பு திரிந்த பாலை நிலம் என்பதைக் குறிக்கிறது.

280. தலைவன் கூற்று

280. தலைவன் கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை:
குறிஞ்சி.
கூற்று : கழற்றெதிர்மறை. (கழறுதல் = இடித்துரைத்தல்; எதிர்மறை = மறுத்தல்)
கூற்று விளக்கம்: தலைவன் தலைவிமீது மிகுந்த காதலுடையவன். ஆனால், அவளோடு கூடி மகிழும்  வாய்ப்பு அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவன் மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறான். அவனுடைய நண்பர்கள் அவனை இடித்துரைத்து அறிவுரை கூறுகிறார்கள். அவர்களுக்குத் தலைவனின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது

கேளிர் வாழியோ கேளிர் நாளுமென்
நெஞ்சுபிணிக் கொண்ட அஞ்சி லோதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாகம்
ஒருநாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே. 

கொண்டு கூட்டு: கேளிர்! வாழியோ கேளிர்! நாளும் என் நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதிப் பெருந்தோள் குறுமகள் சிறுமெல் ஆகம் ஒருநாள் புணரப் புணரின் யான்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென். 

அருஞ்சொற்பொருள்: கேளிர் = நண்பர்கள்; நாளும் = எப்பொழுதும்; ஓதி = கூந்தல்; அஞ்சிலோதி = அம்+சில்+ஓதி = அழகிய சிலவாகிய கூந்தல்; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஆகம் = உடல், மார்பு.

உரை: நண்பர்களே! நீவிர் வாழ்க! நண்பர்களே!, எப்பொழுதும் என்னுடைய நெஞ்சத்தைத் தன்னிடத்திலே ஈர்த்துக் கொண்ட, அழகிய சிலவாகிய கூந்தலையும், பெரிய தோளையும் உடைய இளைய தலைவியினது, சிறிய மெல்லிய மேனியை,  ஒரு நாள் தழுவும் வாய்ப்புக் கிடைத்தால், அதன் பிறகு  நான் அரை நாளும் வாழ்வதை விரும்ப மாட்டேன்.

279. தலைவி கூற்று

279. தலைவி கூற்று 
பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவைப் பொறுத்துகொள்ள முடியாமல் தலைவி வருந்துகிறாள். ”அவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுமையாக இரு.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். தலைவி, “என்னால் அவர் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் அவருடைய பிரிவு என்னை மிகவும் வருத்துகிறது.” என்று தோழியிடம் கூறுகிறாள்

திரிமருப் பெருமை யிருணிற மையான்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண்மணி
புலம்புகொள் யாமத் தியங்குதொ றிசைக்கும்
இதுபொழு தாகவும் வாரார் கொல்லோ
மழைகழூஉ மறந்த மாயிருந் துறுகல்
துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகித்
திருந்திறைப் பணைத்தோள் உள்ளா தோரே. 

கொண்டு கூட்டு: மழை கழூஉ மறந்த மாஇரும் துறுகல்துகள்சூழ் யானையிற் பொலியத் தோன்றும் இரும்பல் குன்றம் போகித் திருந்துஇறைப் பணைத்தோள் உள்ளாதோர், திரி மருப்பு எருமை இருள்நிற மைஆன் வருமிடறு யாத்த, பகுவாய்த் தெள்மணி புலம்புகொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார் கொல்லோ

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கிய; மருப்பு = கொம்பு; மை = கரிய; மையான் = மை + ஆன் = எருமை; வரு = வளரும்; மிடறு = கழுத்து; யாத்த = கட்டிய; பகுவாய் = பிளந்த வாய்; தெண்மணி = தெளிவாய் ஒலிக்கும் மணி; புலம்பு = தனிமைத் துன்பம்; யாமம் = நடு இரவு; இயங்குதல் = நடத்தல்; கொல் அசைச்சொல்; மா = பெரிய; துறுகல் = பாறை (குண்டுக்கல்); துகள் = தூசி (புழுதி); இரு = பெரிய; திருந்துதல் = ஒழுங்காதல்; இறை = முன்கை; பணை = மூங்கில்.
உரை: தோழி , மழை கழுவுதலை மறந்த (மழையால் கழுவப்படாத) பெரிய குண்டுக்கல்,  புழுதி படிந்த யானையைப் போல் தோன்றுகின்ற, பல பெரிய மலைகளை நம் தலைவர்  கடந்து சென்றார். அத்தகைய வழியில் சென்றவர் எனது அழகிய முன்கையையும், மூங்கிலைப் போன்ற என் தோள்களையும்  நினைத்துப் பார்க்கவில்லை. முறுக்கிய கொம்பையும் இருள்போன்ற கரிய நிறத்தையும் உடைய எருமையினது, வளர்கின்ற கழுத்தில் கட்டப்பட்ட,  பிளந்த வாயை உடைய தெளிந்த ஓசையை உடைய மணியானது,  தனிமையைக் கொண்ட நடு இரவில், அவ்வெருமை நடக்கும் தோறும் ஒலிக்கின்ற,  இக் காலம் தாம் வருதற்குரிய காலமாக இருந்தும், அவர் வரவில்லை.

சிறப்புக் குறிப்பு: மழைகழூஉ மறந்த துறுகல்என்றது மழையின்றி வெப்பம் மிகுதியான பாலை நிலத்தைக் குறிக்கிறது. நள்ளிரவில் தலைவி உறங்காமல் இருப்பதால், தனிமையை நினைத்துபுலம்புகொள் யாமம்என்று கூறுகிறாள். யானை தன்மீது தானே புழுதியை வாரித் தூற்றிக் கொள்ளும் இயல்புடையது என்பது குறிப்பிடத் தக்கது.