128.
தலைவன் கூற்று
பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
திணை: நெய்தல்.
கூற்று -1: அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச்
சொல்லியது. கூற்று – 2: உணர்ப்புவயின்
(உணர்ப்பு = தெளிவிக்கப்படுகை) வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉமாம்.
கூற்று
விளக்கம்
– 1: தலைவியைக்
குறியிடத்தில் காணாமல் திரும்பும்போது தன் நெஞ்சை நோக்கி, “ நீ கிடைத்தற்கு அரிய ஒன்றை விரும்பி, அதை அடைய முடியாததால்
துன்பப்படுகிறாய்.”, என்று தலைவன் கடிந்துகொள்கிறான்.
இங்கு ”நெருங்கி” என்ற சொல்லுக்கு,
“இடித்துரைத்து” அல்லது “சினந்து” என்று பொருள்.
கூற்று
விளக்கம்
– 2: நெஞ்சே! இவளின் ஊடலுக்குக் காரணமாகக் கூறிய குற்றங்கள் என்னிடம் இல்லைஎன்று நான் தெளிவாகக்
கூறிய பிறகும் இவள் ஊடல் தணியவில்லை. இவள் அடைவதற்கு அரியவள்.
“உணர்ப்புவயின் வாரா ஊடல்” என்பது தலைவன் தன்னிடம்
குற்றமில்லை என்று தெளிவாக உணர்த்திய பிறகும், தலைவி ஊடலைத் தொடர்வதைக்
குறிக்கிறது.
குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.
கொண்டு
கூட்டு:
நெஞ்சே! குணகடல் திரையது பறைதபு நாரை, திண்தேர்ப் பொறையன்
தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு,
சேயள் அரியோள் படர்தி !
நோய்ப் பாலோய் நோயை!
நோய்ப் பாலோய் நோயை!
அருஞ்சொற்பொருள்: குணக்கு = கிழக்கு; திரை = அலை; பறை = சிறகு; தபு
= தப்பிய; பொறையன் = சேரர்களின் குடிப்பெயர்களுள் ஒன்று;
தொண்டி = சேரநாட்டில் இருந்த ஒரு கடற்கரை நகரம்;
அயிரை = அயிரைமீன்; அணவந்தல்
= தலையை நிமிர்த்துப் பார்த்தல்; படர்தல்
= நினைத்தல்; நோய் = துன்பம்;
பால் = ஊழ்வினை.
உரை: நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த
நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில்
உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப்
பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில்
உள்ளவளும் எளிதில் அடைய முடியாத அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான
ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.
சிறப்புக்
குறிப்பு:
தான் முன்
உண்ட பழக்கத்தால் அயிரைமீனுக்காக நாரை தலையை நிமிர்த்துப் பார்த்தாலும், பறப்பதற்குத் தேவையான சிறகின் வலிமயை இழந்ததாலும், அயிரைமீன்
நெடுந்தொலைவில் இருப்பதாலும் அது பெறுதற்கு அரியதாயிற்று. அதுபோல்,
முன்பு நீ இவளோடு பழகியதால், அளவளாவ விரும்பினாலும்
இவளது ஊடலை நீக்கும் பழைய வலிமயை இழந்தாய். இவளும் முன்பு இருந்ததைப்
போல் இப்பொழுது நெருக்கமாக இல்லை. ஆகவே, இவள் பெறுதற்கரியவள்.