Thursday, December 24, 2015

128. தலைவன் கூற்று

128. தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 19 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று -1: அல்லகுறிப்பட்டு  மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. கூற்று – 2: உணர்ப்புவயின் (உணர்ப்பு = தெளிவிக்கப்படுகைவாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம் – 1: தலைவியைக் குறியிடத்தில் காணாமல் திரும்பும்போது தன் நெஞ்சை நோக்கி, “ நீ கிடைத்தற்கு அரிய ஒன்றை விரும்பி, அதை அடைய முடியாததால் துன்பப்படுகிறாய்.”, என்று தலைவன் கடிந்துகொள்கிறான். இங்குநெருங்கிஎன்ற சொல்லுக்கு, “இடித்துரைத்துஅல்லதுசினந்துஎன்று பொருள்.

கூற்று விளக்கம் – 2:  நெஞ்சே! இவளின் ஊடலுக்குக் காரணமாகக் கூறிய குற்றங்கள் என்னிடம் இல்லைஎன்று நான் தெளிவாகக் கூறிய பிறகும் இவள் ஊடல் தணியவில்லை. இவள் அடைவதற்கு அரியவள். “உணர்ப்புவயின் வாரா ஊடல்என்பது தலைவன் தன்னிடம் குற்றமில்லை என்று தெளிவாக உணர்த்திய பிறகும், தலைவி ஊடலைத் தொடர்வதைக் குறிக்கிறது.

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே. 

கொண்டு கூட்டு: நெஞ்சே! குணகடல் திரையது பறைதபு நாரை, திண்தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு, சேயள் அரியோள் படர்தி !
நோய்ப் பாலோய் நோயை!

அருஞ்சொற்பொருள்: குணக்கு = கிழக்கு; திரை = அலை; பறை = சிறகு; தபுதப்பிய; பொறையன் = சேரர்களின் குடிப்பெயர்களுள் ஒன்று; தொண்டி = சேரநாட்டில் இருந்த ஒரு கடற்கரை நகரம்; அயிரை = அயிரைமீன்; அணவந்தல் = தலையை நிமிர்த்துப் பார்த்தல்; படர்தல் = நினைத்தல்; நோய் = துன்பம்; பால் = ஊழ்வினை.

உரை: நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப் பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில் உள்ளவளும் எளிதில் அடைய முடியாத  அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.


சிறப்புக் குறிப்பு:  தான் முன் உண்ட பழக்கத்தால் அயிரைமீனுக்காக நாரை தலையை நிமிர்த்துப் பார்த்தாலும், பறப்பதற்குத் தேவையான சிறகின் வலிமயை இழந்ததாலும், அயிரைமீன் நெடுந்தொலைவில் இருப்பதாலும் அது பெறுதற்கு அரியதாயிற்று. அதுபோல், முன்பு நீ இவளோடு பழகியதால், அளவளாவ விரும்பினாலும் இவளது ஊடலை நீக்கும் பழைய வலிமயை இழந்தாய். இவளும் முன்பு இருந்ததைப் போல் இப்பொழுது நெருக்கமாக இல்லை. ஆகவே, இவள் பெறுதற்கரியவள்

127. தோழி கூற்று

127. தோழி கூற்று

பாடியவர்:
ஓரம் போகியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 10 – இல் காணலாம்.
திணை: மருதம்.
கூற்று: பாணன் வாயிலாகப் (தூதாகப்) புக்கவழித் தலைமற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் பாணன் ஒருவனைத் தூதுவனாக அனுப்புகிறான். அத்தூதுவன், “தலைவன் மிகவும் சிறந்தவன்.” என்று கூறுகிறான். அவன் கூறுவதைப் பொய் என்று உணர்ந்த தோழி, “ உன் பாணன் பொய் சொல்லுகிறான். அதனால், பாணர்கள் அனைவரும் பொய்யர்கள் என்று கருதப்படுவார்கள்.” என்று கூறுகிறாள்.

குருகுகொளக் குளித்த கெண்டை அயலது
உருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
உள்ள பாணர் எல்லாம்
கள்வர் போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே. 

கொண்டு கூட்டு: குருகுகொளக் குளித்த கெண்டை அயலது உருகெழு தாமரை வான்முகை வெரூஉம் கழனியம் படப்பைக் காஞ்சி ஊர! ஒருநின் பாணன் பொய்யனாக,
நீ அகன்றிசினோர்க்கு உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர். 

அருஞ்சொற்பொருள்: குருகு = கொக்கு; உரு = நிறம்; கெழு = பொருந்திய; வான் = வெண்மை; முகை = மொட்டு; வெரூஉம் = அஞ்சும்; கழனி = வயல்; படப்பை = தோட்டம்; காஞ்சி = காஞ்சி மரம்; அகன்றிசினோர் = தலைவன் பிரிந்திருப்பதால் தனித்திருப்பவர்.

உரை: கொக்கு குத்தும்போது, அதன் வாயிலிருந்து தப்பிய கெண்டை மீன், நன்னிறமான தாமரையின் வெண்னிறமான மொட்டுக்களை கொக்கு என்று நினைத்து அஞ்சும். அத்தகைய வயல் சூழ்ந்த தோட்டத்தில் காஞ்சி மரங்கள் நிறைந்த மருதநிலத் தலைவனே! உன்னுடைய ஒருபாணன் பொய் பேசியதால், ஊரில் உள்ள பாணர்கள் எல்லோரும் கள்வர்களைப்போல் பொய்யர்கள் என்று உன்னைவிட்டுப் பிரிந்து தனித்து வாழ்பவர்கள் எண்ணுவார்கள்.

சிறப்புக் குறிப்பு:  நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருள் மூழ்கிய கெண்டைமீன்  மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை மொட்டை அந்த நாரையென்றே கருதியது, “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்ற பழமொழியைப் போன்றது.

நீ அகன்றிசினோர்என்றது தலைவன் பல மகளிரோடு நட்புடையவன் என்னும் கருத்தில் கூறப்பட்டது. கொக்குக்கு அஞ்சிய கெண்டை, அக்கொக்கைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை இல்லாததுமாகிய தாமரை மொட்டைக் கண்டு அஞ்சியதைப்போல்தலைவன் விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் பொய்யர் என்று கருதி வெறுத்தனர் என்பது குறிப்பு.

126. தலைவி கூற்று

126.  தலைவி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரது இயற்பெயர் மாசாத்தியார்.  இவர் ஒக்கூர் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடல் (279) மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் ( 324, 384), குறுந்தொகையில் ஐந்து பாடல்களையும் (126, 139, 186, 220, 275) இயற்றியுள்ளார்.
திணை:
முல்லை.
கூற்று: பருவங்கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன், கார்காலம் வந்த பிறகும் வரவில்லை. அவன் வராததால், தலைவி வருந்துகிறாள். தலைவனின் பிரிவினால் வருந்தும் தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.

இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவண ரோவெனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே தோழி நறுந்தண் காரே. 

கொண்டு கூட்டு: தோழி! இளமை பாரார் வளநசைஇச் சென்றோர் இவணும் வாரார். எவணரோ எனப் பெயல் புறந்தந்த பூங்கொடி முல்லைத் தொகுமுகை இலங்கு எயிறாக நறுந்தண் கார் நகுமே. 

அருஞ்சொற்பொருள்: வளம் = செல்வம்; நசை = விருப்பம்; இவண் = இங்கு; எவண் = எங்கு; பெயல்மழை; புறந்தந்த = (பாதுகாத்த) வளர்த்த; தொகுமுகைவரிசையாகத் தொகுக்கப்பட்டுள்ள மொட்டுக்கள்; இலங்குதல் = விளங்குதல்; எயிறு = பல்; நறுமை = மணம்; தண் = குளிர்ச்சி; கார் = கார்காலம்.

உரை: இளமையின் அருமையை எண்ணிப் பார்க்காமல், பொருள்மீது ஆசைப்பட்டுத் தலைவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றார். அவர் இன்னும் இங்கு வரவில்லை. மழையினால் நன்கு வளர்ந்த முல்லைக் கொடியின் வரிசையாகத் தொகுக்கப்பட்ட  அரும்புகளைத்  தன் ஓளியுடன் விளங்கும் பற்களாகக் கொண்டு, நறுமணம் மிக்க குளிர்ந்த கார்காலம்,  “அவர் எங்கு இருக்கிறாரோ?”  என்று  கேட்டு என்னைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது.
சிறப்புக் குறிப்பு: அணி என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள். உள்ளதை உள்ளவாறு கூறாமல் அதைச் சற்று அழகுபடுத்திக் கூறுவது இலக்கணத்தில் அணி என்று அழைக்கப்படுகிறது. இவ்வணி பலவகைப்படும்.

பண்பு , தொழில், பயன், உரு என்ற நான்றால் ஒருபொருளை மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவதற்குஉவமையணிஎன்று பெயர். ”பொன்னொத்த மேனிப் புயலொத்த தடக்கையான்என்று கம்பன் இராமனுடைய உடம்பைப் பொன்னுக்கும் கையைப் புயலுக்கும் ஒப்பிட்டுப் பாடுவது உவமை அணிக்கு எடுத்துக் காட்டு

உருவக அணி என்று ஒரு அணியும் உள்ளது. உவமைக்கும் பொருளுக்கும் வேறுபாடின்றி உவமையையேப் பொருளாகக் கூறுவது உருவக அணி. ”துன்பக் கடலகத்து அழுந்த வேண்டா” (சீவகசிந்தாமணி, விமலையாரிலம்பகம் -21)  என்று துன்பத்தையே கடலாகப் புலவர் உருவகப்படுத்திக் கூறியிருப்பது உருவக அணிக்கு எடுத்துக்காட்டு.

ஒருசெய்யுளில் புலவர் ஒருபொருளை உருவகம் செய்துவிட்டு, அதற்குத் தொடர்புடைய மற்றப் பொருட்களை அதற்கேற்ப உருவகம் செய்யாமல் விட்டுவிட்டால் அதற்குஏகதேச உருவக அணிஎன்று பெயர்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.                             ( திருக்குறள் – 505, தெரிந்து தெளிதல்)

என்ற குறளில் கருமத்தைக் கட்டளைக் கல்லாக உருவகம் செய்த புலவர் பெருமையையும் சிறுமையையும் பொன்னாகவோ பிற பொருளாகவோ உருவகம் செய்யாமல் விட்டுவிட்டார். இது ஏகதேச உருவக அணிக்கு எடுத்துக்காட்டு.


இப்பாடலில், “முல்லைத் தொகுமுகை இலங்கெயிறு ஆக நகுமே தோழி நறுந்தண் காரே.என்பதில் முல்லைப் பூக்களின் மொட்டுக்களைப் பெண்ணின் பற்களாக உருவகம் செய்த புலவர் கார்காலத்தை ஒருபெண்ணாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டதால், இது எகதேச உருவக அணி ஆகும்.

125. தலைவி கூற்று

125. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சிறைப்புறமாகச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியும் தலைவனும் தங்கள் காதலைக் களவொழுக்கத்தில் தொடர்ந்து வருகிறார்கள். தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல் காலம் தாழ்த்துகிறான். அதனால் தலைவி வருத்தமுற்றாள். ஒருநாள், தலைவன் தலைவியைக் காண வந்து, மறைவான ஓரிடத்தில் இருக்கிறான். அவன் வந்திருப்பதை அறிந்த தலைவி, தோழியை நோக்கி, “தலைவன் என் பெண்மை நலத்தை எடுத்துக்கொண்டான். ஆனால், நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.” என்று கூறித் தலைவன் தன்னை விரைவில் மணந்துகொள்ளாவிடில் தான் இறந்துவிடுவேன் என்பதைத் தலைவனுக்குக் குறிப்பால் தெரிவிக்கிறாள்.

இலங்குவளை நெகிழச் சாஅ யானே
உளெனே வாழி தோழி சாரல்
தழையணி அல்குல் மகளி ருள்ளும்
விழவுமேம் பட்டவென் நலனே பழவிறற்
பறைவலந் தப்பிய பைதல் நாரை
திரைதோய் வாங்குசினை யிருக்கும்
தண்ணந் துறைவனொடு கண்மா றின்றே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இலங்குவளை நெகிழச் சாஅயானே உளென். சாரல்
தழையணி அல்குல் மகளிருள்ளும், விழவுமேம் பட்ட என் நலன்,  பழவிறல் பறைவலம் தப்பிய பைதல் நாரைதிரைதோய் வாங்குசினை இருக்கும் தண்ணந் துறைவனொடு கண் மாறின்று. 

அருஞ்சொற்பொருள்: இலங்குதல் = விளங்குதல்; சாஅய் = மெலிந்து; சாரல் = மலைப்பக்கம்; அல்குல் = இடை (அடி வயிறு); விழவு = விழா; விறல் = வலிமை; பறை = பறவையின் இறகு; வலம் = வலிமை; தப்பிய = தவறிய (குறைந்த, இழந்த); பைதல் = துன்பம்; வாங்குதல் = வளைதல்; தண் = குளிர்ச்சி; சினை = கிளை; கண் மாறுதல் = இடம் மாறுதல்.

உரை: தோழி! நீ வாழ்க! எனது விளங்குகின்ற வளையல்கள் நெகிழும்படி நான் மெலிந்துள்ளேன். மலைப்பக்கத்தில் விளைந்த தழையை ஆடையாக அணிந்த மகளிர் அனைவரையும்விட, விழாக்கோலம் பூண்டதுபோல் சிறப்பாக, என் பெண்மையழகு இருந்ததுமுன்பு வலிமையோடு இருந்த தன்னுடைய இறகு இப்பொழுது வலிமையை இழந்து துன்பப்படுகின்ற நாரை, கடலலைகளைத் தொட்டுக்கொண்டிருக்கும் வளைந்த மரக்கிளையில் தங்கி இருக்கும் குளிர்ச்சி பொருந்திய அழகிய கடற்கரைத் தலைவனோடு என் பெண்மையழகு இப்பொழுது இடம் மாறிச் சென்றுவிட்டது.


சிறப்புக் குறிப்பு: வலிமை இழந்த நாரை, கடலலைகளைத் தொட்டுக் கொண்டிருக்கும் மரக்கிளையில் இருந்துகொண்டு, அலைகள் கொண்டுவரும் மீன்களைத் தனக்கு இரையாக உண்ணுவதைப்போல், தன் பெண்மையழகை இழந்த தலைவி, தலைவன் தானே வந்து தன் துயரத்தைப் போக்கித் தன்னை மணந்துகொள்வான் என்று எதிர்பார்க்கிறாள் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

124. தோழி கூற்று

124.  தோழி கூற்று

பாடியவர்:
பாலைபாடிய பெருங்கடுங்கோ. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 16 – இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: புணர்ந்துடன் போக்கினைத் தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லும் நிலையில் இருக்கிறான். தலைவியையும் உடனழைத்துச் செல்லுமாறு தோழி கூறுகிறாள். “நான் செல்லும் வழி கொடுமையானது.”, என்று கூறித் தலைவியை அழைத்துப் போகத் தலைவன் தயங்குகிறான். அதைக் கேட்ட தோழி, “ உன்னைவிட்டுப் பிரிந்திருந்தால் தலைவிக்கு வீடு இனிமையானதாகுமோ?” என்று தோழி கேட்கிறாள்.

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே.

கொண்டு கூட்டு: பெரும! உமணர் சேர்ந்து கழிந்து மருங்கின் அகன்றலை ஊர் பாழ்த்தன்ன, ஓமையம் பெருங்காடு இன்னா என்றிராயின், தமியோர்க்கு மனை இனியவோ?

அருஞ்சொற்பொருள்: உமணர் = உப்பு வணிகர்; கழிதல் = போதல் ; மருங்கு = பக்கம்; அகன்தலை = அகன்ற இடம்; பாழ்த்தன்ன = பாழானது போல் ; ஓமைஒரு வகை மரம்; இன்னா = கொடிய; தமியர் = தனிமையில் இருப்பவர்கள்.


உரை: தலைவ! உப்பு வணிகர்களான உமணர்கள் கூட்டமாகத் தங்கியிருந்து, பிறகு அங்கிருந்து அகன்று சென்ற அகன்ற இடம் பாழான ஊர்போல் தோன்றும். அதுபோல் தோற்றமளிக்கும்  ஓமை மரங்கள் நிறைந்த பெரிய காடுகள் உள்ளன. அந்த வழி மிகவும் கொடுமையானது என்று நீங்கள் கூறுகின்றீர் எனில், உங்களைவிட்டு வீட்டில் தனியாக இருந்தால், தலைவிக்கு வீடு இனிமையானதாக இருக்குமோ

123. தோழி கூற்று

123. தோழி கூற்று

பாடியவர்: ஐயூர் முடவனார். இவர் ஐயூர் என்னும் ஊரினர்.  இவர் முடவராக இருந்தார் என்பது, தாமான் தோன்றிக்கோனைச் சென்றடைந்து, வண்டியை இழுத்துச் செல்வதற்குக் காளைமாடுகள் வேண்டும் என்று இவர் பாடிய பாடலிலிருந்து (புறநானூறு - 399) தெரியவருகிறது.  இவர் ஆதன் எழினியையும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் பாடியுள்ளார்.  இவர் அகநானூற்றில் ஒருசெய்யுளும் (216), குறுந்தொகையில் மூன்று செய்யுட்களும் (123, 206, 322), நற்றிணையில் இரண்டு செய்யுள்களும் (206, 344) இயற்றியுள்ளார்.  இவர் பாடல்கள் அனைத்தும் மிகுந்த இலக்கிய நயமுடையவை.
திணை:
நெய்தல்.
கூற்று: பகற்குறியிடத்து வந்த தலைமகனைக் காணாத தோழி அவன் சிறைப்புறத்தானாதல் அறிந்து தலைமகட்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் கடற்கரைச் சோலையில் சந்தித்து மகிழ்வது வழக்கம். ஒருநாள் தலைவனைக் காணத் தலைவியும் தோழியும்  வருகிறார்கள். தலைவன் மறைவான இடத்தில் இருக்கிறான், முதலில், அவன் வரவில்லை என்று தோழி நினைக்கிறாள். பின்னர், அவன் வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்கிறாள். அவன் கேட்கவேண்டும் என்பதற்காக, “ தலைவர் வருவதற்குக் காலம் தாழ்த்தினால், மீன் பிடிக்கச் சென்ற நமது தமையன்மார் வந்துவிடுவார்கள். ஆகவே, நாம் இன்று தலைவரைப் பார்க்க முடியாது போலிருக்கிறதே!” என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.

இருள்திணிந் தன்ன ஈர்ந்தண் கொழுநிழல்
நிலவுக்குவித் தன்ன வெண்மணல் ஒருசிறைக்
கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப
இன்னும் வாரார் வரூஉம்
பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.

கொண்டு கூட்டு: நிலவுக் குவித்தன்ன வெண்மணல் ஒருசிறை இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழுநிழல் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப இன்னும் வாரார்.
பன்மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே வரூஉம் .

அருஞ்சொற்பொருள்: திணிதல் = செறிதல்; ஈர் = ஈரம்; தண் = குளிர்ச்சி; கொழு = செழித்த; சிறை = பக்கம்; கோடு = கிளை; புலம்பு = தனிமை; பன்மீன் = பலவகையான மீன்கள்; ஐயர் = தமையன்மார்; திமில் = மீன் பிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் படகு.

உரை: நிலவை எல்லாம் ஒன்றாகக் குவித்து வைத்ததைப் போல் உள்ள வெண்மணல் பரப்பின் ஒரு பக்கத்தில், இருள் செறிந்த ஈரமும் குளிர்ச்சியும் உள்ள கொழுமையான நிழலையுடைய, கரிய கிளைகளோடு கூடிய புன்னைமரங்கள் அடர்ந்த பூஞ்சோலையில் நாம் தனித்திருக்க, தலைவர் இன்னும் வரவில்லை. பலவகையான மீன்களை வேட்டையாடச் சென்ற நமது தமையன்மாரின் படகுகள் விரைவில் திரும்பி வந்துவிடும் போலிருக்கிறது.


சிறப்புக் குறிப்பு: தமையன்மார் வந்தால் தலைவனும் தலைவியும் அந்தப் பூஞ்சோலையில் சந்திக்க முடியாது என்பது குறிப்பு.

122. தலைவி கூற்று

122.  தலைவி கூற்று

பாடியவர்:
ஓரம் போகியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 10 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: தலைமகள் பொழுது கண்டு அழிந்தது (வருந்தியது).
கூற்று விளக்கம்: தலைவி தலைவனைப் பிரிந்திருக்கிறாள். பிரிவினால் தலைவி வருந்துகிறாள். ஒருநாள், மாலைப்பொழுது வந்ததைக் கண்டு துன்புற்று, “இம்மாலையோடு என் துன்பம் தீராது. இந்த மாலைக்குப் பிறகு நள்ளிரவும் வரப் போகிறதே!” என்று நினைத்து வருந்துகிறாள்.

பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே. 

கொண்டு கூட்டு: பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன குண்டுநீர் ஆம்பலும் கூம்பின. இனியே மாலை வந்தன்று; ஒருதான் அன்றே, கங்குலும் உடைத்தே. வாழியோ!

அருஞ்சொற்பொருள்: பை = உடல்வலிமை, பசுமை; புன் = புல்லிய (சிறிய); புறம் = முதுகு; குண்டு = ஆழம்; ஆம்பல் = அல்லி மலர் ; இனி = இப்பொழுது ; வந்தன்று = வந்தது; மாலை = இரவு ஆறு மணி முதல் பத்து மணி வரை ; கங்குல் = இரவு பத்து மணி முதல் இரண்டு மணி வரை; வாழியோ= வசையைக் குறிக்கும் குறிப்புமொழி (அதாவது, இங்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்) . எழுத்தோடும் சொல்லோடும் சேராமல் சொல்லினால் உணரப்படும் பொருளின் புறத்தே வேறு பொருள் உணர்த்துவதைத் தொல்காப்பியம் குறிப்புமொழிஎன்று கூறுகிறது.
உரை: வலிமையான கால்களை உடைய கொக்கின்  சிறிய முதுகைப் போல், ஆழமான நீரில் உள்ள ஆம்பல் மலர்களும் குவிந்தன. இப்பொழுது மாலைநேரம் வந்தது. இந்த மாலை மட்டும் தனித்து வராமல் நள்ளிரவும் வரப்போகிறதே! வாழ்க இந்த மாலைப்பொழுது!


சிறப்புக் குறிப்பு: ஆம்பல் மலர்கள் குவிந்ததற்குக் காரணம் நீர்வளம் குன்றியிருப்பது அன்று. ”குண்டு நீர் ஆம்பல்என்றதால் ஆம்பல் மலர்கள் குவிந்திருப்பதற்குக் காரணம் மாலைநேரம் மட்டுமே என்பது தெளிவு. மாலை நேரம் தன்னை வருத்துவது மட்டுமல்லாமல் இரவையும் கொண்டுவருவதால், தலைவிவாழியோ மாலைஎன்றது அவளுக்கு மாலைநேரத்தின்மீதுள்ள வெறுப்பைக் குறிக்கிறது.

121. தலைவி கூற்று

121.  தலைவி கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறி வரும் தலைமகன் செய்யுங்குறி பிறிதொன்றால் நிகழ்ந்தது. மற்று அவன் குறியை ஒத்தவழி அவ்வொப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்றாள். ஆண்டு அவனைக் காணாது, தலைமகள் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அவன் வரவைத் தலைவிக்குத் தெரிவிப்பதற்காக ஒரு ஒலி எழுப்புவது வழக்கம். ஒருநாள், தலைவனைச் சந்திப்பதற்குத் தலைவி, குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றாள். அங்கு, தலைவன் எழுப்பும் ஒலிபோல் ஒரு ஒலியைக் கேட்டாள். ஆனால் அது தலைவனால் எழுப்பப்பட்ட ஒலி அன்று. ஆகவே, அவள் ஏமாற்றத்துடன் திரும்பினாள். இன்று தலைவனைக் காணத் தலைவி வந்திருக்கிறாள். அவன் வந்ததற்கு அடையாளமான ஒலியைத் தான் கேட்டதாகத் தோழி தலைவியிடம் கூறுகிறாள்.  “முன்பு அவர் வராததனால் நான் பசலையுற்றேன். இப்பொழுது நீ கூறுவது உண்மையா?”, என்று தலைவி தோழியைக் கேட்கிறாள்.

மெய்யோ வாழி தோழி சாரல்
மைபட் டன்ன மாமுக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன்
தான்குறி வாயாத் தப்பற்குத்
தாம்பசந் தனஎன் தடமென் தோளே. 

கொண்டு கூட்டு: தோழி!  வாழி!  சாரல் மைபட்டன்ன மாமுக முசுக்கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகியாங்கு,  நாடன் தான் குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன என் தடமென்தோளே. மெய்யோ!

அருஞ்சொற்பொருள்: சாரல் = மலைப்பக்கம்; மா = கருமை; முசுக்கலை = ஆண்கருங்குரங்கு; ஆற்ற = தாங்கும்படி; தப்பல் = தவறுதல்; கோடு = கிளை; நாடன் = குறிஞ்சிநிலத் தலைவன்; குறி = அடையாளம்;  வாய்த்தல் = நன்கு அமைதல்; பசத்தல் = பசலையடைதல்; தட = பெரிய; மென் = மெல்லிய.

உரை: தோழி! நீ வாழ்க! மலைச் சாரலில் மையைப் பூசினாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு, தன்னைத் தாங்க முடியாத கிளையின் மேல் தவறாகத் தாவியதால், முறிந்த கிளையோடு தானும் கீழே விழுந்தது. அது போலத், தலைவன் செய்த தவற்றினால் ( சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு வந்து சரியான ஒலியை எழுப்பாததால்), என்னுடைய மெல்லிய தோள்கள் பசலையுற்றன. நீ கூறுவது மெய்யோ?

சிறப்புக் குறிப்பு: குரங்கு செய்த தவற்றினால் கிளை முறிந்ததுபோல், தலைவன் செய்த தவற்றினால் தான் பசலையுற்றதாகத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

Monday, December 7, 2015

120. தலைவன் கூற்று

120. தலைவன் கூற்று

பாடியவர்: பரணர். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 19-இல் காணலாம்
திணை: குறிஞ்சி.
கூற்று - 1: அல்லகுறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
கூற்று - 2:  இஃது இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன், பிரிந்த வழிக் கலங்கியதுமாம்.
கூற்று விளக்கம் : தலைவனும் தலைவியும் ஒருகுறிப்பிட்ட இடத்தில் சந்திப்பது வழக்கம். தலைவன் வந்தவுடன், ஒரு ஒலி எழுப்புவான். அதைக் குறிப்பால் உணர்ந்த தலைவி, அவன் வந்துவிட்டான் என்பதை அறிந்து அவன் இருக்கும் இடத்திற்குச் சென்று அவனோடு பழகுவாள். ஒருநாள், தலைவன் வருவதற்கு முன்னரே தலைவி குறிப்பிட்ட இடத்திற்கு வந்தாள். அங்கு சில ஒலிகள் கேட்டன. அவற்றைத் தலைவன் வழக்கமாக எழுப்பும் ஒலி என்று தலைவி தவறாக எண்ணி ஏமாந்தாள். அதனால், தலைவனைச் சந்திக்காமலேயே அவள் வீடு திரும்பினாள்அவர்கள் சந்திக்கும் இடத்திற்குத் தலைவன் வந்தான். அவன் வழக்கமாக எழுப்பும் ஒலிகளை எழுப்பினான். ஆனால், தலைவி அவனைக் காண வரவில்லை. தலைவியைக் காணததால், ஏமாற்றம் அடைந்த தலைவன், அவள் அடைதற்கு அரியவள் என்று தன் நெஞ்சுக்குக் கூறியதாக இப்பாடலின் சூழ்நிலையை எண்ணிப் பார்க்கலம்.  

இப்பாடலின் பின்னணியை மற்றொரு விதமாகவும் எண்ணிப் பார்க்கலாம். அதாவது, தலைவியைச் சந்த்தித்த பிறகு, வீடு திரும்பும் தலைவன், அவளைப் பிரிந்ததால் வருந்தி,  ”இனி இவளைக் காண்பது எங்ஙனம்!என்று மயங்கி, “இதுவரையிலும் நம்மோடு இனிமையாகப் பழகியவள் இனி அடைவதற்கு அரியவள்!” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாகவும் கருதலாம்.

இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு
அரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியா தோயே. 

கொண்டுகூட்டு: நெஞ்சே! இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு அரிது வேட் டனை; காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே. 

அருஞ்சொற்பொருள்: இல்லோன் = வறியவன்; காமுறுதல் = விரும்புதல்; வேட்டுதல் = விரும்புதல்; நல்லள் = நல்லவள் (நன்மை தருபவள்); அரியள் = அரியவள்.

உரை: நெஞ்சே, பொருளில்லாத வறியவன் இன்பத்தை விரும்பியதுபோல, பெறுதற்கரியதை நீ விரும்பினாய். நம் தலைவி, நமக்கு நன்மை தருபவளாதலை அறிந்ததுபோல, அவள் பெறுதற்கு அரியவள் என்பதை நீ அறியவில்லை.

சிறப்புக் குறிப்பு: பொருள் இல்லாதவன் தான் நினைத்ததைப் பெற்று மகிழ முடியாது. அதுபோல், தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் இருப்பதால், அவன் நினைத்த போதெல்லாம் தலைவியைக் கண்டு, அவளோடு கூடி மகிழ முடியாது என்பது குறிப்பு.

119. தலைவன் கூற்று

119. தலைவன் கூற்று

பாடியவர்: சத்திநாதனார்.   இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் ஓரிளம் பெண்ணைக் கண்டான். அவள் மீது காதல் கொண்டான். அவள்மீது அவன் கொண்ட காதலால், அவனுடைய தோற்றத்திலும் செயல்களிலும் காணப்பட்ட வேறுபாடுகளைத் தலைவனின் தோழன் கண்டான். “உனக்கு என்ன ஆயிற்று? நீ ஏன் இவ்வாறு தோற்றம் அளிக்கிறாய்?” என்று கேட்ட தோழனுக்குத் தலைவன் மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறுவெள் ளரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள் முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள்எம் அணங்கி யோளே. 

கொண்டுகூட்டு: இளையள், முளைவாள் எயிற்றள்வளையுடைக் கையள் சிறு வெள் அரவின் அவ்வரிக் குருளை கான யானை அணங்கியாங்கு எம் அணங்கியோளே.

அருஞ்சொற்பொருள்: அரவு = பாம்பு; அவ்வரி = +வரி; = அழகிய; வரி = கோடு; குருளை = குட்டி; கானம் = காடு; அணங்குதல் = வருத்துதல்; முளை = மூங்கிலின் முளை; வாள் = ஒளி; எயிறு = பல்.

உரை: இளமையை உடையவளும்,  மூங்கில் முளையைப் போன்ற ஒளிபொருந்திய பற்களை உடையவளும், வளையல்களை அணிந்த கைகளை உடையவளுமாகிய ஒருத்தி,  சிறிய வெள்ளிய பாம்பின், அழகிய கோடுகளையுடைய குட்டியானது, காட்டுயானையை வருத்தியதைப் போல, என்னை வருத்தினாள்.

சிறப்புக் குறிப்பு: தோற்றத்தால் அழகிய வரிகளை கொண்டதாக இருந்தாலும், பாம்புக் குட்டி தன் செயலால் கொடியது என்பது குறிப்பு.  ”இளைய பாம்புக்குட்டி, பிறருக்கு அடங்காது திரியும் யானையைத் தீண்டி வருத்தியது போல, இளமையை உடைய தலைவி பகைவரால் தோல்வியுறாத என்னை வருத்தினாள்.” என்று தலைவன் கூறுவதாகத் தோன்றுகிறது. பாம்பின் இளமை தலைவியின் இளமைக்கும், அதன் அழகிய வரிகள், தலைவியின் வளையல்களுக்கும் உவமைகள். பாம்பின் குட்டி தன் பற்களால் யானையை வருத்தியது போல் தலைவி தன் முறுவலால் (புன்சிரிப்பால்தன்னை வருத்தியதாகத் தலைவன் கூறுவதாகத் தோன்றுகிறது.


 முதன்முதலில் அவளைக் கண்டவுடன் அவள் இளையவள் என்பதையும், அவள் சிரிப்பால் அவள் அவனை விரும்புவதை உணர்த்தியபொழுது அவளுடைய ஒளிபொருந்திய பற்களையும், அவள் அருகில் வந்தவுடன் அவள் வளையல்களையும் கண்டதை முறையே தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

118. தலைவி கூற்று

118. தலைவி கூற்று

பாடியவர்: நன்னாகையார்.  இவரும் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்பவரும் ஒருவரே என்று கருதப்படுகிறது. இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 30-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்த வழித் தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்திருக்கிறான். திருமணத்திற்கு  காலம் நீடித்துகொண்டே இருக்கிறது. தலைவன்  வருவான் என்று ஒவ்வொரு நாளும் தலைவி எதிர்பார்க்கிறாள். ஒருநாள் மாலைப்பொழுது வந்தது. அன்றும் தலைவன் வராததால் ஏமாற்றத்தோடு இருந்த தலைவி, தன் வருத்தத்தைத் தோழியிடம் கூறுகிறாள்.  

புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நாரில் மாலைப்
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ எனவும்
வாரார் தோழிநங் காத லோரே. 

கொண்டுகூட்டு: தோழி! புள்ளும் மாவும் புலம்பொடு வதியநள்ளென வந்த நார்இல் மாலைப் பலர்புகு வாயில் அடைப்ப, கடவுநர் வருவீர் உளீரோ எனவும்  நம் காதலோர் வாரார்.

அருஞ்சொற்பொருள்: புள் = பறவை ; மா = விலங்கு ; புலம்பு = தனிமை; வதிதல் = தங்குதல்;  நள்என = செறிவாக ; நார் = இரக்கம்; கடவுநர் = வினவுவோர்.

உரை: தோழி! பறவைகளும் விலங்குகளும், தனிமையில் தங்க, ”நள்என்னும் ஓசையுடன் வந்த அன்பில்லாத மாலைக் காலத்தில், பலரும் புகுதற்குரிய வீட்டு வாயிலை அடைக்க எண்ணி, ”யாராவது உள்ளே வருவதற்கு இருக்கின்றீர்களோஎன்று வினாவுவார்   கேட்கவும், நம் தலைவர் வாரார் ஆயினர்.


சிறப்புக் குறிப்பு: பழங்காலத்தில், விடுதிகளோ சத்திரங்களோ இல்லை. ஆகவே, வழிப்போக்கர்கள், ஆங்காங்கே உள்ள வீடுகளின் புறத்திண்ணையில் தங்குவது வழக்கம். வீட்டுக்குரியவர்கள், இரவில் வாயிற் கதவை அடைப்பதற்குமுன் யாராவது திண்ணையிலே இருக்கிறார்களா என்று பார்த்து, அவர்களுக்கு உணவும், இரவு தங்குவதற்கு வசதியும் அளிப்பது வழக்கம். தலைவியின் வீட்டில், இரவில் கதவை அடைக்குமுன்யாரவது உள்ளே வருவதற்கு இருக்கின்றீர்களோ?” என்று வினவியபோது, தலைவன் இருந்தால், அவனும் வழிப்போக்கன் போல வீட்டுக்குள் வந்து தலைவியைச் சந்தித்திருப்பான். ஆனால் அவன் வரவில்லை. தலைவன் வராததால் தலைவி ஏமாற்றம் அடைந்தாள். அவள் தன் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்

117. தோழி கூற்று

117. தோழி கூற்று

பாடியவர்: குன்றியனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 50 –இல் காணலாம். திணை: நெய்தல்.
கூற்று: வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில்  ஈடுபட்டிருந்தனர். களவொழுக்கம் தொடர்வதால், ஊரில் அலர் தோன்றியது. ஆனால், அதைக் கண்டு தலைவன் வருந்தவில்லை. அவன் அஞ்சவும் இல்லை. சில நாட்களாக அவன் தலைவியைக் காணவரவில்லை. பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள். தலைவி தன் வருத்தத்தைக் கூறும்பொழுது, தலைவன் அவளைக் காணவந்து, ஒருமறைவிடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, அவன் காதுகளில் கேட்குமாறு, தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மாரி ஆம்ப லன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇயர் அண்டர்
கயிறரி யெருத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினும் அமைக
சிறியவும் உளவீண்டு விலைஞர்கை வளையே. 

கொண்டுகூட்டு: மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டுகண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் கயிறு அரி எருத்திற் கதழும் துறைவன் வாராதமையினும் அமைகவிலைஞர் கைவளையே சிறியவும் ஈண்டு உள.

அருஞ்சொற்பொருள்: மாரிமழைக் காலம்; ஆம்பல் = அல்லி மலர்; பார்வல் = பார்த்தல்; பருவரல் = துன்பம்; ஈர் = ஈரமான; ஞெண்டு = நண்டு; கண்டல் = தாழை; அளை = வளை; செலீயர் = செல்வதற்காக; அண்டர் = இடையர்; அரிதல் = அறுத்தல்; எருத்து = எருது; கதழுதல் = விரைதல்; துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்; விலைஞர் = விற்பவர் ; ஈண்டு = இங்கே.

உரை: தோழி! மழைக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கின் பார்வைக்கு அஞ்சிய, துன்பத்தையுடைய, ஈரமான நண்டு, தாழை வேரில் உள்ள வளைக்குள் செல்லுவதற்காக, இடையர் கட்டிய கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல, விரைந்து செல்லும் இடமாகிய கடற்கரை நிலத்தின் தலைவன், இங்கே வாராமல் இருந்தாலும் இருக்கட்டும். இங்கே, வளையல் விற்பவர்களிடம் சிறிய அளவுள்ள வளையல்களும் உள்ளன.
     

சிறப்புக் குறிப்பு: தலைவன்  வராததால் உன் உடல் மெலிந்தால் நீ முன்பு அணிந்த வளையல்கள் உனக்குப் பொருந்தா. ஆனால், அந்நிலையிலும், உன் மெலிவு பிறருக்குத் தெரியாமல் இருப்பதற்காக, உன் மெலிந்த கைகளுக்கு ஏற்ற சிறிய வளையல்களும் வளையல் விற்பவர்களிடம் உள்ளன.” என்பது திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் விரைவில்  செய்வான் என்ற நோக்கத்தோடு தோழி கூறியதாகத் தோன்றுகிறது.